கே.ரமேஷ்,
துாத்துக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: கடந்த சில
நாட்களாக, அனைவரிடத்தும் பேசுபொருளாக இருக்கிறார், அம்பேத்கர். அதற்கு மூலகர்த்தாக்களாக இருப்பது, காங்., கட்சியும், அதன் நிழல் தலைவருமான ராகுலும் தான்!மத்திய
உள்துறை அமைச்சர் அமித் ஷா, அம்பேத்கரை கேலி செய்து, எள்ளி நகையாடி
விட்டதாக, உருட்டோ உருட்டென்று உருட்டிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில்,
அம்பேத்கரை உதாசீனப்படுத்தி, ஒதுக்கி ஓரங்கட்டி வைத்ததுடன், அவரை
தேர்தலில் தோற்கடித்தது, நேருவும், காங்., கட்சியும் தான்!அவருக்கு
மதிப்பும், மரியாதையும் கொடுத்து, இன்றளவும் காபந்து பண்ணி, காப்பாற்றிக்
கொண்டிருப்பது முன்னாள் ஜனசங்கமும், இன்றைய பா.ஜ., கட்சியும் தான் என்றால்
மிகையில்லை!தன் பெற்றோர் வைத்த பீமாராவ் என்ற பெயரை துறந்து,
அம்பேத்கர் என்ற பெயரை அவர் சுவீகரிக்க காரணம், அம்பேத்கர் எனும் ஒரு
பிராமண ஆசிரியர். கல்வியின் மீது பீமாராவுக்கு இருந்த ஆர்வத்தைக் கண்டு,
அவருக்கு உறுதுணையாக இருந்த அந்த பிராமண ஆசிரியருக்கு நன்றி தெரிவிக்கும்
விதமாக, அவரது பெயரையே தனக்கு ஸ்வீகரித்துக் கொண்டார். இன்று, அம்பேத்கருக்காக ஆவேசப்படும் எத்தனை பேருக்கு இந்த உண்மை தெரியும்?கல்வி மீதான அவரது தாகத்தை தீர்க்க, மேற்படிப்புக்காக அமெரிக்காவிற்கு செல்ல உதவியது நேருவோ, காங்., கட்சியோ அல்ல; பரோடா மஹாராஜா!உண்மையை
சில நாட்கள் மறைக்கலாம்; ஒளித்தும் கூட வைக்கலாம். ஆனால், அந்த உண்மைக்கு
கல்லறை கட்டிவிட முடியாது. உண்மை ஒருபோதும் உறங்கிக் கொண்டே இருக்காது.
ஒரு நாள் பீறிட்டு வெடித்துக் கிளம்பும் என்பது உண்மையாகி விட்டது!எந்த காங்., கட்சியால், அம்பேத்கரின் அடையாளங்கள் மறைக்கப்பட்டதோ,
அக்கட்சி தலைவராலேயே இப்போது நாடெங்கும், காங்., கட்சியின் துரோகங்கள்
அலசப்படுகிறது! அரசியல் விஞ்ஞானிகளின் அலப்பறைகள்!
ஆர்.மகேசன், அருப்புக்கோட்டையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அ.தி.மு.க., ஆட்சியில், தெர்மாகோல் வைத்து, வைகை அணையின் தண்ணீருக்கு மூடி போட்ட விஞ்ஞானி, செல்லுார் ராஜு. இவரைத் தொடர்ந்து, தமிழக அரசியலில் தற்போது ஏகப்பட்ட விஞ்ஞானிகள்... சமீபத்தில், திராவிட மாடல் ஆட்சியில் கட்டப்பட்ட ஆற்றுப்பாலம் பயன்பாட்டுக்கு வந்த மூன்றே மாதத்தில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் கொடுத்த விளக்கம் இருக்கிறதே... புல்லரிக்க வைத்து விட்டது. தரையில் கட்டப்படும் பாலத்திற்கும், ஆற்றின் குறுக்கே கட்டப்படும் பாலத்திற்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறதாம்; ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதால், பாலம் இடிந்து போகுமாம்... 16 கோடி ரூபாயை விழுங்கி, ஏப்பம் விட்ட பின், தன் அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளார், பொதுப் பணித்துறை விஞ்ஞானி, ஏ.வ.வேலு.அமைச்சர் அவர்களே... மதுரையில், ஏ.வி., பாலம் என அழைக்கப்படும், ஆல்பர்ட் விக்டர் பாலம் உள்ளது. வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள இப்பாலம், 134 ஆண்டுகளைக் கடந்தும், இன்றும் கம்பீரமாகக் காட்சியளிப்பது உங்களுக்குத் தெரியுமா? கடந்த 1889- டிசம்பரில் திறக்கப்பட்ட இப்பாலம், 100 ஆண்டுகளுக்குத்தான் உறுதியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 135-ம் ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது என்பதை அறிவீர்களா? ஆடத் தெரியாதவள், மேடை கோணல் என்றாளாம்!திராவிட மாடல் ஆட்சியின் அடுத்த விஞ்ஞானி, சட்டத் துறை அமைச்சர் ரகுபதி. நீதிமன்ற வளாகத்திலேயே ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரோ, 'ஊருக்குள் ஒருவரையொருவர் வெட்டிக் கொலை செய்து கொள்வதை, அரசும், காவல்துறையும் எப்படி தடுக்க முடியும். சட்டம் - ஒழுங்கு பிரச்னைக்கும், இதற்கும் சம்பந்தமே இல்லை' என்று கூறியுள்ளார். இனிமேல் தமிழகத்தில் கொலைக் குற்றத்தில் ஈடுபடுவோர், காவல் துறைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து விட்டு, கொலை செய்யப் போக வேண்டும் போல் இருக்கு! இந்த சட்ட விஞ்ஞானி போல், 'நீட்' விஞ்ஞானி ஒருவர் இருக்கிறார்; அவர் தான், துணை முதல்வர் உதயநிதி. 'நீட் விலக்கு ரகசியம் என்னாச்சு?' என்று கேட்டவர்களிடம், 'வழக்கறிஞர்களை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பி, சட்டப் போராட்டம் நடத்துவது தான், 'நீட்' தேர்வை ஒழிக்கும் ரகசியம்' என, தன் அளப்பறியா கண்டுபிடிப்பை, இரு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டபோது, அவரது அறிவுத் திறனை பார்த்து தமிழகம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவும் வியந்து போனது. இப்படி, இன்னும் பல விஞ்ஞானிகள் திராவிட மாடல் ஆட்சியில் உள்ளனர். இத்தகைய புத்திமான்களின் ஆட்சியில், தமிழகம் கடன் வாங்குவதில், முதல் மாநிலமாக இருப்பதில் வியப்பு ஏதும் இல்லையே! பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்!
ச.ப.சங்கரநாராயணன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தமிழகத்தில், திராவிட மாடல் ஆட்சியில், தினமும் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் என, சட்டம் - ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. கூடவே, கழக கண்மணிகளின் அட்டகாசம் வேறு!இதோ... அண்ணா பல்கலை மாணவி ஒருவர், வளாகத்திற்குள்ளேயே பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி ஞானசேகரன், தி.மு.க., உடன்பிறப்புகளில் ஒருவர்!இவர் மீது, இதுபோன்ற குற்ற வழக்குகள் இருந்தும், சிறிதும் பயமின்றி இக்காரியத்தை செய்துள்ளார் என்றால், திராவிட மாடல் அரசின், சட்டம் - ஒழுங்கு மீது அவ்வளவு நம்பிக்கை! அதுசரி... தங்கள் கட்சி கூட்டத்தின் பாதுகாப்பு பணிக்கு வந்த பெண் காவலரிடம் சில்மிஷம் செய்தவர்களையே தட்டிக் கேட்காமல், தடவிக் கொடுத்தது தானே, இந்த அரசு. இதில், பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என, பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசு என்று மார்தட்டுகிறார், முதல்வர்.இலவசமாக பயணம் செய்தால் மட்டும் போதுமா... பாதுகாப்பு வேண்டாமா? முதலில், சட்டம் - ஒழுங்கை சீர்படுத்தி, மது மற்றும் போதைப் பொருட்கள் புழக்கத்தை ஒழித்து, பெண்கள் சுதந்திரமாக நடமாடும் பாதுகாப்பு மிகு மாநிலமாக மாற்றுங்கள்; அதன்பின், உங்கள் நிர்வாகத்தை நினைத்து பெருமைப்படலாம்!அரசுப் பேருந்துகளில், மழைக் காலத்தில் குடை பிடித்து பயணம் செய்ய வேண்டிய நிலை உள்ளது; பல பஸ்களில் இருக்கைகளே இல்லை. இதில், ஒவ்வொரு மாநகர - புறநகர் பேருந்துகளில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி அழகு பார்க்கும் அரசின் செயலை நினைத்தால், சிரிப்பு தான் வருகிறது. தமிழக முதல்வரே... நாங்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது இலவசங்களை அல்ல... மது மற்றும் போதைப் பொருட்களை ஒழித்து, இளைய சமுதாயத்திற்கு வளமான எதிர்காலத்தையும், மகளிருக்கான பாதுகாப்பையும் உறுதிப்படுத்துங்கள்!