உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: நவ. 18

இது உங்கள் இடம்: நவ. 18

தமிழகத்தின் கடனை அடைக்க முடியாது!

ஆர்.வித்யாசாகர், அருப்புக்கோட்டை, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: ‘மது விற்பனையை ஆண்டுதோறும் சாதனையாக்கி விடுகின்றனர்; இது வெட்கப்பட வேண்டிய விஷயம்’ – இப்படி கூறியிருப்பது ஒரு சமூக ஆர்வலரோ அல்லது எதிர்க்கட்சியினரோ அல்ல; மதுவிலக்கு துறையின் அமைச்சர் தான் இவ்வாறு கூறியுள்ளார். இதில், வெட்கப்பட வேண்டியது மதுக்கடைகளை திறந்து வைத்த ஆட்சியாளர்களா அல்லது இவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களா என்பதை அமைச்சர் வெளிப்படையாக கூறியிருக்கலாம்! தமிழகத்தில் தீபாவளியன்று, 14 கொலைகள் நடந்துள்ளன. அத்தனையும் மதுபோதையால் நடந்திருப்பதாகக் கூறப் படுகிறது. இந்நிலையில், ‘போதை ஒழிக்கப்பட்டு, சட்டம் – ஒழுங்கு மேம்படுத்தப்படும்’ என்று கூறியுள்ளார், மற்றொரு அமைச்சர். குற்றச்செயல்கள் அதிகரித்து, சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுப் போனதற்கு மதுதான் காரணம் என்பது ஆட்சியாளர்களுக்கு தெரியாதா? மதுக்கடைகளை மூடாமல் போதையை ஒழித்து, சட்டம் – ஒழுங்கை நிலைநாட்டுவது எப்படி என்ற ரகசியத்தையும் அமைச்சர் கூறியிருந்தால் நன்றாக இருக்கும்! இப்படித் தான் பல அமைச்சர்கள் வாய்ச்சொல் வீரர்களாக வலம் வந்துகொண்டிருக்கின்றனரே தவிர, செயலில் வேகம் இல்லை! அதுமட்டுமல்ல... இலவசங்கள் வழங்குவதில் இரண்டு திராவிடக் கட்சிகளின் கொள்கையை இம்மி பிசகாமல் பின்பற்றி வருகிறது, த.வெ.க., அரசு. அரசுக்கு நேரடியாக வருவாய் பெற்றுத்தரும் போக்குவரத்து, மின்சாரம் ஆகிய இரண்டு முக்கியமான துறைகளும் ஆட்சியாளர்களின் நிர்வாகத் திறன் இன்மையாலும், இலவசத் திட்டங்களாலும் அதல பாதாளத்தில் இருக்கின்றன. த.வெ.க., ஆட்சி தமிழகத்தின் நிதிநிலையை, வெள்ளை அறிக்கையாக வெளியிட்டபோது, ‘தமிழகத்தின் கடனை இன்னும் ஐம்பது ஆண்டுகள் ஆனாலும் அடைக்க முடியாது’ என்று கூறியிருந்தார், நிதித்துறைச் செயலர். இலவசத் திட்டங்கள் இப்படி தொடர்ந்து கொண்டே போனால், ஐம்பது அல்ல; ஐநுாறு ஆண்டுகள் ஆனாலும், தமிழகத்தின் கடனை அடைக்க முடியாது!

lll

நுாதன நுாலக கொள்ளை!

ஆர்.சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: ஓர் ஊரில், ஒரு ராஜா இருந்தார். அவர் ஊர் மக்களிடம், ‘நம் ஊர் கோவிலில் கும்பாபிேஷகம் நடைபெற உள்ளது; வீட்டுக்கு ஒரு சொம்பு பால் தர வேண்டும்’ எனக் கூறி, பொது இடத்தில் ஒரு பெரிய அண்டாவை வைத்தார். மக்கள் ஒவ்வொருவராக அண்டாவில் பால் ஊற்றி சென்றனர். கும்பாபிேஷகம் அன்று அண்டாவை திறந்து பார்த்த ராஜா, அதிர்ந்து போனார். காரணம், அண்டா முழுதும் தண்ணீர் இருந்ததே தவிர, பால் இல்லை. இது எப்படி சாத்தியமாகும் என்று எண்ணிய ராஜா, ஒவ்வொருவராய் கூப்பிட்டு விசாரித்தாராம். அப்போது தான் உண்மை வெளிவந்தது. அதாவது, ‘ஊரில் இருக்கும் அனைவரும் பால் ஊற்றுகின்றனர்; நாம் ஒரு சொம்பு தண்ணீரை ஊற்றினால் தெரியவா போகிறது’ என்று எண்ணியே, ஒவ்வொருவரும் பாலுக்கு பதில் தண்ணீரை ஊற்றியுள்ளனர். இந்தக் கதையைப் போல் தான், கோவை ஈ.வெ.ரா., நுாலகத்தில் கைவரிசையை காட்டியுள்ளனர், ஊழல்வாதிகள். பொதுவாகவே, இக்கால இளைஞர்களுக்கு படிக்கும் பழக்கம் வெகுவாக குறைந்து விட்டது. 40 ஆண்டுகளுக்கு முன், படித்தவர்களின் ஒரே பொழுது போக்காக புத்தகங்கள் இருந்தன; பல்வேறு புத்தகங்களை தேடிப் படித்து, தங்கள் அறிவை வளர்த்துக் கொண்டனர். இன்றோ, இளைஞர்கள் மொபைல் போனுக்குள் மூழ்கி உள்ளனரே தவிர, புத்தகங்களை கையால் கூட எடுப்பது இல்லை. இதையெல்லாம் கணக்கிட்டு தான், ‘யார் இந்த புத்தகங்களை படிக்கப் போகின்றனர்’ என்று எண்ணி, போலியான எழுத்தாளர், பதிப்பகங்கள் பெயரில், போலியான புத்தகங்களை அச்சிட்டு, அறிவு கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நுாதன நுாலக கொள்ளையில் ஈடுபட்டோர் அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி, அவர்கள் முகத்திரையை கிழிக்க வேண்டும் என்பதே, புத்தகங்களை நேசிப்போரின் வேண்டுகோள்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை