உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இது உங்கள் இடம்: நவ. 27

இது உங்கள் இடம்: நவ. 27

நடவடிக்கை எடுக்க முடியும்!

எஸ்.இளையராஜா, மின்வாரிய செயற்பொறியாளர், சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: இப்பகுதியில், நவ., 19ம் தேதி, ‘மின் கட்டண கொள்ளை நிற்குமா?’ என்ற தலைப்பில், வாசகர் ஒருவர், கீழ் மற்றும் மேல் தளம் கொண்ட தன் வீட்டில், பல ஆண்டுகளாக தனித் தனி மின் இணைப்பு பெறப்பட்டு, மின் கட்டணம் கட்டி வந்த நிலையில், 2025ல் இரண்டையும் ஒரே இணைப்பின் கீழ் கொண்டு வந்த பின், மின் கட்டணம் அதிகரிப்பதாக கூறி, ‘ஒரே மின் இணைப்பு வேண்டாம்’ என்று தன் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ஒரே குடியிருப்புக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் பெற்ற வளாகங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அப்போது, ஒரே குடியிருப்பில் ஒன்றுக்கு மேற்பட்ட மின் இணைப்புகள் இருந்தால், ஒரே மின் இணைப்பாக கணக்கில் கொண்டு, கணக்கீடு செய்ய கணினியில் மாற்றம் செய்யப்பட்டது. வாரிய விதிமுறைகள்படி, ஒரு குடியிருப்புக்கு ஒரு மின் இணைப்பு தான் வழங்க முடியும். ஒன்றுக்கு மேல் வழங்கி இருந்தால் கூடுதல் இலவச மின்சாரம், பயன்பாடு வரம்பு சலுகைகள் ஆகியவற்றால் வருவாய் இழப்பு ஏற்படும்.

வாசகரின் வீட்டு மின் பயன்பாடுகள் தனித் தனியாக இருந்தால், அவரு டைய பிரிவு அலுவலகத்தில் உரிய ஆவணங்களுடன் மனு அளித்தால், நடவடிக்கை எடுப்பர்!

lll

சட்டத்திற்கு மேலானது அல்ல அரசு!

ஏ.பி.திருவடி, சென்னையில் இருந்து அனுப்பிய, ‘இ – மெயில்’ கடிதம்: திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரம், அரசியலமைப்புச் சட்டம் குறித்த கேள்வியை எழுப்புகிறது. ஒரு நீதிமன்றத்தின் தீர்ப்பில் உடன்பாடு இல்லை என்பதற்காக, மாநில அரசு, அந்த நீதிமன்ற உத்தரவைப் புறக்கணிக்கலாமா? சட்டத்தின் ஆட்சி நிலைபெற்றுள்ள ஒரு ஜனநாயக நாட்டில், நீதிமன்ற உத்தரவுகளுக்கு ஒவ்வொரு குடிமகனும், அரசியல் அமைப்புகளும், மாநில அரசுகளும் கட்டுப்பட வேண்டியவை. நீதிமன்றத்தின் உத்தரவில், அரசுக்கு உடன்பாடு இல்லையென்றால், மேல்முறையீடு செய்யவோ அல்லது மறுஆய்வு கோரவோ அதற்கு உரிமை உண்டு. ஆனால், அந்த உத்தரவு திருத்தப்படும் வரை அல்லது இடைக்காலத் தடை விதிக்கப்படும் வரை, அதற்குக் கீழ்ப்படிவது, அரசியலமைப்புச் சட்டப்படி அரசின் கடமையாகும். நீதிமன்ற உத்தரவுகளை, தனக்கு விருப்பமான வகையில் மட்டும் அமல்படுத்தும் அதிகாரத்தை, மாநில அரசுகள் எடுத்துக் கொண்டால், அதற்கு பெயர் ஜனநாயகம் அல்ல; சர்வாதிகாரம்! இன்று, திருப்பரங்குன்ற தீபத் துாணில் தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்னையில் சட்டத்தை மீறிய அரசு, நாளை அடிப்படை உரிமைகள், சொத்துரிமை, மதச் சுதந்திரம் அல்லது தனிமனித சுதந்திரம் தொடர்பான வழக்குகளிலும் இதே அணுகுமுறையை பின்பற்றலாம். நீதிமன்ற உத்தரவுகளில் எதை கடைப்பிடிக்க வேண்டும்; எதைப் புறக்கணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம், எந்த அரசுக்கும் கிடையாது. நீதிமன்ற அவமதிப்பு நிரூபிக்கப்படும் சூழலில், உச்ச நீதிமன்றம் இந்த விவகாரத்தின் முழுப் பின்னணியையும் ஆராய்ந்து, இதற்கு பொறுப்பான அனைவர் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இது, வெறும் அரசியல் வேறுபாடுகள் பற்றிய விவகாரமோ, மதம் சார்ந்த விவாதமோ அல்ல. இது நீதித்துறையின் அதிகாரத்தையும், அரசியலமைப்பு ஒழுங்கையும் பாதுகாப்பது தொடர்பான அடிப்படையான பிரச்னை. சாதாரண மக்களுக்கு நீதித்துறையின் மீது இருக்கும் நம்பிக்கை, இதுபோன்ற அரசின் செயல்பாடுகளில் சிதைவுற்று விடக் கூடாது. அரசின் அதிகாரமும், செல்வாக்கும் நீதிக்கு முன் தலைவணங்க வேண்டுமே தவிர, நீதிமன்றம், அரசுக்கு முன் தலை குனியக் கூடாது. சட்டத்திற்கு மேலானவர்கள் என்று எந்த அரசும் தன்னை நினைத்துக்கொள்ள முடியாது; நீதிமன்ற உத்தரவுகள் விருப்பத்திற்கேற்ப கடைப்பிடிக்கப்பட வேண்டியவை யும் அல்ல. உச்ச நீதிமன்றத்தின் மாண்பையும், இந்திய ஜனநாயகத்தின் நம்பகத்தன்மையையும் காப்பாற்ற வேண்டுமானால், சட்டத்தின் ஆட்சி எவ்வித சமரசமுமின்றி நிலைநாட்டப்பட வேண்டும்! lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை