ஆட்சியாளர்களுக்கு இது நல்லதல்ல! சி.ரா.குப்புசாமி, உடுமலைப்பேட்டை, திருப்பூர் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், தமிழகத்தில் ஒரு மாத காலமாக பதற்றமான சூழலை உருவாக்கிவிட்டு, அதிலிருந்து விடுபட முடியாமல், திக்குத் தெரியாத காட்டில் நடுநிசியில் அலைவது போன்று தடுமாறிக் கொண்டிருக்கிறார்.திருப்பரங்குன்ற மலை தீபத்துாணில் தீபம் ஏற்ற, உயர் நீதிமன்றம் அனுமதி அளித்தும், விடாப்பிடியாக ஹிந்து சமய அறநிலையத் துறையின் வாயிலாகவும், மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை வாயிலாகவும், ஒன்றுமில்லாத விஷயத்தை ஊதிப்பெரிதாக்கி உள்ளார்.திருப்பரங்குன்றம் தீபத்துாண் விவகாரத்தில் அரசு கடைப்பிடித்த நடவடிக்கை, தனக்கும், தி.மு.க., ஆட்சிக்கும் பெரிய பின்னடைவை ஏற்படுத்தும் என்பதை உணராமல், மூர்க்கத்தனமான பேச்சுக் களையும் வெளிப்படுத்தி வருகிறார்.மதுரையிலுள்ள இஸ்லாமிய மக்களே இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாகக் கையாளும்போது, அரசின் எதிர்மறை நடவடிக்கைகள், பெரும் வியப்பையே ஏற்படுத்துகின்றன.'திருப்பரங்குன்றம் முருகனையும், தர்கா சிக்கந்தர் பாட்சாவையும் நாங்கள் ஒன்றாகவே கருதுகிறோம்' என்றும், 'கார்த்திகை தீபத்திருநாளில், தீபம் ஏற்ற முருக பக்தர்களை அனுமதித்து இருந்தால், இந்த ஒரு மாத கால களேபரத்திற்கு வேலையே இல்லை' என்றும், இஸ்லாமியப் பெருமக்களே ஆதங்கம் கொள்கின்றனர்.இந்த ஒரு மாத கால அசாதாரண நிகழ்வுகளால், எவ்வளவு பெரிய அரசியல் அதிர்வுகளை சந்திக்க நேர்ந்தது என்று, இன்னமும் தமிழக அரசு உணர்ந்ததாக தெரியவில்லை.அறநிலையத் துறை அதிகாரிகள் தொடங்கி, மதுரை மாநகர் காவல்துறை உயர் அதிகாரிகள், கலெக்டர், அரசு தலைமைச் செயலர் மற்றும் டி.ஜி.பி., போன்றோர், அன்றாட அத்தியாவசியப் பணிகளில் செலுத்த வேண்டிய கவனம், மடைமாற்றம் செய்யப்பட்டதோடு, இவர்கள் அனைவருமே வெளிக்காட்டிக் கொள்ள முடியாத மன உளைச்சலுக்கு ஆளாகி விட்டனர்.குறிப்பாக கலெக்டர் மற்றும் மாநகர் காவல் ஆணையர் போன்றோர், குற்றம் இழைத்தவர்கள் போன்று, நீதிமன்றத்திற்கு வர வேண்டிய ஒரு துர்பாக்கிய சூழலை இந்த அரசு உருவாக்கி விட்டது என்றே சொல்ல வேண்டும்.மேலும், தலைமைச் செயலரும், டி.ஜி.பி., யும், காணொளி வாயிலாக, நீதிபதியின் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டிய அவலநிலை ஏற்பட்டது. இன்னும், இதற்கு மேலும் இந்த அவலங்கள் தொடர்வதற்கான நகர்வுகளே தெரிகின்றன.இது, ஆட்சியாளர்களுக்கு நல்லதல்ல!மக்களுக்கு காது சுளுக்காதா? சு.செல்வராஜன், சரவணம் பட்டி, கோவை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் பெயரை, 'விக் சித் பாரத் ஊரக வேலை வாய்ப்புத் திட்டம்' என பெயர் மாற்றி யுள்ளது மத்திய அரசு. நம் நாடு, 2047ல் சுதந்திர தின நுாற்றாண்டை கொண்டாடும் வகையில், வளர்ந்த நாடாகத் திகழ்வதற்காக, சில திட்டங்களை இப்போது மாற்றி அமைக்கிறது மத்திய அரசு. அதன் அடிப்படையில் தான், இந்த திட்டத்தை மாற்றியமைத்து, பெயரையும் மாற்றி இருக்கிறது. இப்புதிய திட்டத்தில், 'ஆண்டுக்கு 100 நாள் வேலை' என்பது, 125 நாளாக உயர்த்தப்பட்டுள்ளது. மத்திய - மாநில அரசுகளின் நிதிப் பங்கீடு, 60:40 சதவீதம் என்ற அடிப்படையில் மாற்றப்பட்டுள்ளது. ஏழு அல்லது 15 நாட்களுக்கு ஒருமுறை, சம்பளம் வழங்கப்பட வேண்டும் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் முழு பெயர், 'விக் சித் பாரத் - கியாரன்டி பார் ரோஜ்கர் அண்டு அஜீவிகா மிஷன் - கிராமின்' என்பது; சுருக்கமாக, 'ஜி ராம் ஜி' என்று அழைக்கப்படுகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக உயர்த்தி, அவர்களின் கையில் பணப் புழக்கத்தை அதிகரிப்பதே இதன் நோக்கம். இத்திட்டத்தின் பெயரை உச்சரிக்கவே கடினமாக உள்ளதாக, முதல்வர் ஸ்டாலின் கூறுகிறார். ஸ்டாலின், கான்ஸ்டன்டைன் போன்ற கரடு முரடான பெயர்களைக் கொண்ட தி.மு.க.,வினர், 'விக் சித் - ஜி ராம் ஜி என உச்சரிப்பது கடினமாக உள்ளது' எனச் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? கல்வித்துறை அமைச்சரின், 'அன்பில் மகேஷ் பொய்யாமொழி' என்ற பெயர் கடினமாக இருக்கிறது என்பதால், கட்சித் தலைமையே 'மகேஷ்' என பெயர் மாற்றுதோ என்று நினைக்கத் தோன்றுகிறது. மகேஷின் தந்தை, அன்பில் பொய்யா மொழியும், தாத்தா அன்பில் தர்மலிங்கமும் உயிருடன் இருந்திருந்தால், 'என்னய்யா நடக்குது கட்சியிலே...' என வருத்தப்பட்டிருப்பர். இதை விடுங்கள்... முதல்வரின் மேடைப் பேச்சுக்களைக் கேட்டால், 'ஒரு மாநிலத்தின் முதல்வரா தமிழை இப்படி கொச்சைப்படுத்துவது?' என்ற கோபம் தான் வருகிறது. இவர் தந்தை கருணாநிதி, பேச்சு வழக்கில் உள்ளவற்றை மேடையில் பேச மாட்டார். மகன் ஸ்டாலினோ, 'நிறைவேற்றவில்லை, காதில் விழவில்லை, நிதி வரவில்லை, நிற்கிறேன், சொல்கிறேன்' என்ற சாதாரண சொற்களைக் கூட, 'நிறைவேத்தல, காதில் விழல, நிதி வரல, நிக்கிறேன், சொல்றேன்' என்ற கொச்சைத் தமிழில் பேசுகிறார். இப்போது சொல்லுங்கள்... 'விக் சித் என்ற சொல்லை உச்சரித்தால், தமிழர்கள் வாய் சுளுக்குகிறது' என்று இவர் சொன்னது போல், இவர் பேசுவதைக் கேட்டால், மக்கள் காது சுளுக்காதா, முகம் சுளிக்காதா? மாடுகளை கொட்டகையில் கட்டுங்கள்... ப்ளீஸ்! கல்யாணி சேஷாத்ரி, சென்னையில் இருந்து எழுதுகிறார்: சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில், மாடுகள் வளர்த்து பால் வியாபாரம் செய்வோர், மிக புத்திசாலிகள்; சாமர்த்தியசாலிகள். இவர்கள், மாடுகளுக்கு என்று ஒரு இடம் கூட ஒதுக்குவது இல்லை. காலை ஒருமுறை அவற்றுக்கு தண்ணீரும், தீனியும் போட்டு, மறக்காமல் பாலை கறந்து விட்டு, அவிழ்த்து விடுகின்றனர். கன்றுக்குட்டிகளை பட்டினி போட்டு, தாய்க் கன்றோடு திரிய விடுகின்றனர். தாய் மற்றும் சேய்க்கன்றுகள் கண்டதையும் உண்டு, நிழல் கண்ட இடத்தில் படுத்து, மாலை ஆனதும் தங்கள், 'ஓனரை' நோக்கிச் சென்று விடுகின்றன. இந்த பால் வியாபாரிகள், மாடுகளைக் குளிப்பாட்டுவது கூட கிடையாது. மாலை நேரத்தில் அவற்றுக்கு தீனியும், தண்ணீரும் கொடுத்து, மறக்காமல் பாலை கறந்து விட்டு வெளியே துரத்தி விடுகின்றனர்; அவையும், தெரு முழுதும் சாணியிட்டு அசிங்கப்படுத்தி விட்டு, கண்ட இடத்தில் படுத்துக் கொள்கின்றன. காரணம் என்ன... மாடுகளுக்கு, வீட்டில் இடம் கிடையாது; கொட்டகை கிடையாது; சாணி போட்டால் எடுக்க வேண்டிய வேலை இல்லை! இப்போதெல்லாம், சாணியை மூலப்பொருளாகக் கொண்டு தயாரிக்கப்படும் வறட்டியின் பயன்பாடு மிகவும் குறைந்துவிட்டது. மொத்தத்தில், மாடு ஒரு உயிருள்ள ஜீவன் என்ற நினைப்பே அற்ற நிலை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்ச வேண்டி உள்ளது. மாடு வளர்ப்போருக்கு, அரசு சில விதிகளை விதித்து, அவற்றைக் கடுமையாக பின்பற்றச் சொல்ல வேண்டும். இல்லையேல், பொதுமக்கள் படும்பாடு திண்டாட்டம் தான்.