வாசகர்கள் கருத்துகள் ( 1 )
ஓசி என பேசி தி.மு.க.அமைச்சர்கள் பொது மக்கள் கோபத்துக்கு ஆளானது போல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது.... கழகங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உறுதி பண்ணுகிறது
திருட்டு கணக்கு: 'ஐடியா' சொல்லும் தேர்தல் கமிஷன்! எம்.வேல்வேந்தன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழகத்தில், 2011ல் நடந்த சட்டசபை தேர்தலில், சென்னை கொளத்துார் தொகுதியில், தி.மு.க., தலைவரும், இன்றைய முதல்வருமான ஸ்டாலின் வெற்றி பெற்றதை எதிர்த்தும், அவரது வெற்றியை செல்லாது என்று அறிவிக்க கோரியும் அத்தொகுதியில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிட்டு தோல்வி அடைந்த சைதை துரைசாமி, உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார்.அம்மனு விசாரணைக்கு வந்த போது, 'தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணத்துக்கு உச்சவரம்பை நிர்ணயிப்பது யார்?' என்று கேள்வி எழுப்பியுள்ளார், நீதிபதி.தேர்தல் நடந்து, 15 ஆண்டுகள் கடந்த நிலையில், இப்போது தான் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணத்துக்கு உச்சவரம்பை நிர்ணயிப்பது யார் என்ற கேள்வியே கேட்கப்பட்டுள்ளது.மக்களாட்சி முறையின் உச்சப்பட்ச கோளாறு என்றால் அது, இதுதான்.இதே மன்னராட்சி என்றால், துரைசாமி வழக்கு தொடுத்த ஓரிரு நாட்களிலேயே தீர்ப்பு வெளியாகி இருக்கும். நீதிமன்றங்களில் தொடுக்கப்படும் எந்த வழக்குக்கும், தீர்ப்பு சொல்ல காலக்கெடு நிர்ணயிப்பது மிக அவசியம்!காலக்கெடு இல்லாமல், ஆண்டுக்கணக்கில் வழக்கை இழுத்தடித்து காலம் கடந்து தீர்ப்பளிப்பதில் யாருக்கு என்ன லாபம்?இவ்வளவு காலதாமதம் செய்வதைக் காட்டிலும், துவக்கத்திலேயே அவ்வழக்கை, 'டிஸ்மிஸ்' செய்திருக்கலாம் அல்லவா?இனியாவது தேர்தல் வழக்குகளை, 30 முதல் 45 நாட்களுக்குள் விசாரித்து, தீர்ப்பு வழங்க வேண்டும்.அதேநேரம், 'தேர்தலில் அரசியல் கட்சிகள் செலவு செய்யும் பணத்துக்கு உச்ச வரம்பை யார் நிர்ணயிப்பது?' என்று கேள்வி எழுப்பியிருந்தார், நீதிபதி.வேட்பாளர்கள் செலவு செய்ய வேண்டிய பணத்தைத் தான் தேர்தல் ஆணையம் நிர்ணயிக்கிறதே தவிர, கட்சிகள் செலவு செய்ய வேண்டிய பணத்தை நிர்ணயிப்பதில்லை. அதற்கு எந்த கட்டுப்பாடும் இல்லை.அதனால் தான், வேட்பாளர்கள் தாங்கள் செலவு செய்யும் தொகையை, கட்சி செய்ததாக பொய் கணக்கு காண்பிக்கின்றனர்.கடந்த 2014ல் ஒரு சட்டசபை தொகுதிக்கு, 40 லட்சம் ரூபாய் செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியது. அதேநேரம், ஆறு சட்டசபை தொகுதிகளை அடக்கிய பார்லிமென்ட் தொகுதிக்கு, இரண்டு கோடியே, 40 லட்சம் ரூபாய் அனுமதித்திருக்க வேண்டும். ஆனால், தேர்தல் கமிஷன் அனுமதித்தது வெறும், 95 லட்சம் ரூபாய்!அப்பணம், ஊர்வலச் செலவுக்குக் கூட காணாது.எனவே, வேட்பாளர்களின் தில்லாலங்கடி திருட்டு கணக்குகளை எழுத, 'ஐடியா' கொடுத்து கொண்டிருப்பதே தேர்தல் கமிஷன் தான்.அவ்வகையில், அரசியல் கட்சிகள் செய்யும் செலவுக்கு உச்ச வரம்பை நிர்ணயிக்க தவறிய தேர்தல் கமிஷனும் ஒரு குற்றவாளியே!சுயமாக செயல்படுவது மரபு அல்ல! வ.ப.நாராயணன், ஊரப்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு த யாரித்துத் தரும் உரையை அப்படியே அச்சு அசலாக வாசிப்பதற்குப் பெயர், கவர்னர் உரையாம்; அதுதான் காலங்காலமாகப் பின்பற்றி வரும் மரபாம்! இம்மரபின்படி, கவர்னர் சுயமாக எந்தக் கருத்தையும் சபையில் கூறக் கூடாது. அரசை விமர்சித்து உரை நிகழ்த்தவோ, குறைந்தபட்சம் அரசு தயாரித்த உரையில் திருத்தங்களை கூட மேற்கொள்ளக் கூடாது. மாறாக, அரசையும், முதல்வரையும் வானளாவப் புகழ்ந்து தள்ள வேண்டும். சட்டசபையில் இயற்றிய மசோதாக்களில் கண்ணை மூடிக் கொண்டு கையெழுத்திட வேண்டும்; ஏன் எதற்கு என்ற கேள்வியே கேட்கக் கூடாது. மரபுப்படி, நீட்டிய கோப்பில் கையெழுத்திடுவதும், எழுதிக் கொடுத்த உரையை வாசிப்பதும், முதல்வர் தேர்வு செய்யும் அமைச்சர்களுக்குப் பதவிப் பிரமாணமும் செய்து வைப்பது மட்டுமே கவர்னரின் பிரதானப் பணியாம்! இப்படிப்பட்ட மரபுகளை ஒரு கவர்னர் மீறினால், எந்த அரசுக்குத்தான் கோபம் வராது? அமைச்சர்கள் தகாத வார்த்தைகளால் கவர்னரை ஏன் விமர்சிக்க மாட்டார்கள்? ஆக மொத்தத்தில், அரசுக்கு தலையாட்டி பொம்மையாகவோ, ரோபோ இயந்திரம் போலவோ இல்லாமல் சுயமாக செயல்படுவது, மரபை மீறிய செயல் என்கிறது, வார்த்தைகளில் மட்டும் சுயமரியாதை கொள்கையை துாக்கி பிடிக்கும் தி.மு.க., அரசு! கவர்னர் ரவி என்ன தி.மு.க., உடன்பிறப்பா, சுயத்தை இழந்து துதிபாட? அரசியல்வாதிகளுக்கு நாவடக்கம் தேவை! அ.ரவீந்திரன், குஞ்சன்விளை, கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக வாக்காளர்களின் ஓட்டுகளை கவர, இலவசத் திட்டங்களை அறிவித்து, திராவிட கட்சிகள் ஆட்டம் போட்டு வருகின்றன. கடந்த 2021 சட்டசபை தேர்தலில், மகளிருக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அறிவித்து, வெற்றி பெற்றபின் அதை தி.மு.க., அரசு நடைமுறைபடுத்தியபோது, அப்போதைய அமைச்சர் பொன்முடி, பெண்களை பார்த்து, 'ஓசி தானே... ஓசி...' என்று ஏளனமாக கூறி, தமிழக மக்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். அதேபோன்று, மாணவியருக்கு மாதந்தோறும், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கிய போது, 'இனி, மாணவியர் இப்பணத்தில் மொபைல் போனுக்கு ரீசார்ஜ் செய்து, தங்கள் காதலருடன் கடலை போடலாம்' என்றார், அமைச்சர் துரைமுருகன். தி.மு.க.,வினர் தான் இப்படி நாகரிகம் இல்லாமல் பேசுகின்றனர் என்றால், தற்போது, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் அதுபோன்று பேசியுள்ளார். 'அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் ஆண்களுக்கு இலவச பேருந்து பயண திட்டத்தை கொண்டு வருவோம்' என, அக்கட்சி பொதுச்செயலர் பழனிசாமி அறிவித்ததும், ராஜேந்திர பாலாஜி, 'இனி, ஆண்கள் எல்லாம் தங்கள் மனைவி, காதலியுடன் ஜாலியாக ஊர் சுற்றலாம்' என்று கூறியுள்ளார். இதுபோன்ற பேச்சால், தி.மு.க., அமைச்சர்கள் எத்தகைய விமர்சனத்தை எதிர்கொண்டனர் என்பது தெரிந்தும், ஆண்களை அவமானப்படுத்தியுள்ளார். தமிழக மக்கள் எவரும் இலவச பேருந்து பயண திட்டம் வேண்டும் என்று கேட்கவில்லை. வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்தி நல்லாட்சி தர திறனில்லாமல், குறுக்கு வழியில் மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கவே, இந்த இலவச திட்டங்கள் என்பது மக்கள் அறியாததல்ல! அத்துடன், மக்களின் வரிப்பணம் தான், இலவச திட்டத்திற்கு செலவு செய்யப்படுகிறதே தவிர, இத்திட்டத்திற்காக எந்த கட்சியின் அமைச்சர்களும் தங்கள் சொத்தை விற்று கொடுப்பதில்லை. எனவே, இதுபோன்று ஏளனப் பேச்சுகள் ஓட்டு வங்கியை பதம் பார்த்து விடும் என்பதை நினைவில் கொண்டு, அரசியல்வாதிகள் நாவடக்கத்துடன் பேச வேண்டும்! l
ஓசி என பேசி தி.மு.க.அமைச்சர்கள் பொது மக்கள் கோபத்துக்கு ஆளானது போல் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பேசியிருப்பது.... கழகங்கள் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்பதை உறுதி பண்ணுகிறது