உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / திருந்தாத மனிதர்கள்!

திருந்தாத மனிதர்கள்!

எஸ்.உதயம் ராம், அட்லாண்டா மாகாணம், அமெரிக்காவிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஏர் இந்தியா விமானத்தில் பயணம் செய்த, 242 அப்பாவி உயிர்கள், சில நொடிகளில் எரிந்து கரியாகிப் போன காட்சிகள், மனதை உறைய வைத்தன.உலகையே உலுக்கிய இந்த விபத்து குறித்து, சமூக வலை தளங்களில் சிலரின் விமர்சனங்களை படித்தபோது, 'என்ன மனிதர்கள் இவர்கள்...' என்ற கோபமே வருகிறது.'இவர் மட்டும் எப்படி, 'எக்ஸிட் கேட்' வழியே தப்பித்தார்? இவருக்கு மட்டும் எப்படி விமானம் சில நிமிடங்களில் மோதப் போவது தெரிந்தது?' என்பது போன்ற சந்தேக கேள்விகளும், விவாதமும் ஒருபுறம் என்றால், 'பிரதமர் மற்றும் வி.ஐ.பி.,கள் பயணம் செய்கிற விமானத்துக்கு தரும் பாதுகாப்பை, ஏன் பயணியர் விமானத்துக்குத் தரவில்லை?'விமானம் நல்ல நிலையில் உள்ளதா என்பதை, விமானியும், நிர்வாகமும் ஏன் சரியாக சோதிக்கவில்லை?'கோடி ரூபாய் நிவாரணம் தருகிறவர்கள், ஏன் தரமான விமான சேவையை வழங்கவில்லை?'ஏன் அவர்கள் பாராசூட்டில் இருந்து குதித்து தங்களை தற்காத்துக் கொள்ளவில்லை?'- இப்படி எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்களாய் சி.பி.ஐ., ரேஞ்சுக்கு கேள்விக் கணை தொடுத்து, கருத்துகளை பதிவிடுகின்றனர்.இவை எல்லாவற்றிற்கும் மேல் ஒரு மோசமான பதிவு எதுவென்றால், 'ஓர் ஆள் வருஷத்துல பாதிநாள் விமானத்தில் தான் போறார்; அவருக்கு மட்டும் எதுவும் நடக்கமாட்டேங்குது' என்பது தான்!இப்பதிவு யாரை குறிக்கிறது என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை. உலகில் இது போன்று வக்கிர எண்ணங்கள் வலுத்து வருவதால்தான், எதிர்மறை அலைகளால் பிரபஞ்சத்தில் கொடூர விபத்துகள் நிகழ்கின்றன. 'எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் வேறொன்றுமறியேன் பராபரமே' என்ற தாயுமானவரின் தாயுள்ளம் எப்படி இங்கே சிலருக்கு மரித்துப் போனது?அடுத்தவர் இறக்க வேண்டும் என்று எவர் வேண்டினாலும், அது மனித நேயத்திற்கு எதிரானது; மன்னிக்க முடியாதது.உலகில் நாம் வாழும் இந்த நொடி மட்டுமே நமக்கு சொந்தமானது. அடுத்த நொடி விதியினுடையது என்ற நிலையாண்மை தத்துவத்தை, இயற்கை பலமுறை மனிதர்களுக்கு மண்டையில் அடித்தது போல் சொல்லி விட்டது. ஆனாலும், சில மனிதர்கள், அடுத்தவர் மரணத்தை எதிர்பார்க்கும் பதர்களாகவே இருக்கின்றனர்.இதுபோன்றோரின் எண்ண அலைவரிசை தான், மனித அழிவிற்கே வித்திடுகிறது என்பதை எப்போது தான், இவர்கள் உணர்வரோ!

மன்னிப்பு தேவையில்லை!

மு.நெல்லையப்பன், சென்னையில் இருந்து எழுதுகிறார்: தக் லைப் திரைப்பட இசை நிகழ்ச்சியில், 'தமிழிலிருந்து பிறந்தது தான் கன்னடம்' என்று நடிகர் கமல் கூறவே, கர்நாடகாவில் தீ பற்றிக் கொண்டது. 'கன்னட மொழியை கமல் அவமானப்படுத்தி விட்டார். அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்' என்று மாநில முதல்வர் முதல், மொழி அரசியல் செய்யும் சிறு கட்சிகள் வரை கொதித்து எழுந்தனர். அவர் மன்னிப்பு கேட்க மறுக்கவே, அவர் படத்தை வெளியிட தடை விதித்தனர். இதனால், கர்நாடக உயர் நீதிமன்றத்தை நாடினார் கமல்.வழக்கை விசாரித்த நீதிபதி நாகபிரசன்னா, 'நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா... மன்னிப்பு கேட்டால் என்ன?' என்று கேட்டுள்ளார். நடிகர் கமல் ஒன்றும் போகிற போக்கில் கூறவில்லை. 'மனோன்மணீயம்' சுந்தரனார் எழுதிய தமிழ்த்தாய் வாழ்த்து பாடலில் குறிப்பிட்டுள்ளதை தான் கூறியுள்ளார். கன்னடமும் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்உன் உதரத்தே உதித்தெழுந்து ஒன்று பல ஆயிடினும்ஆரியம்போல் உலக வழக்கழிந்து ஒழிந்து சிதையாஉன் சீரிளமைத் திறன் வியந்து செயல் மறந்து வாழ்த்துதுமேஎன்ற அப்பாடலில், 'திராவிட மொழிகளான கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் துளு ஆகிய நான்கு மொழிகளும் தமிழ் மொழியான உன் உதரத்தில் பிறந்து, வளர்ச்சி அடைந்து, பல பிரிவுகளாக வளர்ந்து விட்ட போதிலும் ஆரியம் - சமஸ்கிருதம் போல் உலக வழக்கு அழிந்து, ஒழிந்து சிதையாத உன் திறன் வியந்து, செயல் மறந்து வாழ்த்துகிறோம்' என தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளார்.எனவே, கமலை மன்னிப்பு கோரும்படி கூறுவது, மனோன்மணீயம் சுந்தரனாரை மன்னிப்பு கோர சொல்வதற்கு ஒப்பாகும். இதை, எந்த தமிழனும் ஏற்றுக்கொள்ள மாட்டான்.மேலும், இக்கருத்தை, 'திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம்' என்ற நுாலில், கிறிஸ்துவ சமயப்பரப்பாளர் கால்டுவெல்லும் தெளிவாக வலியுறுத்தி உள்ளார். இதை பன்மொழி புலவர் கா.அப்பாத்துரையாரும் சுட்டிக்காட்டி உள்ளார்.எனவே, கமலை மன்னிப்பு கோர கூறுவது, மனோன்மணீயம் சுந்தரனாரை மன்னிப்பு கோர கூறுவதற்கு ஒப்பாகும்!

திராவிட முகமூடி!

சு.சங்கரலிங்கம், சத்திரப்பட்டி, விருதுநகர் மாவட்டத்தில் இருந்து எழுதுகிறார்: தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா இந்த நான்கு மாநிலங்களும் சேர்ந்தது தான் திராவிட நாடு. 'நாம் அனைவரும் திராவிடர்' என்று கூறி, 'இது திராவிட மாடல் அரசு' என்று மார்தட்டுகிறார், தமிழக முதல்வர். ஆனால், திராவிட நாட்டின் ஒரு பகுதியான கேரளாவின் நீர் வளம், 90 சதவீதம் கடலில் கலந்து வீணாகிறது. அதில், சிறு பகுதியாவது திராவிட நாட்டின் ஒரு பகுதியான தமிழகத்துக்கு தர மறுப்பது ஏன்?அதிகமான நீரை தேக்கி வைக்க அணைகள் இருந்தபோதிலும், இன்னும் அணை கட்ட அடம் பிடிக்கிறது கர்நாடகா. மற்றொருபுறம், பாலாற்றில் பிரச்னை செய்கிறது ஆந்திரா... எல்லாரும் திராவிடர் எனும் போது, ஏன் இவற்றை திராவிட மாடல் முதல்வரால் தடுக்க முடியவில்லை? காரணம், ஹிந்தி எதிர்ப்பு என்பது போல், திராவிடம் என்பதும் தமிழர்களை ஏமாற்ற தி.மு.க., போடும் நாடகம் என்பது நாடறிந்த விஷயம். அதனால் தான், கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடக மாநில முதல்வர்கள் திராவிட வேடம் போடுவதில்லை. மேலும், அவர்கள் மண்ணின் மைந்தர்கள்; தங்களை வேறொரு முகமூடிக்குள் ஒளிந்துக் கொள்ள விரும்பாமல், தங்கள் உண்மை அடையாளத்துடன் ஆட்சி நடத்துகின்றனர்.ஆனால், இங்கு அப்படியா? தமிழை அழித்து, ஹிந்து மதத்தை முன்னிறுத்தி, தமிழனின் கலாசாரம், அவன் வழிபாட்டு முறை, வாழ்வியல் நெறிகளை ஏகடியம் செய்தபடி, திராவிடம் என்ற பெயரில் தமிழர்களின் அடையாளத்தை அழிக்க துடிப்பவர்கள் அல்லவா ஆட்சியில் உள்ளனர்...பின் எப்படி, முல்லைப் பெரியாறு நீரையும், காவிரி நீரையும் நமக்கு பெற்றுத் தருவர்? புதிய அணைகளை தான் கட்டுவர்?மக்கள் சிந்திக்க வேண்டும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Anantharaman Srinivasan
ஜூன் 17, 2025 23:53

வி.ஐ.பி.,கள் பயணம் செய்கிற விமானத்துக்கு தரும் பாதுகாப்பை, ஏன் பயணியர் விமானத்துக்குத் தருவதில்லை? என்று கேட்பதில் என்ன தவறு.?


D.Ambujavalli
ஜூன் 17, 2025 18:52

அறுபது ஆண்டுகளுக்கு மேலாகியும், என்றோ எல்லாரும் மறந்துவிட்ட ஹிந்தி எதிர்ப்பை தோண்டி எடுத்து மற்ற பிரசினைகளுக்கு போர்வை போர்த்துகிறாரே தவிர, மாநிலத்தில் உள்ள தலைபோகும் விஷயங்கள் அவர் கண்களுக்குத் தெரிவதே இல்லை. இந்த திராவிட பஜனையால் மக்களுக்கு என்ன நன்மை?


முக்கிய வீடியோ