உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் /  கடலைக் காணாத கிணற்றுத் தவளைகள்!

 கடலைக் காணாத கிணற்றுத் தவளைகள்!

க.சோணையா, மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: சட்டசபை தேர்தலில் தி.மு.க., தோல்வி அடைந்ததை தொடர்ந்து, தோல்வியை ஜீரணிக்க முடியாத தி.மு.க., தலைவர்கள், 'ஐயகோ... இந்த கேடுகெட்ட மக்கள் இப்படி செய்து விட்டனரே... நாங்கள் என்னவெல்லாம் கனவு கண்டோம்; இன்று எங்களின் எதிர்காலமே கேள்விக்குறி ஆகிவிட்டதே...' என்று புலம்புகின்றனர்.அதிலும், முன்னாள் துணை முதல்வர் உதயநிதியின் அலும்பு தாங்கமுடியவில்லை. 'தமிழகத்தை ஆட்சி செய்ய, த.வெ.க.,விற்கு என்ன தகுதி இருக்கிறது; அவர்கள் என்ன தியாகிகளா?' என்றெல்லாம் பொரிந்து தள்ளுகிறார்.இவர் என்ன தியாகம் செய்து, துணை முதல்வர் ஆனார்?தி.மு.க., தலைவர் ஸ்டாலினோ, 'எங்கள் தயவில் நடக்கும் இந்த ஆட்சி துாக்கி எறியப்படும் நாள், வெகு தொலைவில் இல்லை' என்கிறார்.'உள்ளாட்சி தேர்தலில், த.வெ.க., ஒரு மேயர் பதவியை பிடிக்கட்டும்; என் ஒரு பக்க மீசையை எடுத்துக் கொள்கிறேன்' என்று சவால் விடுகிறார், தி.மு.க., அமைப்பு செயலர் பாரதி.கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் ஐந்து லட்சம் கோடி ரூபாயாக இருந்த தமிழக அரசின் கடன் தொகை, தி.மு.க., ஆட்சியில், 13.18 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதாக த.வெ.க., நிதியமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கை வெளியிட்டது தான் தாமதம், உடனே, முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு, 'அடுத்து வரும் உங்களின் ஐந்து ஆண்டுகள் ஆட்சியின் நிறைவில், தமிழக அரசின் கடன் தொகை, இன்னும், 10 லட்சம் கோடியாக உயரவில்லை என்றால், என் பொறுப்புகள் அனைத்தும் துறந்து விடுகிறேன்' என்று சவால் விடுத்துள்ளார்.இவர்களது பேச்சுகளையும், சவால்களையும் பார்க்கும் போது, தாங்களே எல்லாம் அறிந்த அதிமேதாவிகள்; தங்களை தவிர வேறு எவருக்கும் தமிழகத்தை ஆட்சி செய்யும் திறன் கிடையாது என்பது போல் உள்ளது.கிணற்று தவளைகள் கடலை தான் கண்டதுண்டா, கப்பலைத் தான் அறிந்ததுண்டா?

உபரி வருமானம் உள்ள மாநிலமாக மாறுமா?

கு.அருண், கடலுாரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆட்சி அதிகாரத்திற்கு வருவோர், ஐந்தாண்டுகளில் மிகப்பெரிய செல்வந்தர்களாக மாறி விடுகின்றனர்; அவர்களுக்கு ஓட்டுப் போட்ட மக்களோ, கடன்காரர்களாக மாற்றப்பட்டு விடுகின்றனர். கடந்த தி.மு.க., அரசு, 60 ஆண்டுகளில் பிற அரசுகள் வாங்கிய மொத்த கடனை விட, அதிகமாக கடனை வாங்கி, தமிழகத்தை கடன்கார மாநிலமாக மாற்றி விட்டது. விளைவு... தமிழக மக்கள் ஒவ்வொருவர் மீதும், 1,28,934 ரூபாய் கடன் சுமை திணிக்கப் பட்டுள்ளது. அதேநேரம், தி.மு.க., தலைவர் ஸ்டாலின், அவரது மகன், மருமகன், முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் முதல் வட்ட செயலர்கள் வரை, அனைவரது சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த லட்சணத்தில், நல்லாட்சி தந்த தங்களுக்கு, மக்கள் தோல்வியை பரிசளித்து விட்டனரே என்று நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர், தி.மு.க., தலைவர்கள். எவருக்கு நல்லாட்சியாக இருந்துள்ளது என்பது இப்போது அல்லவா புரிகிறது! 'ஆன முதலில் அதிகம் செலவானால், மானம் அழிந்து, மதிகெட்டுப்- போன திசை எல்லார்க்கும் கள்ளனாய், ஏழ்பிறப்பும் தீயனாய், நல்லார்க்கும் பொல்லனாம் நாடு' என்கிறார் அவ்வையார். புதிய அரசாவது வரவுக்கு மீறி செலவு செய்யாமல், மக்களின் வரிப்பணத்தை இலவசங்கள் என்ற பெயரில் ஊதாரித்தனமாக வாரி வழங்காமல், நிரந்தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தொழில் வளர்ச்சி பெருக்கி, உபரி வருமானம் உள்ள மாநிலமாக தமிழகத்தை மாற்ற வேண்டும்!

கவனமாக இருங்கள் முதல்வரே!

கோபால் மாரிமுத்து, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக முதல்வராக விஜய் பதவியேற்றபோது, 'என்னை நம்புங்க; ஒரு ரூபாய் கூட அரசு பணத்தை எடுக்க மாட்டேன்' என்ற நேர்மறை எண்ணத்தை விதைத்தார். அதேநேரம், கூட்டணியில் இணைந்து, அதி காரத்தில் பங்கேற்றிருக்கும் கட்சிகள், வழக்கமான, 'கை அரிப்பில்' ஊழல் நடக்குமானால், அது, த.வெ.க., அரசின் மீதான நம்பிக்கையை இழக்க வைக்கும். மேலும், அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனி சாமியின் மீதான அதிருப்தியில் அக்கட்சி தொண்டர்கள் முதல் தலைவர்கள் வரை, த.வெ.க.,விற்கு படையெடுத்து வருகின்றனர். இவர்கள் மக்கள் பணி செய்யவா இப்படி விழுந்தடித்து ஓடி வருகின்றனர்... ஆளுங்கட்சியில் இணைந்தால், சுரண்டி கொழுக்கலாமே என்ற எண்ணத்தில் வரு கின்றனர். இவர்களால் த.வெ.க.,வுக்கு நன்மையை விட, அவப் பெயரே மிஞ்சும்! அதனால் முதல்வர் விஜய், அரசு அலுவலகத்திலும், காவல் நிலையத்திலும் கட்சித்துண்டு போட்டவர்களுக்கு தடை விதிக்க வேண்டும்; டெண்டர்களில் சரியான மார்க்கெட் விலையுடன், 10 சதவீதம் லாபம் வைத்தாலே ஒப்பந்ததாரருக்கு நல்ல லாபம் கிடைக்கும்; சந்தை மதிப்பிற்கு மேல் தொகை குறிப்பிடப்பட்டால் அதிகாரிகளே பொறுப்பு என்று அறிவிக்க வேண்டும். ஊழல் செய்யவே அமைச்சர் பதவி கோரும் பிற கட்சிகளின் தந்திரங்களை மனதில் வைத்து, அக்கட்சிகளை துாரத்தில் வைக்க வேண்டும். அப்போது தான், த.வெ.க., ஊழலற்ற நிர்வாகத்தை தர முடியும். முதல்வர் கவனத்தில் கொள்வாரா?

வறுமை எப்போது ஒழியும்?

ஆ.லோகியா, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடந்த 12 ஆண்டுகால பா.ஜ., ஆட்சியில், வறுமையின் பிடியில் இருந்து, 25 கோடி பேர் வெளியேறி உள்ளனர். 2013- - 14ல், 20.17 சதவீதமாக இருந்த வறுமை, தற்போது, 11.28 ஆக குறைந்துள்ளது' என்று கூறியுள்ளார், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். மகிழ்ச்சியான விஷயம் தான். அதேநேரம், தனியார் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்றோருக்கு, இ.பி.எப்., எனப்படும், ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதியின் வாயிலாக, மிகக் குறைந்த தொகையே பென்ஷனாக வழங்கப்படுகிறது. இத்தொகையில் கஷ்ட ஜீவனம் நடத்தும் என்னைப் போன்றோர், இன்னும் வறுமையின் பிடியில் இருந்து விடுபட வில்லையே! பிள்ளைகளின் அரவணைப்பில் இருப்போர் எப்படியோ வாழ்ந்து விடுவர்; அவர்களின் துணை இல்லாதவர் களின் நிலையை அரசு நினைத்துப் பார்த்தது உண்டா? ஒன்பது முறை பட்ஜெட் வாசித்த நிதியமைச்சருக்கு, ஒருமுறை கூடவா எங்கள் நினைவு வரவில்லை அல்லது மூத்த குடிமக்களின் குரல் தான் கேட்க வில்லையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Barakat Ali
ஜூன் 22, 2026 09:36

குரல் நியாயமான குரலாக ஒலிக்கிறது .......


Barakat Ali
ஜூன் 22, 2026 09:34

அதிமுகவை மறந்துவிடுங்கள் .... களத்தில் நாங்கள் மற்றும் தவெக மட்டுமே என்று காட்ட முனைகிறது திமுக .... அதே போல களத்தில் நாங்கள் மற்றும் திமுக மட்டுமே என்று காட்ட முனைகிறது தவெக .... தவெகவை திமுகவின் பி டீம் என்று பலரும் சொல்வதற்கு இது ஒரு முக்கியக்காரணம் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை