உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / திருமால் குறித்த ஆராய்ச்சி எப்போது?

திருமால் குறித்த ஆராய்ச்சி எப்போது?

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: தமிழக அரசியல்வாதிகளில், எதையாவது பேசி வம்பில் மாட்டிக் கொள்ளும் பேர்வழி ஒருவர் இருக்கிறார் என்றால், அது வி.சி., தலைவர் திருமாவளவன் மட்டுமே!திருப்பரங்குன்றம் கோவிலில் தன் நெற்றியில் பூசிய திருநீறை, செல்பி எடுக்க கேட்ட தம்பதிக்காக, வேகமாக அழித்தார். அவரின் செயலை எதிர்க்கட்சிகள் கடுமை யாக விமர்சிக்கவே, 'நானாக அழிக்கவில்லை; வியர்வையில் அழிந்து விட்டது' என்று சமாளித்தார். இப்போது, தமிழகத்தில் உள்ள, 234 தொகுதிகளிலும் போட்டியிட தன் கட்சிக்கு தகுதி இருப்பதாகவும், 'முன்புபோல், எங்களுக்கு டீ, பன் கொடுத்து குறைவான தொகுதிகளை ஒதுக்க முடியாது...' என்றும் கூறியுள்ளார். அது சரி... 234 தொகுதிகளிலும் இவரது கட்சியால் போட்டியிட முடியும் என்றால், எதற்கு ஒன்றிரண்டு சீட்டுக்காக தி.மு.க., காலடியில் கிடக்க வேண்டும். தனித்து போட்டியிட வேண்டியது தானே? இதுதான் இப்படியென்றால், 'முருகன் தமிழ் கடவுள் என்றால், அவரது பெற்றோரான சிவன் - பார்வதியும், அண்ணன் விநாயகரும் தமிழராகத் தானே இருக்க முடியும். கணேசனை ஏன் தமிழ் கடவுள் என்று சொல்வதில்லை' என்று கேள்வி எழுப்பியுள்ளார். அடுத்து, சிவபெருமானின் மைத்துனரான திருமால் தமிழரா இல்லையா என்ற ஆராய்ச்சியில் எப்போது இறங்கப் போகிறாரோ!இப்படி தேவையில்லாமல் பேசி, ஹிந்துக்களின் எதிர்ப்பையும், கண்டனத்தையும் சம்பாதிப்பதே இவரது வழக்கமாகிவிட்டது!

டாக்டர்களை பாதுகாக்குமா அரசு?

டாக்டர் பொன்னு சேதுராஜ், காரைக்குடியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: வேலுார் அரசு மருத்துவமனையில், சமீபத்தில், பெண் டாக்டர் ஒருவரிடம் ராமு என்ற நபர் கடுமையான வாக்குவாதம் செய்து, அவரை கீழே தள்ளி, மிரட்டல் விடுத்தார். இதைக் கண்டித்து, டாக்டர்கள் போராட்டம் நடத்திய பின்னரே குற்றவாளியை போலீசார் கைது செய்தனர். இதுபோன்ற சம்பவங்கள் மாநிலத்தில் பல்வேறு மருத்துவமனைகளில் நிகழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன. சிவகங்கை அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, 24 மணிநேரமும் இயங்கி வருகிறது. காலை 7:00 முதல், இரவு 12:00 மணி வரை புறநோயாளி கள் தினசரி, 1,000க்கு மேற்பட்டோரும், உள்நோயாளிகள், 800 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். இரவு நேரத்தில் கூட தினசரி, 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக வந்து செல்லும் நிலையில், மருத்துவமனைக்கு போதுமான பாதுகாப்பு இல்லை. இரவில் மட்டுமாவது கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும் என்று கேட்டும் பலன் இல்லை. இச்சூழ்நிலையை பயன்படுத்தி, போதை ஆசாமிகள் சிலர், நோயாளிகளின் உறவினர் என சொல்லி மருத்துவமனை வளாகத்திற்குள் தங்கி, மொபைல் போன், பணம் மற்றும் நகை பறிப்பு என கைவரிசையை காட்டுகின்றனர். இதனால், இரவில் பணி செய்யவே பயமாக உள்ளது. ஒருபுறம், உயிரைக் காப்பாற்றும் டாக்டர்களை, நோயாளிகளே தாக்கும் கொடுமை நடக்கிறது. மறுபுறம், இதுபோன்ற சமூக விரோதிகளின் அச்சுறுத்தல்... டாக்டர்கள் பயமில்லா மல் தங்கள் பணியை செய்ய, அரசு உரிய பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்!

என்ன வகை நியாயம் இது?

கே.என்.ஸ்ரீதரன், பெங்களூரில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'மதுரையில் நடந்தது முருக பக்தர்கள் மாநாடு அல்ல; அரசியல் மாநாடு. அதில், அ.தி.மு.க., பங்கேற்றது வெட்கக்கேடானது...' என்று கூறியுள்ளார் அமைச்சர் ரகுபதி.'மக்களை பிளவுபடுத்த சங்கிகளால் நடத்தப்படும் மாநாடு இது!' என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சொல்கிறார்.மாநாட்டிற்கு எவரும் போக மாட்டார்கள். கூட்டம் சேராது என்று சொன்னவர்கள், மாநாட்டிற்கு வந்த மக்கள் வெள்ளத்தை பார்த்து, இப்போது பதற்றத்தில் கதறுகின்றனர். தமிழகத்திலும் ஹிந்து ஓட்டு வங்கி உருவாகிவிடுமோ என்ற அச்சமே பதற்றத்திற்கு காரணம்!அதனால் தான், மாநாட்டிற்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தினர்.கூட்டத்தில் அண்ணாதுரையையும், ஈ.வெ.ரா.,வையும் இழிவுபடுத்தி விட்டனர் என்று ரொம்பவும் தான் கவலைப்படுகின்றனர். அக்காலத்தில், பிள்ளையார் சிலைகளை உடைத்தவர் தானே ஈ.வெ.ரா., அதை தானே இரண்டு நிமிட வீடியோவாக வெளியிட்டுள்ளனர்? இதில் என்ன தவறு?ஈ.வெ.ரா., செய்தது எல்லாம் இப்போது பொது வெளியில் தெரிந்தால், தன்மானமுள்ள ஹிந்துக்கள் நமக்கு ஓட்டு போடமாட்டார்கள் என்று, தி.மு.க., வும், அதன் கூட்டணி கட்சிகளும் பயப்படுவது நன்றாகவே தெரிகிறது. ஹிந்து தர்மத்தை டெங்கு, மலேரியா போல் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்று பேசினால், அது மதசார்பற்ற தன்மையாம். ஜாதி வேற்றுமைகளை கடந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும் என்று ஹிந்து முன்னணி மாநாடு நடத்தினால் அது மதவாதமாம்... நன்றாக இருக்கிறது உங்கள் நியாயம்!

'ஏர்டெல்'லை முன்னுதாரணமாக கொள்வரா?

சி.ஷிவானி, செங்கோட்டை யில் இருந்து அனுப்பிய, 'இ-மெயில்' கடிதம்: 'ஸ்மார்ட்' போன்களை உபயோகிப்போரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதேபோல், ஆன்லைன் மோசடிகளில் பணத்தை இழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. சமீபத்தில், 'லிங்க்' அனுப்பி, 1.5 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக கோவில் பட்டி நகர தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இத்தகைய மோசடிகளைதடுத்து, அதிலிருந்து பொது மக்களை காக்க வேண்டும் என்பதற்காக தொலைத்தொடர்பு ஆணையமும், சைபர் கிரைம் போலீசாரும், ஊடகங்களும் எவ்வளவோ விழிப்புணர்வு தகவல்களை வெளியிட்டு வந்தாலும், ஏமாறுவோரின் எண்ணிக்கை குறைந்தபாடில்லை.இந்நிலையில், தனியார் தொலைதொடர்பு நிறுவனமான ஏர்டெல், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இதுவரை, ஒரு லட்சத்து, 80,000 மோசடி லிங்குகளை கண்டுபிடித்து, தன் வாடிக்கையாளர்கள் ஏமாறுவதை தடுத்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன.எனவே, அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும், ஏர்டெல் நிறுவனத்தை போல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, தங்கள் வாடிக்கையாளர்கள் ஏமாறுவதை தடுக்கலாமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

D.Ambujavalli
ஜூன் 30, 2025 18:57

ஈ. வே. ரா பெயராலேயே திமுகவுக்கு தேர்தல் பிரசனையாகும் நிலையில், முருகன் மாநாட்டில் வேறு அவரது ஹிந்து எதிர்ப்புக்கொள்கையின் சாட்சியான பிள்ளையார் உடைப்பை காட்டி கொஞ்சம் நஞ்சம் ஹிந்து ஆதரவையும் உடைத்து விட்டார்களே என்ற பதற்றம்தான் இப்படி உளற வைக்கிறது1


சமீபத்திய செய்தி