ஆர்.பாலமுருகன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு அலுவலகங்கள், பள்ளி - கல்லுாரிகளில் பொங்கல் விழாவை கொண்டாட அல்லது துறை சார்ந்த விழாக்கள் நடைபெற்றாலோ, சினிமா நடிகர்களை வைத்து விழாக்கள் கொண்டாடுவது பேஷன் ஆகிவிட்டது.மதுரையில், வருமான வரித்துறை அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு விழாவில், நடிகர் வடிவேலு குத்துவிளக்கு ஏற்றி, விழாவை துவக்கி வைத்துள்ளார். வடிவேலு நல்ல நடிகர் தான்... அதற்காக, இதுபோன்ற அரசு அலுவலக விழாக்களை அவர் வந்து தான் விளக்கேற்ற வேண்டுமா? வருமான வரித் துறை அதிகாரிகள் எவரும் விளக்கு ஏற்ற தகுதி இல்லாதவர்களா? எதற்கு இந்த தேவையில்லாத விளம்பரம்? யாரை திருப்திபடுத்த இதை செய்கின்றனர்?சினிமா மோகம் பாமர மக்களைத்தான் ஆட்டுவிக்கிறது என்றால், படித்தவர்களுமா இப்படி இருப்பது? நடிகர்களின் தொழில் நடிப்பது... பள்ளி - கல்லுாரி விழாக்களில் அவர்கள் எதற்காக?கல்விமான்களையும், உயர் பதவியில் உள்ள அதிகாரிகளையும் வைத்து விழாக்களை நடத்தினால், தேர்வுகளை எப்படி எதிர்கொள்வது, அதிக மதிப்பெண் பெறுவது எப்படி, வேலை வாய்ப்புகளை பெறுவது எப்படி? என, வாழ்வில் முன்னேறுவதற்கான அறிவுரைகளை வழங்குவர்.நடிகர்களை வைத்து விழாக்கள் நடத்தினால், அவர்களால் என்ன அறிவுரை வழங்க முடியும்?சரி... அந்த நடிகர்கள் தான் பள்ளி - கல்லுாரி விழாக்களுக்கு வருகின்றனரே... அப்பள்ளிக்கோ, கல்லுாரிக்கோ ஏதாவது உதவி செய்கின்றனரா என்றால் இல்லை. விழாவில் பங்கு பெறவே, பணம் வாங்கிக் கொண்டு தான் வருகின்றனர். அது யாருடைய பணம்?மாணவர்களிடம் வசூலித்து, அவர்களுக்கு கொடுக்கப்படுகிறது!வளர் இளம் பருவத்தினருக்கு, சமூகத்தில் சாதித்தவர்களை வைத்து, கல்வி, சமூகம், ஒழுக்கம், பிறருக்கு உதவி செய்தல் போன்றவற்றை கற்றுக் கொடுக்க வேண்டுமே தவிர, இப்படி, சினிமா துறையைச் சேர்ந்தவர்களை அழைத்து, அவர்கள் சிந்தனையை பாழ்படுத்தக் கூடாது! உழைப்புக்கு உண்டா நேரம் காலம்?
வெ.சீனிவாசன்,
திருச்சியில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'வாரத்தில், 90 மணி
நேரம் வேலை செய்ய வேண்டும்; அதுவே, நாட்டு முன்னேற்றத்திற்கும், தொழில்
வளர்ச்சிக்கும் உகந்தது' என்று கூறியுள்ளார், 'எல் அண்ட் டி' தலைவர்
சுப்ரமணியன்.இதை சிலர் வரவேற்றும், பலர் குறிப்பாக தொழிலாளர்கள்
சங்கத்தினர், சில அரசியல் கட்சியினர், கம்யூனிஸ்டுகள் போன்றோர் இதற்கு
கண்டனம் தெரிவித்து உள்ளனர். கடுமையாக உழைக்க வேண்டும்; உழைப்பே
உயர்வு தரும் என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. சமீபத்தில் மறைந்த
டி.வி.எஸ்., குழுமத்தைச் சேர்ந்த, சுந்தரம் கிளேட்டன் நிறுவனத்தின்
முன்னாள் செயல் இயக்குனர் லட்சுமணன் கூட, 20 வயதில், ஒரு சாதாரண தட்டச்சராக
பணியில் சேர்ந்தவர்.தன் கடுமையான உழைப்பால், நிறுவனத்தின் பல
பொறுப்புகளை ஏற்று, டி.வி.எஸ்., ேஹால்டிங்கஸ்சின் நிர்வாக இயக்குனராக
உயர்ந்தார் என்றால், உழைப்பு இல்லாமல் அது சாத்தியம் இல்லை.இப்படி
தங்கள் கடுமையான உழைப்பால் உச்சம் தொட்ட பலர் உண்டு. அதேநேரம், இன்று
பெரும்பாலான நிறுனங்களில், அலுவலக நேரங்களில், மொபைல் போனில் வெட்டிக் கதை
பேசுவதும், காபி, டீ குடிக்க என, அடிக்கடி இருக்கையை விட்டு வெளியே சென்று
வருவதும், அனைத்து அலுவலகங்களிலும் சாதாரணமாக காணலாம்! இவற்றை
தவிர்த்தாலே, ஒவ்வொரு ஊழியரும் தினமும் ஒரு மணி நேரம் கூடுதலாக உழைக்கலாம்.
உலகளவில் ஒப்பிடும்போது, நம் நாட்டில் விடுமுறைகள் அதிகம். இதை
குறைத்தால், உழைக்கும் நாட்களை மேலும் அதிகப்படுத்தலாம். உழைக்கும் நேரத்தை
அதிகப்படுத்துவதோடு மட்டுமின்றி, செய்யும் வேலைகளின் தரத்தையும்
உயர்த்தலாம்!ஒவ்வொரு ஊழியரும், தங்கள் ஒரு நாள் பணி நேரத்தை
முழுமையாக நிறுவனத்திற்கு அர்ப்பணித்தாலே போதும், நாடும் முன்னேறும்;
வீட்டில், தங்கள் குடும்பத்தினருக்கான நேரத்தையும் முழுமையாக ஒதுக்க
முடியுமே! பாத பூஜை செய்வது அத்தனை பாதகமா?
அ.யாழினிபர்வதம்,
சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பாத பூஜை செய்தல் என்ற
பெயரில் எந்த நிகழ்ச்சியும் தனியார் பள்ளிகள் நடத்தக்கூடாது' என்ற பள்ளிக்
கல்வித் துறையின் அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது; இதனால், மாணவியர் மனநிலை
பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பள்ளிக் கல்வித் துறைக்கு புகார்கள்
வந்துள்ளதாக காரணம் சொல்லப்பட்டுள்ளதை படித்து அழுவதா, சிரிப்பதா என்றே
தெரியவில்லை. திராவிட மாடல் ஆட்சியில், கல்வித் துறை ஏற்கனவே
கந்தல் துறையாக இருக்கிறது. மாணவர்களை நல்வழிப்படுத்தும் நீதி போதனை
வகுப்புகள், இன்று பள்ளிகளில் சுத்தமாக துடைத்தெறியப்பட்டு உள்ளன. வீட்டில்
பிள்ளைகளுக்கு நல்ல பழக்கங்களை போதிக்க பெற்றோருக்கு நேரமில்லை; பள்ளியில்
இப்படி நம் பாரம்பரியத்தையும், நல்ல பழக்க வழக்கங்களையும் போதிக்க
ஆசிரியர்கள் துணிந்தால், அதற்கு மதச் சாயம் பூசி, அரசியல் செய்கிறீர்களே...
அசிங்கமாக இல்லையா?பெற்றோருக்கு பாத பூஜை செய்தால், மாணவர்களின்
மனநிலை பாதிக்கப்படுகிறது... ஆனால், வீதி தோறும் டாஸ்மாக்கை திறந்து
வைத்து, சாதிக்க வேண்டிய இளைஞனும், குடும்ப பாரத்தை தோளில் சுமக்க வேண்டிய
குடும்ப தலைவனும், மது போதையில் வீதிகளில் குப்பையாக கிடக்கின்றனரே...
அதற்கு எப்போது தடை கொண்டு வரப் போகிறீர்கள்? புதிதாக அரசு
பதவிக்கு நியமிக்கப்பட்டவர்கள், அமைச்சராக பதவி ஏற்றவர்கள் அல்லது
கட்சியில் புதிதாக பொறுப்பு கிடைத்தவர்கள், முதல்வரையும், துணை
முதல்வரையும் சந்தித்து பொன்னாடை போர்த்தி, தலை வணங்கி ஆசி பெறுவது கூட,
ஹிந்து மதச் சடங்கு தான்; அதையும் தடை செய்யுங்களேன்!பள்ளிகளில்
பொதுத் தேர்வு எழுதி, அடுத்த நிலைக்கு தேர்ச்சி பெற ஆசி வேண்டி,
பெற்றோருக்கு பாத பூஜை செய்வது, தி.மு.க.,விற்கு மதச் சடங்காக தெரிந்தால்,
ஹிந்துக்களிடம் ஓட்டு கேட்டு வராதீர்கள்!திராவிட மாடல் அரசுக்கு,
ஈ.வெ.ரா., கொள்கை முக்கியமாக இருந்தால், அதை உங்கள் கட்சிக் கூட்டங்களில்,
கழக கண்மணிகளை கடைப்பிடிக்கச் சொல்லுங்கள்... பெரும்பான்மை மக்களின் உணர்வுகளுடன் விளையாடாதீர்கள்!சட்டசபை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதை மறந்து விடாதீர்கள்!