எஸ்.உதயம் ராம், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ- மெயில்' கடிதம்: குறுக்கு வழியில் எவரும் மருத்துவராகி, மக்கள் உயிருடன் விளையாடி விடக் கூடாது என்பதற்காக நடத்தப்படும் பொது நுழைவு தேர்வு தான், 'நீட்' தேர்வு!ஏழை எளிய மாணவர்களும், திறமையுள்ளவர்களும் தகுதி அடைப்படையில் மருத்துவம் பயிலவும், தனியார் மருத்துவ கல்லுாரிகளின் பகல் கொள்ளையை தடுக்கவும் உருவான இத்தேர்வுக்கு, வழக்கம் போலவே தமிழகத்தில் கழக ஆட்சிகள், ஊசிப்போன ஜாதி - மதங்களை காரணிகளாக்கி எதிர்ப்பு தெரிவித்து வருவதுடன், மாணவ - மாணவியரை பயமுறுத்தியும், குழப்பியும் வருகின்றன.இந்நிலையில், நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ - மாணவியரை தேர்வு மையங்களும், தேர்வு கண்காணிப்பாளர்களும் நடத்தும் முறை இருக்கிறதே... மிகவும் அநாகரிகமாக உள்ளது!'பொட்டு, பூ வைக்காதே, வளையல் போடாதே, பூணுாலை அறு, சிலுவையை அகற்று, மெட்டி, கொலுசு, தாலி, மூக்குத்தி, தோடு அணியாதே' என்றெல்லாம் துவங்கி, உள்ளாடை அணிவது முதல் அரைஞாண் கயிறு கட்டுவது வரை, தடை செய்வது உலக மகா கேவலம்.அறிவை சோதிக்க வேண்டிய ஒரு தேர்வுக்கு, இத்தகைய சோதனைகள் தேவை தானா? மத்திய அரசோ அல்லது நீட் தேர்வு ஆணையமோ இவற்றை கட்டாயமாக வலியுறுத்துகிறதா, இல்லை... தமிழகத்தில் மட்டும் தான் இத்தகைய திணிக்கப்பட்ட கெடுபிடிகளா? ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு வெவ்வேறு வகையில் போராட்டங்களை முன்னெடுக்கும் ஆட்சியாளர்களும், கட்சிகளும், கட்சி சார்ந்த கல்வி தந்தைகளும், மாணவர்களிடையே குழப்ப அரசியல் செய்து, தங்களை வளர்த்துக் கொள்ளும் சில அரைவேக்காடு அமைப்புகளும், இத்தகைய கெடுபிடிகளை தமிழகத்தில் திணித்து, மாணவ - மாணவியர் மத்தியில் நீட் தேர்வு குறித்த பயத்தையும், வெறுப்பையும் ஏற்படுத்துகின்றனவா? எதுவும் தெரியவில்லை.வேறு எந்த நுழைவு தேர்வுகளுக்கும் இல்லாத நெருக்கடிகளும், கெடுபிடிகளும் மக்களின் உயிரை காப்பாற்றும் மருத்துவ துறைக்கு மட்டும் ஏன்?தேர்வு எழுத வரும் மாணவ - மாணவியருக்கு, மனம் மற்றும் உடல் ரீதியான இத்தகைய உளைச்சல்கள் எதற்காக? இதுபோன்ற மட்டரகமான சோதனைகள் நடத்தி, அவர்களுக்கு மன அழுத்தம் தரும் விதிமுறைகள் விரைவில் மாற்றப்பட வேண்டும்! உலகிற்கு உணர்த்திய செய்தி!
வ.ப.நாராயணன்,
செங்கல் பட்டிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பஹல்காம்
தாக்குதலுக்கு பதிலடியாக, 'ஆப்பரேஷன் சிந்துார்' என்ற பெயரில் பாகிஸ்தான்
பயங்கரவாதிகளின் ஒன்பது முகாம்கள் மீது, ஏவுகணை தாக்குதல் நடத்தி,
பயங்கரவாதிகள், 60 பேரை நம் ராணுவம் அழித்து உள்ளது. இத்தாக்குதலை
முன்னின்று நடத்தியவர்கள், விங் கமாண்டர் வியோமிகா சிங் மற்றும் கர்னல்
சோபியா குரேஷி என்ற இரு பெண்கள் என்பது, உலக நாடுகளையே வியப்படைய
வைத்துள்ளன.அப்பாவி பெண்களின் கணவர்களை கொன்று, அவர்கள் நெற்றி
குங்குமத்தை அழித்த பயங்கரவாதிகளை அழிக்க, 'சிந்துார்' என்று
தாக்குதலுக்கு பெயரிட்டு, பெண்களை வைத்தே தாக்கி அழித்த பிரதமரின்
சாதுர்யம், பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.குறிப்பாக, பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஓர் ஆறுதலை தந்துள்ளது.இந்த
கொடூரமான தாக்குதலுக்கு, உடனடியாக ராணுவ நடவடிக்கை எடுக்காமல், சிந்து நதி
நீரை நிறுத்தி, பாகிஸ்தானியர்களை வெளியேற்றி, அங்கிருந்த இந்தியர்களை
இங்கு வரச் செய்து... உலக நாடுகளிடம் பாகிஸ்தானின் நடவடிக்கைகளை
எடுத்துரைத்தது என, எல்லா முன்னேற்பாடுகளையும் செய்து முடித்து, கடைசியில்,
பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய, அதே செவ்வாய் கிழமையில் பதிலடி
கொடுத்திருப்பது, பிரதமரின் சமயோஜிதத்தையே காட்டுகிறது.ஹிந்துக்களின்
கலாசாரப்படி, இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடைய, 16ம் நாள் சடங்கு செய்வது
வழக்கம். அச்சடங்கை, பயங்கரவாதிகளை அழித்ததன் வாயிலாக நடத்திக் காட்டி
விட்டார் பிரதமர்!பெண்களின் குங்குமத்தை அழித்தவர்கள், அதே பெண் குலத்தின் தாக்குதலில் அழிக்கப்பட்டு உள்ளனர். இத்தேசம்,
ஜான்சிராணி, வேலுநாச்சியார் போன்ற எத்தனையோ வீராங்கனையரை கண்டுள்ளது.
அவர்களில் ஒருவராக வியோமிகா சிங், சோபியா குரேஷியும் இனி வரலாற்றில்
பேசப்படுவர்! கருணாநிதி சாதித்தது என்ன?
என்.ராமகிருஷ்ணன்,
பழனியில் இருந்து எழுதுகிறார்: 'கும்பகோணத்தில் விரைவில் கலைஞர் பல்கலை
ஏற்படுத்தப்படும்' என்று சட்டசபையில் அறிவித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின்.
'ஊரான் வீட்டு நெய்யே, என் பொண்டாட்டி கையே' என்பதை போல், மக்கள்
வரிப்பணத்தில், 80 கோடி ரூபாயில் பேனா சின்னம், 70 கோடி ரூபாயில் நுாலகம்,
40 கோடி ரூபாயில் பூங்காக்கள் என்று, கருணாநிதி பெயரில் செயல்பட்டு
வருகின்றன. இப்போது பல்கலைக்கு கருணாநிதி பெயர் வைக்கப் போகிறாராம்!நாட்டுக்காக
தன் சொத்தை இழந்து, சிறையில் செக்கிழுத்து, தன் இளமையை தொலைத்த
சிதம்பரனார், தொழுநோயாளியாக இறந்து போன சுப்பிரமணிய சிவா, கால்நடையாகவும்,
சொந்தப் பணத்திலும் ஊர் ஊராக அலைந்து, தமிழ் நுால்களை தொகுத்து,
தமிழர்களின் அடையாளத்தை உலகிற்கு கொண்டு வந்த உ.வே.சா., இப்படி
எண்ணற்ற தலைவர்கள் தமிழகத்தில் அடையாளம் தொலைந்து கிடக்க, ஆட்சி
அதிகாரத்தில் இருந்து மூன்று தலைமுறைக்கு சொத்து சேர்த்த கருணாநிதியின்
பெயரில் பல்கலை!அதேநேரம், கோவை பேருந்து நிலைய கழிப்பறைக்கு அண்ணாதுரை, கக்கன் பெயர்!கருணாநிதியின் புகழ் பரப்ப பட்ஜெட்டில் இத்தனை ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று ஸ்டாலின் அறிவித்திருக்கலாம்!ஏற்கனவே, ஒரு பல்கலைக்கு பேராசிரியர் அன்பழகன் பெயரை வைத்தார் ஸ்டாலின். அண்ணாதுரை
இறந்த பின், 'கருணாநிதியை தலைவராக ஏற்றுக் கொண்டால், வீட்டில் என் மனைவியே
என்னை மதிக்க மாட்டார்' என்று பேட்டி கொடுத்தவர் அன்பழகன். பின்,
கருணாநிதியை தலைவராக ஏற்று, அவர் சொல்வதற்கெல்லாம் தலையாட்டியதை தவிர,
அன்பழகன் என்ன சாதித்து விட்டார் என்று, பல்கலைக்கு அவர் பெயர்
சூட்டப்பட்டது? ஸ்டாலின் மீண்டும் முதல்வரானால், தமிழ்நாட்டிற்கு,
கருணாநிதி நாடு என்றும், மாவட்டங்களுக்கு தன் குடும்ப உறுப் பினர்களின்
பெயர்களை வைத்தாலும் ஆச்சரியமில்லை!