உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / தமிழக அரசு யோசிக்குமா?

தமிழக அரசு யோசிக்குமா?

அண்ணா அன்பழகன், அந்தணப்பேட்டை, நாகை மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'கடன் வாங்கி அட்டிகை வாங்கினால், அட்டிகையை வித்து வட்டியைக் கட்டணும்' என்பது கிராமத்து சொலவடை!அதுபோன்று தான் உள்ளது, தமிழக அரசின் இன்றைய நிலைமை!ஆட்சி, அதிகாரத்திற்கு வர வேண்டும் என்பதற்காக, மாநிலத்தின் நிதி நிலையைப் பற்றி சிறிதும் அக்கறைப்படாமல், ஏகப்பட்ட இலவசங்களை அறிவித்து, ஆட்சிக்கு வந்தது, தி.மு.க.,இந்த மூன்றரை ஆண்டுகளில், இலவசதிட்டங்களுக்கான நிதிக்கு கடனை வாங்கி, அக்கடனை அடைக்க, பல்வேறு வரிகளை விதித்து, இப்போது, ஒட்டு மொத்த தமிழக மக்களையும் மூச்சுத் திணற வைத்துக் கொண்டிருக்கிறது, திராவிட மாடல் அரசு!கடந்த ஆட்சியில், கடன் வாங்கியதில் தேசிய அளவில் இரண்டாவது இடத்தில் இருந்த தமிழகம், தி.மு.க., ஆட்சிக்கு வந்தபின், 2024ல் கடன் வாங்கியதிலும், வட்டி செலுத்துவதிலும், தேசிய அளவில் முதலிடம் வகிக்கிறது. 'தமிழகத்தை முதன்மை மாநிலமாகஆக்குவதாக வாக்குறுதி தந்து, ஆட்சிக்கு வந்த, தி.மு.க., இன்று கடன் வாங்குவதிலும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுவதிலும் தான் முதலிடம் வகிக்கிறது' என, பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். 'இப்படியே போனால், தமிழக அரசு விரைவில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படலாம்' என்றும் எச்சரித்து உள்ளார். நிதி நிலைமையை சரி செய்ய, அரசு போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். மணல், கிரானைட், தாதுமணல் விற்பனையை அரசே நடத்தினால், அதில் கிடைக்கும்அதீத வருமானம் தனியாருக்கும், அதிகார வர்க்கத்திற்கும் செல்வதற்கு பதில் அரசு கஜானாவிற்கு வரும்!அத்துடன், ஆடம்பர, அனாவசிய செலவுகளை அரசு கட்டுப்படுத்தினால் மட்டுமே, தமிழகம் தப்பிக்கும்!மாறாக, நிதி நிலைமையை சமாளிக்க, மக்கள் மீது மேலும் வரி திணிப்பை செய்தால், 2026 சட்டசபை தேர்தலில், தி.மு.க., அனைத்து தொகுதிகளிலும், 'டிபாசிட்' இழப்பது நிச்சயம்!lll

அவப்பெயரை ஏற்படுத்தாதீர்!

என்.வைகை வளவன், மதுரையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'தமிழகத்தில் தி.மு.க., மூழ்கும் கப்பலாக இருப்பதால், அதிலிருந்து திருமாவளவன், வேல்முருகன் போன்றோர் வெளியேறும் எலிகளாக உள்ளனர்' என்று கூறியுள்ளார், பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா.தமிழகத்தில் இருக்கும் அரசியல் கட்சிகளில், தற்போது மிகவும் பலம் வாய்ந்த கட்சியாக இருப்பது, தி.மு.க., என்பது அனைவரும் அறிந்த விஷயம். பா.ஜ.,வை பொறுத்தவரை, இத்தனை ஆண்டுகள் ஆகியும், அது ஒரு வளராத கட்சியாகத் தான் இருக்கிறது.இவ்வளவு ஆண்டுகளாக பா.ஜ.,வில் இருந்தும், ராஜாவால் ஒரு எம்.எல்.ஏ., - எம்.பி.,யாகவோ, அட்லீஸ்ட் ஒரு கவுன்சிலராக கூட ஆக முடியவில்லையே? கடந்த சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க.,வுடன் கூட்டணி வைத்ததால் தான், பா.ஜ., சில இடங்களிலாவது வெற்றி பெற முடிந்தது. லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் வைத்திருந்த கூட்டணியை, அ.தி.மு.க., விலக்கிக் கொண்டதால், அக்கட்சியால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியவில்லை.வரும் சட்டசபை தேர்தலிலும், அக்கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற வாய்ப்பே இல்லை.இந்த லட்சணத்தில், 'தி.மு.க., மூழ்கி விடும் கப்பல்' என்று ராஜா சொல்வது அபத்தமாக உள்ளது. எனவே, வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி, பா.ஜ., கட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டாம்!lll

ரூ.1.35 லட்சம் கோடி வீண்!

ஆர்.ெஷண்பகவல்லி, சென்னையிலிருந்து எழுதுகிறார்: கடந்த 2024 லோக்சபா தேர்தலுக்கு, நம் வரிப்பணம் எவ்வளவு செலவாகி உள்ளது தெரியுமா... கிட்டத்தட்ட, 1.35 லட்சம் கோடி ரூபாய்!இத்தொகையை, மொத்தமுள்ள எம்.பி.,க்கள் எண்ணிக்கையான 543ஆல் வகுத்தால், கிட்டத்தட்ட, 249 கோடி ரூபாய். அதாவது, ஒரு எம்.பி.,யைத் தேர்வு செய்ய, 249 கோடி ரூபாயை நாம் செலவு செய்கிறோம்.எதற்காக எம்.பி.,யை நாம் தேர்வு செய்து, லோக்சபாவுக்கு அனுப்புகிறோம்? நம் ஊர் பிரச்னைகளை எடுத்துச் சொல்லி, அவரின் பதவிக் காலமான ஐந்து ஆண்டுகளுக்குள் அதற்கு தீர்வு கண்டு, நம் வாழ்க்கையை எளிதாக்கிக் கொள்ள!ஆனால், லோக்சபாவில் என்ன நடக்கிறது... ஒவ்வொரு எம்.பி.,யும், அலுங்காமல் குலுங்காமல், அழகு குலையாமல், 'மேக் அப்' செய்து கொண்டு, கையில் ஸ்டைலாய் லேப்டாப் பையுடன், டில்லிக்குப் பறந்து, அங்கே பந்தா காட்டி, அதே பந்தாவுடன் சபைக்குள் நுழைந்து, அங்கே சக எம்.பி.,க்களைக் குசலம் விசாரித்து, 'இன்றைக்கு என்ன பிரச்னைக்கு கொடி துாக்கலாம்...' என கலந்தாலோசித்து, ஆளுங்கட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்து, அதே ஸ்டைலுடன் பார்லி., வளாகத்தில் நின்று, 'போட்டோ ஷூட்' செய்து, அதே நாள், 'டிவி'க்களிலும், அடுத்த நாள் பத்திரிகைகளிலும் தம் படங்கள் வெளியாகி விட்டனவா என்று சரிபார்த்து...அடுத்த நாளும், அதே ஸ்டைலுடன் ஒயிலாய் சபைக்குள் சென்று, அதே போல், 'போட்டோ ஷூட்' நடத்தி... இது போன்று சீன் போடுவதில், லோக்சபாவிலேயே வயது முதிர்ந்த, அதாவது, 82 வயதான, தி.மு.க., - எம்.பி.,யான டி.ஆர்.பாலு முதற்கொண்டு, பீஹாரின், லோக் ஜனசக்தி கட்சியின், 25 வயதே நிரம்பிய எம்.பி., சாம்பவி வரை, யாருமே விதிவிலக்கல்ல.'உங்கள் தொகுதியின் பிரச்னைகள் என்னென்ன?' என்று ஏதாவது ஒரு எம்.பி.,யை சும்மா விளையாட்டுக்குக் கேட்டால் கூட, 'பெப்பே' என முழிப்பர் என்பது தான் நிதர்சனம்.சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட, கேரளாவின் வயநாடு தொகுதி எம்.பி., பிரியங்காவோ, வந்த நாள் முதல், இந்த நாள் வரை, போட்டோவுக்கு போஸ் கொடுப்பதிலேயே மும்முரமாய் இருக்கிறார். வயநாட்டில் நிலச்சரிவு குறித்து, லோக்சபாவில் பேசினாரா? இல்லை! அத்தொகுதிக்குத் தேவையான பணத்தைக் கேட்டு வாங்க முயன்றாரா? இல்லை!பா.ஜ.,வின் ஆட்சியைக் குறை சொல்லி, 'அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரான ஆட்சி இது' என்று தான் முதல் பேச்சை எடுத்து வைத்தார். நம்மூர்எம்.பி.,க்களோ, ஒரு படி மேலே சென்று, பதாகையை எப்படி ஏந்தி நின்றால் போட்டோவில் தெரியலாம் என்று ஆலோசித்து, அதற்கு ஏற்றவாறு போஸ் கொடுத்தனர்.இதற்காகவா நாம், 1.35 லட்சம் கோடி ரூபாயை செலவு செய்தோம்? நமக்குரிய பிரச்னைகளை யார் தீர்ப்பது? நமக்குரிய தேவைகளை யார் பூர்த்தி செய்வது?ஐந்து ஆண்டு ராணுவ ஆட்சி நடந்தால், இந்த எம்.பி.,க்கள் அனைவரும், துண்டைக் காணோம், துணியைக் காணோம் என்று ஓடி விடுவர். ஒரு கை பார்ப்போமா?lll


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Anantharaman Srinivasan
டிச 25, 2024 14:40

ஐந்து ஆண்டு ராணுவ ஆட்சி போதாது. ஒரளவு ஜனநாயகம் சீரடைய குறைந்தது 50 ஆண்டுகள் தேவை.


Barakat Ali
டிச 25, 2024 12:05

இந்திய வாக்க்காளர்கள் ஜனநாயக முதிர்ச்சி அடையவில்லை ..... தேர்தல் சீர்திருத்தம் சில அடிப்படை விஷயங்களில் செய்யப்பட வேண்டும் .... 1. வாக்களிக்க குறைந்த பட்ச வயது முப்பது ..... அதிகபட்ச வயது அறுபது .... 2. வாக்களிக்க கல்வித்தகுதியாக பட்டயம் - டிப்ளமா - மற்றும் பட்டதாரிகளுக்கு மட்டுமே வாக்களிக்க உரிமை .... அதற்கு குறைவாகப் படித்த வாக்காளர்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படக் கூடாது அதே போல குற்றவாளியாக ஏதேனும் ஒரு வழக்கில் சேர்க்கப்பட்டால் கூட அந்த வாக்காளர் வாக்குரிமையை ஆயுள் முழுவதும் இழப்பார் .... விசாரணை, தீர்ப்பு க்காகக் காத்திருக்கக் கூடாது 3. மக்கள் பிரதிநிதிகள் சரியாகச் செயல்படாவிட்டால் அவர்களைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் உரிமை வாக்காளர்களுக்கு வேண்டும் ..... அதுவும் தேர்ந்தெடுத்து ஒரு ஆண்டு முடிந்த உடனேயே ..... இந்த மூன்று அம்சங்கள் குறைந்த பட்சத் தகுதியாக பிரதமர் வேட்பாளரில் இருந்து அனைத்து மக்கள் பிரதிநிதி பதவிகளுக்காகப் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுக்கும் கட்டாயமாக்கப்பட வேண்டும் ... இந்த மூன்று அம்சங்களையும் செயல்படுத்தினால் கூடப்போதும் .... நாடு வல்லரசாகாவிட்டாலும் சுபிட்சம் அடையும் ....


Barakat Ali
டிச 25, 2024 11:53

மணல், கிரானைட், தாதுமணல் விற்பனையை அரசே நடத்தினால், அதில் கிடைக்கும்அதீத வருமானம் தனியாருக்கும், அதிகார வர்க்கத்திற்கும் செல்வதற்கு பதில் அரசு கஜானாவிற்கு வரும் ..... உண்மைதான் .... அவற்றை எடுத்து விற்பது எந்தக்கட்சியின் பிரமுகர்கள் என்று பார்த்தால் ஏன் அரசு நடத்தவில்லை என்பது விளங்கும் ....


Dharmavaan
டிச 25, 2024 11:53

கேவலமான சுயநல திருடர்கள் பொறுப்பற்ற பொது நோக்கில்லாத கொள்ளையர்கள் நமது எம் பிக்கள் எம் எல் ஏ க்கள.இது போன்ற அமைப்பு இந்தியாவிற்கு லாயக்கற்றது .இதை விட ராணுவ ஆட்சி மேல்


Dharmavaan
டிச 25, 2024 09:50

இந்நாட்டுக்கு சில ஆண்டுகள் ராணுவம் ஆட்சி தேவை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை