உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / இது உங்கள் இடம் / இடஒதுக்கீடு சட்டத்தில் மாற்றம் வருமா?

இடஒதுக்கீடு சட்டத்தில் மாற்றம் வருமா?

 எ.சுப்பு, சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: பொருளாதார ரீதியாக பின் தங்கிய ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.அதேநேரம், ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரும் அதன் வாயிலாக பலன் பெற்றுள்ளனரா என்று கேட்டால், இல்லை என்பது தான் எதார்த்தமாக உள்ளது.காரணம், ஒரு குடும்பத்தில் ஒருவர் இடஒதுக்கீடு வாயிலாக கல்வி மற்றும் வேலை வாய்ப்பை பெற்று, சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைகிறார் என்றால், அவரை தொடர்ந்து, அவரது பிள்ளைகளும், பேரப்பிள்ளைகளும் இடஒதுக்கீடு வாயிலாக பலன் அடைகின்றனரே தவிர, ஏழைக் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அதன் பலன் கிடைப்பதில்லை. இது அடுத்தவருக்கு கிடைக்கும் வாய்ப்பை தட்டிப் பறிக்கும் செயல்!இடஒதுக்கீட்டின் உண்மையான நோக்கமே, அனைவருக்கும் சம வாய்ப்பு வழங்க வேண்டும் என்பது தான்!ஒரு சமுதாயத்தில் குறிப்பிட்ட சதவீதத்தினர் ஏழைகளாகவே இருப்பதும், மற் றொரு தரப்பினர் இடஒதுக்கீட்டின் பலனை தொடர்ந்து அனுபவித்து வருவதும், இட ஒதுக்கீட்டிற்கான நோக்கத்தையே செயல் இழக்க செய்து விடுகிறது.இதைத் தவிர்க்க,'இடஒதுக்கீட்டின் சலுகை ஒரு குடும்பத்திற்கு ஒரு முறை தான்' என்ற சட்ட திருத்தத்தை அரசு கொண்டு வரவேண்டும்.இடஒதுக்கீடு வாயிலாக கல்வி மற் றும் வேலை வாய்ப்பை ஒரு குடும்பத்தில் ஒருவர் பெற்றிருந்தால், அவர்கள் பிள்ளைகளுக்கு கல்வியிலோ, வேலை வாய்ப்பிலோ இடஒதுக்கீடு கொடுக்கக் கூடாது.அப்படி செய்யும் போது, இடஒதுக் கீட்டின் பலனை அனுபவிக்காத ஏராளமான எளிய மக்கள் பலன் அடைவர்; அவர்கள் வாழ்வும் பொருளாதார வளம் பெரும்!மத்திய - மாநில அரசு ஆலோசிக்குமா?

வெற்றுப்பேச்சு வீரர்கள்!

டி.ஈஸ்வரன், சென்னை யில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டசபை யின் கதவுகள் பூட்டப்படும் என்று சொன்ன முதல்வர் விஜய்யின் எலும்பு களை உடைப்பேன்' என, தி.மு.க., பொதுக்கூட்டத்தில் வீரவசனம் பேசி, அதன் விளைவாக கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டவர், அக்கட்சி எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன். இந்நிலையில், சட்டசபை யில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது, பாரதியாரின் கவிதைகளை மேற்கோள் காட்டி, சிங்கம் போல் கர்ஜித்துக் கொண்டிருந்தார், மார்க்கண்டேயன். இடையில் குறிக்கிட்ட சபாநாயகர், 'விஜய் குறித்து மார்க்கண்டேயனின் பேச்சுக்கு விசாரணை நடத்தப்படும்' என்றதும், மார்க்கண்டேயரின் சுருதி குறைந்து, 'சபையின் கதவுகள் பூட்டப்படும் என்றதால், என்னை அறியாமல் கூறிய வார்த்தைகளை அருள்கூர்ந்து மறந்து விடவேண்டும்' என்று சொல்லி, பூனை போல் நைசாக அமர்ந்து விட்டார். இதேபோன்று தான், அ.தி.மு.க.,விலும் ஒரு சம்பவம் நடந்தது. கடந்த 1987ல் எம்.ஜி.ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதா - ஜானகி என அ.தி.மு.க., இரண்டு அணியாக பிளவுபட்டது. இதில், 97 எம்.எல்.ஏ.,க் கள் ஜானகியை ஆதரித்தனர்; 34 பேர் முன்னாள் அ.தி.மு.க., அமைச்சர் சாத் துார் ராமச்சந்திரன் தலைமை யில் ஜெயலலிதாவை ஆதரித்தனர். ஜானகி ஆட்சி மீது நம் பிக்கை ஓட்டெடுப்புக்கு முன், சென்னை கோடம்பாக் கத்தில், ஜானகி அணி யினர் பொதுக்கூட்டம் நடத் தினர். அதில், அப் போதைய சபாநாயகர் பி.எச். பாண்டியன் பேசும்போது, 'சட்டசபையை பூட்டி, சாவியை என்னிடம் வைத்துள்ளேன். ஜெயலலிதாவின், 34 எம்.எல்.ஏ.,க்கள் என்னை மீறி எப்படி உள்ளே செல்கின்றனர் பார்ப்போம்' என்று கர்ஜித்தார். அச்சமயம், அதேபகுதியின் மற்றொரு இடத்தில் ஜெயலலிதா அணியின் பொதுக்கூட்டமும் நடைபெற்றது. அதில் சாத்துார் ராமச்சந்திரன் பேசும்போது, 'பாண்டியன் கையில் சாவி இருந்தால், அந்த கையை உடைத்து, சாவியை பிடுங்கி, பூட்டை திறந்து, 34 எம்.எல்.ஏ.,க்களை சட்டசபைக்குள் அழைத்துச் செல்வேன்' என்று பதிலுக்கு கர்ஜனை செய்தார். அக்காலத்தில் சமூக வலைதளங்கள் இல்லை; அதனால், சட்டசபை செயலரிடம் உள்ள சாவியை பொது வெளியில் காண்பித்ததற்காக, சபாநாயகர் பாண்டியன் மீதும், அவர் கையை உடைப்பேன் என்று சொன்ன சாத்துார் ராமச் சந்திரன் மீதும் வழக்கு பாயவில்லை. இப்படி மேடையில் அரசியல்வாதிகள் வீரவசனம் பேசுவதெல்லாம், தலைமை யின் கவனத்தை ஈர்க்க போடும் நாடகமே அன்றி வேறில்லை. அதேநேரம், வழக்கு என்று வந்து விட்டால், இந்த அட்டைக் கத்தி வீரர்கள், மார்க்கண்டேயன் போல் பம்பி பதுங்கி விடுவர்! உடுக்கையை துாக்க தெம்பில்லாதவன், 'மலையை புரட்டி மகாதேவனை காண்பேன்' என்பது போன்றது தான் அரசியல்வாதிகளின் இத்தகைய வெற்றுப் பேச்சுகள்!

எலிக்கு, பூனைகள் பங்காளிகள் ஆகலாமா ?

அ.குணசேகரன், வழக்கறிஞர், புவனகிரி, கடலுார் மாவட்டத்தில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: அரசு அலுவல கங்களில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் முதல், சாதாரண அடிமட்ட ஊழியர்கள் வரை, தங்கள் பதவிக்கு ஏற்ப ஊழல் செய்து சொத்துக்கள் வாங்கி குவித்து வருவது அனைவரும் அறிந்த விஷயம் தான். ஊழலை தடுக்க வேண்டிய ஊழல் தடுப்பு போலீசாரோ, 'லஞ்சம் வாங்கினேன் கைது செய்தனர்; லஞ்சம் கொடுத்தேன் விடுதலை செய்தனர்' என்பதற்கு இலக்கணமாக உள்ளனர். இதனாலேயே, ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கிய அரசு ஊழியர்கள் தண்டிக்கப்படுவது அரிதாகவே உள்ளது. ஆனால், அரசியல் பின்புலம் உள்ள குற்றவாளிகள் தண்டிக்கப்படுவது இல்லை. ஆயிரம், இரண்டாயிரம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர்களை பொறி வைத்து பிடிக்கும் ஊழல் தடுப்புப் போலீசார், கோடி கோடியாக லஞ்சம் வாங்குவோரை நெருங்கக் கூட தயங்குகின்றனர். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி பேரூராட்சியில் நடந்த முறைகேடுகள் சம்பந்தமாக தொடரப்பட்ட வழக்கில், செயல் அலுவலர்கள் ஆறு பேர் மீது ஊழல் தடுப்புப் பிரிவு போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும், அவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. அதுகுறித்து கேள்வி எழுப்பியுள்ள உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள், 'நீதிமன்றம் உத்தரவிட்டும் குற்றவாளிகள் மீ து நடவடிக்கை எடுக்கா த ஊ ழல் தடுப்பு போலீசார் , பொதுமக்கள் அரசு அறிவித்துள்ளதுபோல், 'வாட்ஸாப்' எண்ணில் புகார் அனுப்பினால் மட்டும் எப்படி நடவடிக்கை எடுப்பர்?' என்று கேள்வி எழுப்பி உள்ளனர். தற்போது, தமிழக அரசு ஊழலை முற்றிலும் ஒழிக்க நினைக்கிறது; ஆனால், சம்பந்தப்பட்ட துறையோ, ஊழல்வாதிகளை காப்பாற்ற துடிக்கிறது. வீட்டை நாசம் செய்யும் எலியைப் பிடிக்க வேண்டிய பூனைகள், எலிக்கு பங்காளிகள் ஆனால், வீட்டை காப்பாற்றுவது எப்படி?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

D.Ambujavalli
ஆக 13, 2026 19:14

' லஞ்ச. ஒழிப்பு. '. Serial இல். மட்டும். Tom And Jerry . சமர்த்தாகக் கைகுலுக்கி. 'கூட்டு. பிசினெஸ். '. செய்வார்கள்.


Anantharaman Srinivasan
ஆக 13, 2026 18:15

அதிமுக வில் காளிமுத்து மயிலை பொது கூட்ட மேடையில் பேசும்போது ஜெயலலிதாவை தூக்கிப்போட்டு என் கால்களால் Football போல் பந்தாடுவேன் என்று வீரவசனம் பேசினார். பின்னாளில் அவளிடமே தஞ்சமடைந்து சபாநாயகராகவும் மந்திரியாகவும் பிழைப்பை நடத்தினார். எனவே அசியல்வாதிகளுக்கு சூடு சொரணை எல்லாம் இரண்டாம் பட்சம் தான். பிழைப்பு நடக்கணும்.


ellar
ஆக 13, 2026 10:49

தூங்கி எழுந்த நபர் எழுதிய கடிதமாக இருக்கிறது 10 வருடங்களுக்கு மேல் கிருமி லேயர் என பேசப்படுவது என்ன என்பதை பார்த்தால் இதற்காகத்தான் ஓரளவுக்கு முன்னேறியவர்களுக்கு ஒதுக்கீடு தொடர்ந்து தராமல் முன்னேறாமல் இருப்பவர்களுக்கு ஒதுக்கீடு கொடுக்க முயற்சி செய்யப்பட்டது ஓட்டு வங்கி அரசியலால் இது கை கூடாமல் குழப்பங்கள் தொடர்கின்றன அதனால் தான் உச்ச நீதிமன்றமும் இதைப் பற்றிய கேள்விகளை பலமுறை கேட்டுள்ளது தங்களது பத்திரிக்கையாவது இம்மாதிரியான கடிதங்களை சிறிது மாற்றி அமைக்கலாம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை