அரசியலில் இருந்து ஒதுங்குவாரா துரை வைகோ?
எஸ்.ராமசுப்பிரமணியன், சென்னையில் இருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'இன்றைக்கும் எனக்கு அரசியலும், அரசியல்வாதிகளையும் பிடிக்காது. பலரின் நிர்ப்பந்தத்தால் தான் அரசியலுக்கு வந்தேன். இங்கு கேடு கெட்ட அரசியலும் இருக்கிறது. சாதாரண மனிதர்களும், மனசாட்சி உள்ளவர்களும் அரசியலில் பயணிக்க முடியாது. என் ஏழு ஆண்டு அரசியல் பயணத்தில், வேதனை தான் கிடைத்தது' என்று புலம்பியுள்ளார், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக தலைவர் வைகோவின் மகனும், அக்கட்சி எம்.பி.,யுமான துரை வைகோ. தனக்கு பின் கட்சியும், அதன் சொத்துக்களும் அடுத்தவர்களின் கைகளுக்கு போய் விடக் கூடாது என்று எண்ணி, சிகரெட் வியாபாரம் செய்து கொண்டிருந்த தன் மகன் துரையை, வலுக்கட்டாயமாக கட்சிக்கு இழுத்து வந்தார், வைகோ. அதுமட்டுமா... கட்சியின் மூத்த தலைவர்கள், துரைக்கு எந்த வகையிலும் இடையூறாக இருந்து விடக் கூடாது என்பதற்காக, ஒவ்வொருவராக கழற்றி விட்டவர், மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி எப்படி கொலை பழி சுமத்தி, தி.மு.க.,விலிருந்து வைகோவை வெளியேற்றினாரோ, அதுபோன்று, ஆரம்ப காலத்தில் இருந்தே தன் வலது கரமாக இருந்த மல்லை சத்யா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை கூறி, கட்சியில் இருந்து வெளியேற்றினார், வைகோ. இதைவிடவா ஒரு கேடு கெட்ட அரசியல் இருக்கப் போகிறது? திருச்சி தொகுதியில் தன் மகனை நிற்க வைக்க வேண்டும் என்பதற்காகவே, ஈரோடு தொகுதியை, தி.மு.க.,விற்கு விட்டுக் கொடுத்ததுடன், தன் ஆரம்ப காலத்தில் இருந்து தனக்கு மிகவும் விசுவாசமாக இருந்த கணேச மூர்த்திக்கு சீட் மறுக்கப்பட்டு, தன் மகனை வேட்பாளாராக நிறுத்தினார், வைகோ. கணேச மூர்த்தி, பின்பு தற்கொலை செய்தது வேறு விஷயம். இப்படி தந்தையும், தனயனும் உடன் பயணித்தவர்களை துச்சமாக நினைத்து, அவர்கள் மார்பின் மீது ஏறி பயணப்பட்டதை மறந்து, மனசாட்சி குறித்துபேசுகிறார் துரை! அவ்வளவு மனசாட்சி இருந்தால், அடுத்து வரும் தேர்தல்களில் துரை போட்டியிடாமல், கட்சி தொண்டர்களுக்கு வாய்ப்பு கொடுப்பாரா? வித்தார கள்ளி விறகு வெட்ட போனாளாம்; கற்றாழை முள் கொத்தோடு குத்தி விட்டதாக அலுத்துக் கொண்டாளாம்; அதுபோல் உள்ளது துரையின் புலம்பல்! lll