ஆகஸ்ட் 18, 1904திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடியில், டி.வி. சுந்தரம் -லட்சுமி தம்பதியின் மகளாக, 1904ல் இதே நாளில் பிறந்தவர் டி.எஸ்.சவுந்தரம். புகழ்பெற்ற டி.வி.எஸ்., குழும நிறுவனரின் மகளான இவர், தன் சொந்த ஊரில் துவக்கக் கல்வியை முடித்தார். தன் 10வது வயதில், வாய்ப்பாட்டு, வீணை இசையில் தேர்ச்சி பெற்றார். 12வது வயதில், டாக்டர் சுந்தரராஜனை மணந்தார். அவர் விரைவிலேயே இறக்க நேரிட்டது.அவர் மரண தருவாயில், இவரை டாக்டராகி சேவை செய்யும்படி கூறினார். அதை ஏற்று, டில்லி சென்று படித்து டாக்டரானார். மதுரையில், இலவச மருத்துவமனை துவங்கி சேவை செய்தார். ஹரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த ஜி.ராமச்சந்திரனை காதலித்து,காந்தியின் ஆசியுடன் மறுமணம் புரிந்தார். திண்டுக்கல் மாவட்டம், சின்னாளப்பட்டியில் காந்தி கிராம அறக்கட்டளையை நிறுவி, கிராமிய பல்கலையாக வளர்த்தார். சுதந்திரத்துக்குப் பின், ஆத்துார் எம்.எல்.ஏ.,வாகி, பெண்களின் திருமண வயதை 18 ஆக்கும் மசோதாவை நிறைவேற்றினார். பின், மத்திய துணை கல்வி அமைச்சராகி, இலவச துவக்கக் கல்வியை அறிமுகம் செய்தார். தன் 80வது வயதில், 1984, அக்டோபர் 21ல் மறைந்தார். இவரது பிறந்த தினம் இன்று!