இதே நாளில் அன்று
ஜனவரி 5, 1975தஞ்சை மாவட்டம், கண்டியூரில், அண்ணாதுரை அய்யங்கார் - ரங்கநாயகி தம்பதியின் மகனாக, 1905, அக்டோபர் 23ல் பிறந்தவர் சீனிவாச ராகவன்.பள்ளிப் படிப்பை நாகப்பட்டினத்திலும், கல்லுாரிப் படிப்பை திருச்சி யிலும் முடித்தார். திருச்சி செயின்ட் ஜோசப், பாளையங்கோட்டை செயின்ட் சேவியர்,திருநெல்வேலி ஹிந்து கல்லுாரி, சென்னை விவேகானந்தா கல்லுாரிகளில் ஆங்கிலத் துறை தலைவராகவும், துாத்துக்குடி வ.உ.சி., கல்லுாரி முதல்வராகவும் பணியாற்றினார்.'சிந்தனை' எனும் இலக்கிய இதழை துவங்கி, ராஜாஜி, வையாபுரி பிள்ளை, பி.ஸ்ரீ.நீலகண்ட சாஸ்திரி, ந.பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன்உள்ளிட்டோரை எழுத வைத்தார். 'நாணல்' எனும் புனைப்பெயரில் இலக்கியத் திறனாய்வு, நாடகம், கவிதைகளை எழுதினார்.'திரிவேணி' எனும் ஆங்கில இதழின் துணை ஆசிரியராகவும் இருந்தார். நம்மாழ்வார் பாசுரங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.'வெள்ளைப்பறவை' கவிதைக்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், தன் 69வது வயதில், 1975ல், இதே நாளில் மறைந்தார்.சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழ்க்கவிஞர், அ.சீ.ரா., மறைந்த தினம் இன்று!