இதே நாளில் அன்று: நவ. 30
நவம்பர் 30, 1931 உத்தர பிரதேச மாநிலம், லக்னோவில், பஞ்சாபி குடும்பத்தில் தயா ராம் தாப்பர் – கவுசல்யா தாப்பர் தம்பதியின் மகளாக, 1931ல் இதே நாளில் பிறந்தவர் ரொமிலா தாப்பர். புனேவில் பள்ளி படிப்பை முடித்த இவர், பஞ்சாப் பல்கலையில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். லண்டன் பல்கலையின் கீழ், இந்திய வரலாற்றில் முனைவர் பட்டம் பெற்றார். பண்டைய இந்திய வரலாறு, சமூக பண்பாட்டு வரலாற்றை ஆய்வு செய்வதில் சிறந்து விளங்கினார். இவரது, ‘அசோகர் மற்றும் மவுரிய பேரரசின் வீழ்ச்சி, இந்திய வரலாறு, பண்டைய இந்தியா’ உள்ளிட்ட ஆய்வு நுால்கள், இந்திய வரலாற்று எழுத்தியலில் முக்கிய மைல்கற்கள். மன்னர்களின் காலவரிசை, போர்களை தாண்டி, சமூக அமைப்பு, பொருளாதார மாற்றங்கள், சமயங்களின் பரிணாமம் மற்றும் மாற்றுக்குரல்கள் குறித்து ஆழமாக ஆராய்ந்தார். மதச்சார்பற்ற பார்வையையும், வரலாற்றை அரசியல் நோக்கில் திரிப்பதற்கு எதிரான நிலைப்பாட்டையும் முன்வைத்து வரும் இவர், ஆக்ஸ்போர்டு, சிகாகோ, கொல்கட்டா பல்கலைகளின் கவுரவ முனைவர் பட்டங்களையும், வாழ்நாள் வரலாற்று ஆய்வுக்காக, 2008-ல் அமெரிக்க காங்கிரஸ் நுாலகத்தின் உயரிய, ‘க்ளூக்’ பரிசையும் பெற்றார். வரலாற்று அறிஞர்களில் தனித்துவமான ஆளுமையான இவர், தற்போது ஜவஹர்லால் நேரு பல்கலையின் ஓய்வுபெற்ற பேராசிரியராக உள்ளார். இவரது ௯௫வது பிறந்த தினம் இன்று!