இதே நாளில் அன்று
மார்ச் 30,- 1709 சென்னை பெரம்பூரில், திருவேங்கடம் பிள்ளையின் மகனாக, 1709ல், இதே நாளில் பிறந்தவர் ஆனந்தரங்கம் பிள்ளை. இவர், இளமையிலேயே தாயை இழந்தார். தந்தை, பணி நிமித்தமாக, புதுச்சேரியில் குடியேறினார். இவர் அங்கேயே படித்து, பல மொழிகளில் தேர்ச்சி பெற்றார். பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியில், 'துபாஷ்' எனும் மொழிபெயர்ப்பாளராக சேர்ந்து, கவர்னர் துய்ப்ளெக்சின் நம்பிக்கையை பெற்று, அவரின் அந்தரங்க ஆலோசகராகவும், மக்களின் நம்பிக்கைக்கு உரியவராகவும் உயர்ந்தார். 'ஆனந்த புரவி' என்ற பாய்மரக்கப்பலை வாங்கி, துணி ஏற்றுமதி உள்ளிட்ட வணிகங்களில் ஈடுபட்டார். 1736 செப்டம்பர் 6 முதல், 1761 ஜனவரி 11 வரையிலான, 25 ஆண்டுகளில், இந்தியாவில் நடந்த, பிரிட்டிஷ் - பிரெஞ்சு போர்கள், புதுச்சேரியில் நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார நிகழ்வுகள் உள்ளிட்டவற்றை நாள்குறிப்பாக எழுதினார். 'டைரி' எழுதும் வழக்கத்தை தமிழில் துவக்கியதால், 'இந்தியாவின் பெப்பீஸ் மற்றும் நாள் குறிப்பு வேந்தர்' என, ஆய்வாளர்களால் போற்றப்படுகிறார். இவரின் குறிப்புகளை வைத்து, பிரபல எழுத்தாளர் பிரபஞ்சன் எழுதிய, 'வானம் வசப்படும்' நாவல், 'சாஹித்ய அகாடமி' விருது பெற்றது. இவர், தன், 51வது வயதில், 1761, ஜனவரி 10ல், மறைந்தார். கடந்த, ௧௮ம் நுாற்றாண்டை ஆவணப் படுத்தியவர் பிறந்த தினம் இன்று!