UPDATED : செப் 25, 2024 03:33 PM | ADDED : செப் 24, 2024 10:22 PM
தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், கோவை பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளாரை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது,முன்னாள் முதல்வர் கருணாநிதியின் உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை, ஆதீனத்துக்கு நினைவு பரிசாக மஸ்தான் வழங்கினார். பின், மஸ்தான் அளித்த பேட்டியில், 'முன்னாள் முதல்வர் கருணாநிதி, சரியான நேரத்தில் ஸ்டாலினுக்கு, துணை முதல்வர் பதவியும், உள்ளாட்சி துறை அமைச்சர் பதவியும் வழங்கினார். அதேபோல, முதல்வர் ஸ்டாலினும் சரியான நேரத்தில் உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி வழங்குவார்' என்றார்.இதைக் கேட்ட மூத்த நிருபர் ஒருவர், 'இவருக்கு வரலாறு தெரியாதோ... 1989ல் எம்.எல்.ஏ.,வான ஸ்டாலினுக்கு, 2006ல் தானே கருணாநிதி அமைச்சராகவே வாய்ப்பு தந்தார்... ஆனா, உதயநிதி என்ட்ரி கொடுத்த உடனே அமைச்சர், துணை முதல்வர் ஆக போறாரே... அவரை ஸ்டாலினுடன் ஒப்பிடுவது சரியா...?' என, முணுமுணுத்தவாறு நடந்தார்.