| ADDED : டிச 21, 2025 02:25 AM
கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், பா.ஜ., இளைஞரணி நிர்வாகிகள் அறிமுக கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், பா.ஜ., இளைஞரணி மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யா பங்கேற்றார். அவருக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க, நிர்வாகிகள் ஏற்பாடுகள் செய்திருந்தனர். கலைக்குழு சார்பில், பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது. தடபுடலான வரவேற்பால் உற்சாகமடைந்த எஸ்.ஜி.சூர்யா, கூட்டம் நடந்த அரங்கிற்குள் சென்றார். அவரை காண, கலைக்குழு பெண்களும் ஆர்வமாக காத்திருந்தனர். எஸ்.ஜி.சூர்யா உள்ளே சென்றதும், அங்கிருந்த கட்சி நிர்வாகிகளிடம் சில பெண்கள், 'ஏனுங்ணா... சூர்யான்னு சொன்னதும், நாங்க நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான் வர்றார்னு நினைச்சிட்டோமுங்க...' என்றனர். இதை கேட்ட நிர்வாகிகள், சிரிப்பை அடக்க முடியாமல், 'அட இவர், நடிகர் இல்லீங்க... எங்க இளைஞர் அணியின் மாநில தலைவர் எஸ்.ஜி.சூர்யாங்க...' என விளக்க, அந்த பெண்கள் தலையை ஆட்டியபடியே கிளம்பினர்.