முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: இரட்டை
இலை தான் முந்தணும்னு பலர். அந்த இரட்டை இலையை முந்தணும்னு பலர். கூடவே
இரட்டை இலையை முடக்கணும்னு சிலர். விழிநீர் கசியும் வேதனையோடு, மூன்று
குழுக்களாக கட்சி தொண்டர்கள். இந்நிலைக்கு காரணமான பழனிசாமியையும்,
அவருக்கு கொம்பு சீவி விட்ட குள்ள நரிகளையும் காலம் மறக்காது. கட்சி
தொண்டனும் மன்னிக்க மாட்டான்.அப்ப இரட்டை இலையை முடக்கணும்னு தேர்தல் ஆணையத்தை அணுகி உள்ள இவங்க தலைவரை மட்டும் தொண்டர்கள் கொண்டாடுவாங்களா என்ன?தமிழக பா.ஜ., செயற்குழு உறுப்பினர் சவுதாமணி அறிக்கை: பிரதமர் மோடி தமிழுக்கு எதுவுமே செய்ய வில்லை என, முதல்வர் ஸ்டாலின், கனிமொழி விமர்சிக்கின்றனர். பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில், 17,633 பேர் 'ஆப்சென்ட்' ஆகியுள்ளனர். இது தான் இவர்கள் தமிழ் வளர்க்கும் லட்சணமா? மொத்தமா, 10 லட்சம் மாணவர்கள் தேர்வுக்கு பதிவு செய்த போது, ஒன்றிரண்டு சதவீதம் 'ஆப்சென்ட்' ஆவது சகஜம் தான்னு வழக்கம் போல பதில் சொல்வாங்க பாருங்க!த.மா.கா., பொதுச் செயலர் விடியல் சேகர் பேச்சு: யார் பிரதமர் என, சொல்ல முடியாத, தலைமையில்லாத, முரண்பாடானது, 'இண்டியா' கூட்டணி. அ.தி.மு.க., கூட்டணியிலும், பிரதமர் யார் என சொல்ல முடியாத நிலை உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணி தான், மோடி தான் பிரதமர் வேட்பாளர் என உரக்க சொல்லி, வளர்ச்சி, நிலையான ஆட்சி, நேர்மையான, ஊழலற்ற நிர்வாகம் என பிரசாரம் செய்யும் வெற்றி கூட்டணியாக திகழ்கிறது.பிரதமர் வேட்பாளர் யாருன்னு சொல்லாம, தங்கள் கட்சி வேட்பாளருக்கு ஓட்டு மட்டும் கேட்கும் இந்த கட்சிகளிடம் வாக்காளர்கள் தான் கேள்வி கேட்கணும்!தமிழக காங்கிரஸ் எஸ்.சி., துறை மாநில தலைவர் ரஞ்சன்குமார் அறிக்கை: வட மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி எழுச்சிக்கு ராகுலின் கடும் உழைப்பு தான் காரணம். ஏழை, நடுத்தர மக்களின் வாழ்க்கையை பற்றி அவர் சிந்திக்கிறார். இந்திய ஒற்றுமை நீதி பயணத்தில் அனைத்து தரப்பு மக்களிடமும் குறை கேட்டார். தங்கள் குறைகளை கேட்க ஒருவர் வந்து விட்டார் என்ற மகிழ்ச்சி மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. இது, பா.ஜ., கூட்டணி கட்சிகளுக்கெல்லாம் வயிற்றில் புளியை கரைத்துள்ளது.இதை, 'இண்டியா' கூட்டணியில் உள்ள கட்சிகளை மட்டும் ஏத்துக்கிட்டு உடனடியா ராகுலை பிரதமர் வேட்பாளரா அறிவிக்க சொல்லுங்க பார்ப்போம்!