மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.,யின் தோழி சசிகலா அறிக்கை:ஒரு சில
மூத்த நிர்வாகிகளின் சுயநலப் போக்கால் அ.தி.மு.க., பிளவுபட்டு இருந்தாலும்,
எங்கள் கட்சியில் உள்ள பிரச்னைகளை, எவ்வாறு சரி செய்வது என்பது எனக்கு
நன்றாக தெரியும். அதற்கான நேரமும் நெருங்கி விட்டது. தி.மு.க.,வினர் எங்கள்
கட்சி உள் விவகாரங்களில் தலையிடுவதை விட்டு, மக்கள் பிரச்னைகளை பேச
வேண்டும்.நேரம் நெருங்கி விட்டதாக இவங்க சொல்றது லோக்சபா தேர்தல்
முடிவை தான்... அ.தி.மு.க., படுதோல்வி அடைய எத்தனை கோவிலுக்கு வேண்டுதல்
வச்சிருக்காங்களோ?தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேச்சு: வேலுார் மாவட்டம், கே.வி.குப்பம் சட்டசபை தொகுதியில் தொடர்ந்து மூன்று முறை அ.தி.மு.க., வேட்பாளர் வெற்றி பெற்று உள்ளார். தி.மு.க., வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டுள்ளார்; பரவாயில்லை. நாங்கள் தெருநாய்களாக இருந்தால் ஓடிப்போயிருப்போம். வீட்டு நாய்களாக உள்ளோம். ஆதலால், இந்த தொகுதிக்கு கடமைப்பட்டுள்ளோம். 'சட்டசபை தேர்தலுக்கு யாருக்காச்சும் ஓட்டு போடுங்க... இப்ப, எம்.பி., வேட்பாளரான என் மகனுக்கு கொஞ்சம் பார்த்து செய்யுங்க'ன்னு சொல்லாம சொல்றாரோ?ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேச்சு: மதுவை ஒழிக்கும் வரை, தமிழகம் முன்னேற போவதில்லை. குடித்து விட்டு கூட்டத்துக்குள் புகுந்து பெண்கள் நிற்கும் இடத்துக்கு வந்து நிற்கின்றனர். மது ஒழிப்புக்காகவே என் தாய் உயிரை கொடுத்தார். டாஸ்மாக் கடையை அடைக்க, அவர் உண்ணாவிரதம் இருந்தார். அதனால் தான் இறந்தும் போனார். எல்லாம் சரி தான்... ஆனால், 'மதுவிலக்கு வாக்குறுதி கொடுத்தப்ப நீங்க எல்லாம் ஓட்டு போடலையே'ன்னு உதயநிதி ஆதங்கப்பட்டதை இவர் கவனிக்கலையா?முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் ஆதரவாளர் மருது அழகுராஜ் அறிக்கை: உதயசூரியனுக்கு எதிராக திரளும் உக்கிரமான ஓட்டுகளை ஒருமுகப்படுத்த, பா.ஜ., வோடு பலமான கூட்டணி அமைத்து, கட்சியை உடைக்காமல் இருந்திருந்தால், 40க்கு 40 என்ற அளவுக்கு லோக்சபா தேர்தல் அமைந்திருக்கும். ஆனால், கட்சியை உடைத்து, கூட்டணியை சிதைத்து, இரட்டை இலையை, உதயசூரியனுக்கு முட்டுக் கொடுக்க வைத்திருக்கும் பழனிசாமிக்கு மன்னிப்பே கிடையாது.அவர் என்னமோ இவங்ககிட்ட மன்னிப்பு கேட்ட மாதிரியும், இல்ல எதிர்காலத்துல கேட்க போற மாதிரியும் இப்பவே இவ்வளவு கறாரா பேசுறாரே!