பேச்சு, பேட்டி, அறிக்கை
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: நீதிமன்றங்களில் மது தொடர்பாக வழக்கு தொடர்ந்தால் மட்டுமே, அது அரசின் கொள்கை முடிவு என்று வாதிடும் தமிழக அரசு, மதுவிலக்கு மாநில அரசால் சாத்தியமில்லை என, மத்திய அரசை கை காட்டுவது, நகைப்பாக உள்ளது. மதுவால் பல குடும்பங்கள் சீரழிந்து வருவதையும், பல இளம் விதவையர் உருவாவதையும், பல லட்சம் பேர் மதுவுக்கு அடிமையாகி, உடல் நலம் பாதிக்கப்படுவதையும் உணர்ந்து, தமிழக அரசு உடனடியாக மதுவிலக்கை அமல்படுத்த முன்வர வேண்டும்.தப்பி தவறி மதுவிலக்கை அமல்படுத்திட்டா, அதன் பலன் திருமாவளவனுக்கு போயிடுமே... அதனால, அது நடக்கிற காரியமில்லை!அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்ட குழு தலைவர், டாக்டர் பெருமாள்பிள்ளை அறிக்கை: கார் பந்தயம் தமிழகத்திற்கு மட்டுமன்றி, தெற்காசியாவுக்கே பெருமை தேடி தந்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. அதே நேரத்தில், உலகிலேயே அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைக்கும் ஒரே மாநிலமாக தமிழகம் உள்ளது என்பது அரசுக்கு அவமானமாக இல்லையா?மத்திய அரசை காரணம் காட்டி, ஆசிரியர்களுக்கு ஊதியமே வழங்காம இருப்பதற்கு, உங்க பாடு எவ்வளவோ தேவலை!தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில துணை தலைவர் இருளாண்டி பேட்டி: தி.மு.க., அரசு, தேர்தல் அறிக்கையில் கூறியபடி ஊதிய உயர்வு வழங்கவில்லை. மத்திய அரசின் கல்வி கொள்கையை மாநில அரசு ஏற்க மறுப்பதால், எங்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தை வழங்கவில்லை. இதனால் தமிழக அரசை கண்டித்து, மாவட்ட தலைநகரங்களில் நவம்பரில் மறியல் போராட்டம், டிசம்பரில் தொடர் உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்துள்ோம்.டிசம்பர் வரைக்கும் ஊதியம் கிடைக்காதுன்னு முடிவே பண்ணிட்டாங்களோ?மார்க்சிஸ்ட் கட்சி தொழிற்சங்கமான, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் பேட்டி: போக்குவரத்து தொழிலாளர்களுக்கு, 105 மாதங்களாக பஞ்சப்படி வழங்கவில்லை. நெய்வேலி என்.எல்.சி., ஊழியர்கள், 20 சதவீதம் போனஸ் கேட்டு போராடுகின்றனர். நிலம் வழங்கியவர்களுக்கு வேலை கொடுக்காமல் யார், யாருக்கோ கொடுத்துள்ளனர். தேர்தல் பிரசாரத்தில் தொழிலாளர் பிரச்னை தொடர்பாக முதல்வர் கூறியதற்கு நேர் எதிராக தற்போதைய செயல்பாடு உள்ளது.அதனால தான், 'தோழர்கள்' தமிழகமே ஸ்தம்பிக்கிற மாதிரி போராட்டங்களை நடத்துறாங்களோ?