உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை:இதற்கு முன்பு, 1,000 ரூபாய் பொங்கல் பரிசு வழங்கிய தமிழக அரசு, 2025ல் தேர்தல் இல்லை என்பதால் பணம் வழங்கவில்லை. அடுத்து, 2026ல் தேர்தல் வரும் என்பதால், அப்போது 1,000 ரூபாய் வழங்கி, மக்களை ஏமாற்றி விடலாம் என, நினைக்கிறது. இது மக்களை முட்டாளாக்கும் செயல். நிதி நெருக்கடி, மத்திய அரசு நிதி வழங்கவில்லை என காரணங்களைக் கூறி, மக்களுக்கான உரிமைகளை அரசு மறுக்கக் கூடாது. யாரும் ரொம்ப அலட்டிக்க வேணாம்...பொங்கல் பரிசு தராத அரசுக்கு, அடுத்த வருஷ தேர்தல்ல, மக்கள் 'பொங்கல்' வச்சிடுவாங்க! கோவை தெற்கு தொகுதி பா.ஜ., -- எம்.எல்.ஏ., வானதி அறிக்கை: வரும், 2026ல் தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மக்கள் விரோத தி.மு.க., ஆட்சியை வீழ்த்துவதற்கான அடித்தளத்தை தற்போது பா.ஜ., அமைத்துள்ளது. அதற்காக, பா.ஜ.,வினர் கடுமையாக உழைத்து வருகின்றனர். அதற்காக தொடர்ந்து களப்பணியாற்றி வருகின்றனர்.அண்ணாமலை சாட்டையால் அடிச்சிக்கிட்டதை தான் அடித் தளம்னு சொல்றாங்களோ? பின்னே, இத்தனை வருஷமா வேலை செஞ்சு, கட்சியை இன்னும் பாதி அளவு கூட வளர்க்கலியே...!அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: பொங்கல்பரிசுத் தொகுப்பில் ரொக்கப்பணம் வழங்க மறுத்திருப்பது, அதை எதிர்பார்த்துக் காத்திருந்த மக்கள் அனைவருக்கும் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. ரொக்கப் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்குவதுடன், அனைத்து மக்களுக்கும், அந்த பணம் முறையாக சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும்.இது, மக்கள் மீதான அக்கறை இல்லையே... இலவசத்தை எதிர்பார்க்கும் மனப்பான்மையை ஊதிப் பெருசாக்கி, அரசியல் செய்யறதை நீங்கல்லாம் எப்போ நிறுத்தப் போறீங்களோன்னு தெரியலே...!த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தமிழக சட்டசபையில் த.மா.கா., குரல் பலமாக ஒலிக்கும் வகையில், அடுத்த ஆண்டு நடக்கும் தேர்தலுக்காக தொடர் களப்பணிகள் மேற்கொண்டு வருகிறோம். 2026 சட்டசபை தேர்தலில், எங்கள் கூட்டணியில் ஒருமித்த கருத்துடைய கட்சிகள் இணைய வாய்ப்புள்ளது. ஒருமித்த கருத்து என்பது தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறுவதுதான். எல்லா கட்சிகளும் தேர்தலில் வெற்றி பெறணும்னுதான் போட்டியிடும்...புதுசா பேசுறதா நெனைச்சிக்கிறாரோ? வீரமான, மாநிலத்தை வளர்க்கிற விதமான பேச்சு, பேட்டிகள் கொடுக்கலைன்னா, 2026ல் இவங்க குரல் சட்டசபையில் ஒலிப்பது சந்தேகம்தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி