பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் கே.பி.ராமலிங்கம் பேச்சு: தமிழகம் முழுதும் குற்றச்சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றன. அ.தி.மு.க., - பா.ம.க., - நா.த.க., - த.வெ.க., போன்ற கட்சிகள் தனித்தனியாக போராடுகின்றன. பாலியல் வன்கொடுமைகளை ஆதரிக்கும் தி.மு.க.,வை ஆட்சியை விட்டு வெளியேற்ற வேண்டும். தி.மு.க., அரசு தமிழகத்திற்கு தேவையில்லை என்ற, 'சிங்கிள் அஜெண்டா'வோடு போராட்ட களத்தை ஒருமுகப்படுத்தி நடத்த வேண்டும். இதற்கு, மூத்த அரசியல்வாதி ராமதாஸ் வழிகாட்ட வேண்டும்.
அரசியல்வாதி ராமதாஸ் வழிகாட்ட வேண்டும்.
அ.தி.மு.க., - பா.ஜ.,வுக்கு பாலமா இருந்து கூட்டணியை உருவாக்கி தரணும்னு கேட்கிறீங்க... ஆனா, சொந்த கட்சி பஞ்சாயத்தே டாக்டருக்கு பெரிய சோதனையா இருக்கே! பொள்ளாச்சி அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஜெயராமன் பேட்டி: ஏழை, எளிய மக்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படாததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தி.மு.க.,வைச் சேர்ந்தவர்களுக்கே பெருமளவு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. மகளிர் உரிமைத் தொகை கிடைக்க பெறாத 1 கோடி பெண்கள் உள்ளனர். அவர்களுக்கு உரிமைத் தொகை வழங்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்தால் அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை கூடுதலாக வழங்கப்படும்.வர்ற, 2026 தேர்தல் அறிக்கையில் சொல்ல வேண்டியதை இப்பவே சொல்லிட்டா எப்படி?பா.ம.க., மாநில பொருளாளர் திலகபாமா பேட்டி: மத்திய அரசு நிதி உதவியுடன் வாங்கிய மீனவர்களின் படகுகளை, இலங்கை அரசு சிறை பிடித்துள்ளது. மீனவர்களுக்கு எதிராக உள்ள இலங்கை அரசின் சட்டங்களை திருத்தி அமைக்க, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில், 40 எம்.பி.,க்களை வைத்துள்ள தி.மு.க., கூட்டணி, மத்திய அரசை வலியுறுத்தி மீனவர்களை காப்பாற்ற வேண்டும்.இவங்க பா.ஜ., கூட்டணியில் இருப்பதால், அன்புமணி ஒரு எட்டு டில்லிக்கு போய் பிரதமரை நேர்ல பார்த்தே சொல்லிட்டு வரலாமே!த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: ஈரோடு இடைத்தேர்தலில் வாக்காளர்களை எப்படி அடைத்தனரோ, அதுபோல மதுரையில் நீதி கேட்டு போராடிய பா.ஜ., பெண் நிர்வாகிகளை ஆட்டு கொட்டகையில் அடைத்துஉள்ளனர். ஆளும் கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணனே தி.மு.க., அரசின் அடக்குமுறையையும், தவறுகளையும் சுட்டிக்காட்டியது ஆட்சியின் தவறான போக்கை காட்டுகிறது.கூட்டணி கட்சிக்கே அந்த நிலை என்றால், எதிர்க்கட்சிகள் கதியை எண்ணி பாருங்க!