பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிக்கை: நெஞ்சுரம் கொண்டு, நேர்மையாக வாழ்ந்து காட்டிய தியாகச் செம்மல் எம்.ஜி.ஆர்., தாய்குலத்திற்கு பாதுகாவலராக இருந்தார். ஏழைகளின் பசி போக்க பணியாற்றி, தமிழகத்தின் சிறந்த முதல்வராகவும் திகழ்ந்தார். இன்றும் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்று புரட்சித் தலைவர் என, அன்புடன் அழைக்கப்பட்ட பொன்மன செம்மல் பிறந்த நாளில், அவரது நினைவை போற்றி வணங்குகிறேன்.
அவரது நினைவை போற்றி வணங்குகிறேன்.
எம்.ஜி.ஆருக்கு ஏகத்துக்கும் புகழாரம் சூட்டி, அ.தி.மு.க., கூட்டணிக்கு அச்சாரம் போடுறாங்களோ? தி.மு.க.,வின் முன்னாள் செய்தி தொடர்பு செயலர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் அறிக்கை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பா.ஜ., போட்டியிட்டிருக்க வேண்டும். ஏனெனில், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் இந்த தேர்தலில் நிற்காததால், இரு அணியின் ஓட்டுகளும் சீமானுக்கு தான் போகும். அதே நேரம், கடந்த முறை போல, மக்களை அங்கு பட்டியில் அடைக்க வேண்டியது இல்லை.ஒருவேளை, 'மக்களை பட்டியில் அடைச்சு சிரமப்படுத்த வேண்டாம்'னு தான், அ.தி.மு.க.,வும், பா.ஜ.,வும் ஒதுங்கிடுச்சோ?தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: நம் எதிர்கால லட்சியம், காமராஜர் ஆட்சியை மீண்டும் தமிழகத்தில் கொண்டு வருவது தான். அதை அடைவதற்கு, தமிழக காங்கிரஸ் வலுவான இயக்கமாக மாற வேண்டும். கிராம அளவில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி, அவர்களின் நீண்டகால பிரச்னைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து, அதற்கு நிரந்தர தீர்வு காண்பது போன்ற சமுதாய பணிகளில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.சமுதாய பணிக்கும், காங்கிரசாருக்கும் காத துாரமாச்சே... அதனால, கண்ணுக்கு எட்டிய தொலைவில் காமராஜர் ஆட்சிக்கு வாய்ப்பில்லை!தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியின் பொதுச்செயலர் குமரய்யா அறிக்கை: மதுரை, அலங்காநல்லுார் ஜல்லிக்கட்டு துவக்க விழாவில் அரங்கேறிய காட்சிகள் அவலத்துக்குரியவை. வெளிநாட்டு பல்கலைகளில் படித்து, புகழ்பெற்ற பன்னாட்டு நிறுவனங்களில் தலைமை அதிகாரியாக இருந்த, பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறந்த பழனிவேல் தியாகராஜனும், அமைச்சர் மூர்த்தியும், ஒருவருக்கொருவர் போட்டி போட்டு உதயநிதியின் மகன் இன்பநிதிக்கு சேவை செய்தனர்.'கருணாநிதி குடும்பத்துக்கு சேவை செய்வதை விட, வேறு பெருமை தேவையில்லை'ன்னு அவங்க நினைக்கிறாங்க போலும்!