பேச்சு, பேட்டி, அறிக்கை: நவ. 16
இந்திய ஜனநாயக கட்சித் தலைவர் ரவி பச்சமுத்து: மத்திய அரசு வெளியிட்டுள்ள அக்டோபர் மாத பணவீக்க புள்ளி விபரங்களின்படி, இந்திய அளவில் விலைவாசி உயர்வு 6.09 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில் 7.29 சதவீதமாக உயர்ந்திருப்பது மிகுந்த கவலையளிக்கிறது. விலைவாசி உயர்வு அதிகமாக இருப்பதற்கான காரணங்களை தமிழக அரசு விரிவாக ஆய்வு செய்து, விலைவாசியை கட்டுப்படுத்துவதற்கான சிறப்பு செயல் திட்டத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். மாநில அரசுடன் மத்திய அரசும் கைகோர்த்து செயல்பட்டால் மட்டுமே, விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவது சாத்தியமாகும்! அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி பேட்டி: ஆட்சிக்கு வந்தபோது, ஆறு மாத காலத்தில் சிறப்பான ஆட்சியை தருவதாக, த.வெ.க.,வைச் சேர்ந்த தமிழக பொதுப்பணித் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். ஆனால், தமிழகத்தில் கொலைகள் நடக்காத நாட்களே இல்லை. தீபாவளி அன்று நடந்த கொலைகள் குறித்த கேள்விக்கு, கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு அமைச்சர் பதில் கூறுகிறார். பொருளாதாரத்தை கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு பேசலாம்; கொலைகளை கடந்த ஆண்டோடு ஒப்பிட்டு பேசுவது சரியில்லை. கடந்த தி.மு.க., – அ.தி.மு.க., ஆட்சிகள்ல நீங்க செய்ததை தான், த.வெ.க.,வினரும் இப்ப செய்றாங்க! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஜெயராமன் அறிக்கை: ஆட்சி நடத்துவதற்கான நிர்வாகத் திறமையும், அரசியல் முதிர்ச்சியும் இல்லாதவர்கள் அதிகாரத்தில் தொடர்ந்து நீடிப்பதால், மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. த.வெ.க.,வினருக்கு திறம்பட ஆளத் தெரியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். மக்களின் உயிர், உரிமை, வாழ்வாதாரம் ஆகியவற்றை சோதனைக்கு உட்படுத்தும் பொறுப்பற்ற ஆட்சியை, தமிழகம் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளாது. அ.தி.மு.க.,வும், தி.மு.க.,வும் பொறுப்பில்லாம ஆட்சி நடத்தியதால் தானே, த.வெ.க.,வுக்கு மக்கள் வாய்ப்பு தந்திருக்காங்க! ‘அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, சி.வி.சண்முகம் போன்ற சொந்த கட்சியினரின் நம்பிக்கையை பெற்ற பின், மாற்று கட்சியினர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வாங்க’ன்னு பழனிசாமிக்கு சொல்றீங்களோ? த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக நிதி அமைச்சர் மரிய வில்சன் பேட்டி:அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி மீது நம்பிக்கையில்லாமல் தான், மக்கள் எங்களுக்கு ஓட்டு போட்டுள்ளனர். அவர் என்ன எங்கள் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் கொண்டு வருவது? அக்கட்சியின் தொண்டர்கள், முன்னாள் எம்.பி., – எம்.எல்.ஏ.,க்களுக்கே, அவர் மீது நம்பிக்கை இல்லை. முதலில் அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்து, அ.தி.மு.க.,வை வேறொருவர் வழி நடத்த வேண்டும்.