உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 16

பேச்சு, பேட்டி, அறிக்கை: அக். 16

பா.ஜ., சிறுபான்மையினர் அணி தேசிய செயலர் வேலுார் இப்ராஹிம் பேச்சு: தி.மு.க., – அ.தி.மு.க., இரண்டுமே முஸ்லிம்களை வஞ்சிக்கின்றன. தனி கட்சி துவங்கி, தனி சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்ற நோக்கத்தில் தான், மனித நேய மக்கள் கட்சியை ஜவாஹிருல்லா ஆரம்பித்தார். ஆனால், ஜவாஹிருல்லா உதயசூரியன் மற்றும் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு, தன் சொந்த கட்சிக்கான அங்கீகாரத்தை இழந்து, இன்று முகவரியற்ற நிலையில் இருக்கிறார். இரண்டு திராவிட கட்சிகளும், முஸ்லிம் அமைப்புகளை ஓட்டு வங்கியா மட்டுமே பார்த்தன... த.வெ.க., தான், முஸ்லிம் லீக் கட்சிக்கு ஆட்சியில் பங்கு தந்து கவுரவப்படுத்தியிருக்கு! த.வெ.க.,வைச் சேர்ந்த, தமிழக வருவாய் துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி: மத்திய – மாநில அரசுகள் இடையே நல்ல இணக்கம் இருக்க வேண்டும். அப்போது தான், மக்கள் நலத்திட்டங்கள் விரைந்து செயல் வடிவம் பெறும். அந்த வகையில், மக்கள் நலன்களை காப்பதற்காக, மத்திய அரசுடன் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்பது தான், த.வெ.க., அரசின் நோக்கம். வாஸ்தவம் தான்... கடந்த தி.மு.க., அரசு, அரசியல் ரீதியா மத்திய பா.ஜ., அரசுடன் முட்டிக் கொண்டதால், நமக்கு தான் பாதிப்புகள் அதிகம்... நீங்களாவது அதை சரி செய்ய பாருங்க! வி.சி.க., தலைவர் திருமாவளவன் பேச்சு: கருணாநிதி, ஈ.வெ.ரா., மற்றும் தி.மு.க., எதிர்ப்பை மட்டுமே முதன்மைப்படுத்தி, தமிழ் தேசியத்தை சிலர் கொண்டு செல்கின்றனர். ‘தெலுங்கர்களால் தான் தமிழர்கள் அழிந்தனர்’ என்ற உத்தியையே அவர்கள் கையாளுகின்றனர். தெலுங்கர்கள், கன்னடர்கள், மலையாளிகள் என அனைவரும் தமிழர்களோடு இணைந்தே இருந்தனர். தமிழகத்தில் பிற மொழியினர் ஆதிக்கம் செலுத்துவதற்கு, திடீரென யாரும் படையெடுத்து வந்து விடவில்லை. அவர்கள் நீண்டகாலமாக இங்கு வாழ்ந்து வருவது தான் அதற்கு காரணம். ‘தென் மாநிலங்கள் எல்லாம் ஒற்றுமையா இருந்து முன்னேறணும்’ என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு சொல்லியிருக்காரே... அதெல்லாம், தமிழ் தேசியம் பேசுறவங்க காதுல விழாதே!

பா.ஜ., இளைஞரணி தமிழக செயலர் எஸ்.ஜி.சூர்யா பேட்டி:

ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தங்களுக்கு தண்ணீர் இல்லை என்றாலும் தமிழகத்திற்கு தருவோம் என கூறுகிறார். ஆந்திராவில் பா.ஜ., கூட்டணி அமைச்சரவை உள்ளதால், இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆனால், கர்நாடகாவில் உள்ள காங்., அரசால், இது போன்ற உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. அப்படி இருக்கும்போது, எதற்காக த.வெ.க., அரசு, காங்., கட்சியுடன் கூட்டணியில் இருக்க வேண்டும்?- நியாயமான கேள்வி தான்... அதேநேரம், காங்கிரசை கழற்றி விட்டுட்டா, த.வெ.க., அரசுக்கு பெரும்பான்மை போயிடுமே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை