பேச்சு, பேட்டி, அறிக்கை
தமிழக பா.ஜ., செயலர் எஸ்.ஜி.சூர்யா பேச்சு: 'டாஸ்மாக்' முறைகேடை விசாரித்த அமலாக்கத்துறை அதிகாரி பியூஸ்குமார் யாதவ் இடமாறுதல் குறித்து பல்வேறு யூகங்களின் அடிப்படையில் அர்த்தமற்ற விவாதங்கள் நடந்து வருகின்றன. இது ஏப்., மே மாதங்களில் நடக்கும் வழக்கமான இடமாற்றம் தான். மோடி அரசு எந்த ஊழல்வாதியையும் தப்பிக்க விடுவதில்லை. அமலாக்கத்துறை மிகவும், 'புரொபஷனல்' அமைப்பு. எந்தவொரு தனிநபரையும் சார்ந்தது அல்ல.இருந்தாலும், டில்லியில் பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சந்திச்சுட்டு வந்ததும், இந்த இடமாறுதல் நடந்ததால தான், எல்லாரும் சந்தேகப்படுறாங்க! பா.ம.க., தலைவர் அன்புமணி அறிக்கை: தமிழகத்தில் நடப்பாண்டில், மாம்பழம் விளைச்சல் அதிகரித்திருப்பதால், அதன் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த ஆண்டில், 1 டன் 28,000 ரூபாய் வரை கொள்முதல் செய்யப்பட்ட மாம்பழத்தின் விலை, இப்போது, 4,000 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் கூடுதலாக இழப்பு ஏற்படும். பாதிக்கப்பட்ட விவசாயி கள், குத்தகைதாரர்களுக்கு தமிழக அரசு ஏக்கருக்கு, 1 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்.மாம்பழம் சின்னத்தை வச்சிருக்கிற இவங்க கட்சிக்கும், மாம்பழ விவசாயிகளுக்கும் இது போதாத காலமோ?த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை: தமிழகத்தில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துவிட்டு, வேலைக்காக காத்திருப்போர், 31 லட்சத்து 84,000 பேர். படித்து பட்டம் பெற்று, அரசு பணிக்காக பல ஆண்டுகளாக ஏராளமானோர் காத்திருக்கின்றனர். ஓய்வு பெறுவோரால், அரசு துறைகளில் காலியிடங்கள் அதிகரித்துக்கொண்டே போகிறது. இதனால், மக்களுக்கான பணிகள் குறித்த காலத்தில் நடப்பது இல்லை. எனவே, தமிழக அரசு காலியிடங்களை உடனே நிரப்ப வேண்டும்.பாதிக்கும் மேற்பட்ட அரசு பணிகளைத்தான், 'அவுட்சோர்சிங்' முறையில விட்டுட்டாங்களே!தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியின் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் ஆர்.வீ.ரஞ்சித்குமார் பேட்டி: 2026 சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., ஒன்றானால் மட்டுமே வெற்றி பெற முடியும். இல்லையெனில், அ.தி.மு.க., மூன்றாவது இடம் தான் பிடிக்கும். விஜய், எதிர்க்கட்சியாக வருவார். தி.மு.க., மீண்டும் ஆட்சியை பிடிக்கும். அண்ணாதுரை பிறந்த நாளான செப்., 15க்குள் அ.தி.மு.க., இணைப்பு ஏற்பட்டால் மட்டுமே அ.தி.மு.க.,விற்கு வெற்றி முகம். இல்லையெனில், அ.தி.மு.க., என்பது கம்யூனிஸ்ட் போல, சின்ன கட்சியாக மாறும்.இவங்க அணியின் பலம், 'ெலட்டர் பேடு' அமைப்பு அளவுக்கு தேய்ந்து போயிடுச்சே!