பேச்சு, பேட்டி, அறிக்கை
அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: மதுரை மாநகராட்சி பகுதியில், 13 கி.மீ., தேசிய நெடுஞ்சாலைகளும், 74 கி.மீ., மாநில நெடுஞ்சாலைகளும், 1,540 கி.மீ., மாநகராட்சி சாலைகளும் உள்ளன. இவற்றில், 1,253 கி.மீ., குடியிருப்பு சாலைகளாக உள்ளன. இவற்றில் அதிகமான சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளன. இவற்றை சீரமைக்க நிதி ஒதுக்கப்படவில்லை. விரைவில் மழைக்காலம் வருவதால், மக்களுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும்.என்ன தான் புதுசா சாலைகள் போட்டாலும், இவங்க போடுற தரத்துக்கு, ஒரே மழையில அடிச்சிட்டு போயிடும்... அதனால, மழைக்காலம் முடிஞ்சதும் போட்டுக்கலாம்னு இருக்காங்களோ?அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்ட மருது அழகுராஜ் அறிக்கை: பழனிசாமியின் நெறி கெட்ட துரோக அரசியலுக்கு, த.வெ.க., தலைவர் விஜய் முற்றுப்புள்ளி வைப்பார். எதிர்கால தமிழக அரசியல், தி.மு.க., - த.வெ.க., என்பதாக இருக்கும். பழனிசாமிக்கும், அவரது அரசியல் அபகரிப்புக்கும் துணை போகும் அமித் ஷாவுக்கும், பா.ஜ.,வுக்கும், 2026 சட்டசபை தேர்தல் தக்க பாடம் போதிக்க காத்திருக்கிறது.விஜய் கட்சியில், 'வெயிட்'டான பதவிக்கு காய் நகர்த்துறாரோ?அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் ராஜேஸ்வரி பிரியா அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டி போலீஸ் நிலையத்தில், போலீசாரின் திமிர் பேச்சு மற்றும் ஏழைகளை ஏளனம் செய்யும் போக்கின் காரணமாக, 13 வயது சிறுவனின் உயிர் பறிபோனது வேதனை அளிக்கிறது. போலீஸ் நிலையத்திற்கு புகார் அளிக்க செல்ல வேண்டும் என்றால் கூட, கோடீஸ்வர குடும்பமாகவும், அதிகார வர்க்கத்துடன் தொடர்புடையவராகவும் இருக்க வேண்டும் என்ற அடிப்படை தகுதியை காவலர்கள் நிர்ணயித்திருப்பது, தமிழகத் தின் சாபக்கேடாகும். அதிகார வர்க்கத்துடன் தொடர்புடையவங்க புகார் மீது, எப்படி நடவடிக்கை எடுப்பாங்க என்பதற்கு அஜித்குமார் சம்பவமே சாட்சி!அ.தி.மு.க., முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் பணியாற்றும் ஒருங்கிணைப்பாளர்களுக்கு, மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. அதுபோல, தற்போது கவுரவ விரிவுரையாளர்களுக்கும், மூன்று மாதமாக சம்பளம் வழங்கவில்லை. தி.மு.க., அரசின் நிர்வாக திறமையின்மைக்கு, இவை உதாரணமாக உள்ளன.மூணு மாதம் சம்பளம் இல்லாம, அவங்க எப்படி குடும்பம் நடத்துவாங்க என்பதை சிந்தித்து பார்க்க மாட்டாங்களா?