உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் முத்துசாமி பேட்டி: தமிழகத்தில், இதுவரை முதல்வராக இருந்தவர்களின் பெயரில் திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது விளம்பரத்துக்கானது அல்ல. முதல்வரின் பெயரை குறிப்பிடும்போது, மக்களிடம் அத்திட்டம் சென்றடையும். மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்; திரும்பி பார்ப்பர். அது வெற்றி பெறும். அதனால் தான் உச்ச நீதிமன்றம், அதை அனுமதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது. ஓஹோ... 'குடி'மகன்கள் யாரும் வரக்கூடாது... கடையிலும் வியாபாரம் நல்லபடியா நடக்க கூடாதுன்னு தான், 'டாஸ்மாக்' கடைகளில் முதல்வரின் படத்தை வைக்காம இருக்காங்களோ? புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: ஜாதி மாறி திருமணம் செய்து கொள்ளும் இளம் தலைமுறையை, ஜாதிய பயங்கரவாதிகள் கொலை செய்வதை தடுத்து நிறுத்த, தமிழக அரசு உடனே ஒரு அவசர சட்டத்தை கொண்டு வர வேண்டும். ஜாதி மாறி திருமணம் செய்யும் தம்பதி யில் ஒருவருக்கு உடனே நிரந்தர அரசு வேலையும், அவர்களுக்கு பாதுகாப்பான குடியிருப்பில் வீடும், இதர பாதுகாப்பு வசதிகளும் வழங்கி, அவர்களை சிறந்த தம்பதியாக அறிவித்து பாதுகாக்க வேண்டும். 'இந்த சலுகைகளுக்காகவே பலரும் ஜாதி மாறி திருமணம் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க'ன்னு நினைக்கிறாரோ? அகில இந்திய இளைஞர் காங்., செயலர் லெனின் பிரசாத் பேச்சு: தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக நான் இருந்தபோது, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன், ராகுலின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. அப்போது, என் தலைமையில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்காக, 13 மாவட்ட நீதிமன்றங்களில் இன்றும் ஆஜராகி வருகிறேன். ராகுல் கரத்தை வலுப்படுத்த பல போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த நிர்வாகிகளுக்கு நன்றி. 'அகில இந்திய பதவிக்கு போயிட்டதால, இனிமே என்னை போராட்ட களத்துக்கு கூப்பிடாதீங்க'ன்னு நன்றி சொல்லி விடை பெறுகிறாரோ? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேட்டி: தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு, நாளுக்கு நாள் மோசமாகி கொண்டிருக்கிறது. தி.மு.க.,வினர், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தாமல், பிள்ளை பிடிப்பவர்கள் போல், மற்ற கட்சிகளில் இருந்து, ஆட் களை பிடிப்பதில் தான் மும்முரமாக இருக்கின்றனர். அது சரி... '2 கோடி பேரை கட்சியில சேர்க்கணும்' என்ற முதல்வரின் இலக்கை எட்டியாக வேண்டாமா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி