உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வேலுமணி பேச்சு: அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமியின் பிரசாரம், 100 நாட்களை கடந்துள்ளது. ஒவ்வொரு தொகுதியிலும் மக்கள் ஆரவாரமாக அவரை வரவேற்கின்றனர். எங்கள் கூட்டணிக்கு இன்னும் சில கட்சிகள் வரும். 2026ல் பழனிசாமி, தமிழகத்தின் முதல்வராவார். சிலர் உடனே கட்சி ஆரம்பித்து, உடனே முதல்வராகி விடலாம் என நினைக்கின்றனர்; அது, ஒருபோதும் நடக்காது. 'கூட்டணிக்கு சில கட்சிகள் வரும்'னு சொல்லிட்டு, ஜாடை மாடையாக விஜய் கட்சியை வம்புக்கு இழுக்கிறாரே... அந்த கட்சிக்கான கூட்டணி கதவை அடைச்சுட்டாங்களோ? தமிழக பா.ஜ., பொதுச்செயலர் முருகானந்தம் அறிக்கை: சென்னை துரைப்பாக்கம், கண்ணகி நகரில், அறுந்து கிடந்த மின் ஒயர் குறித்து மக்கள் புகார் கொடுத்தும், மின் வாரியம் அலட்சியம் காட்டியது. விளைவு, வரலட்சுமி என்ற துாய்மை பணியாளர் உயிர் பறிபோனது. தமிழக மின் வாரியத்தில், 60,000க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை நிரப்பாமல், ஒப்பந்த ஊழியர்களிடம் வேலை வாங்கி, மக்களின் உயிரை பணயம் வைக்கிறது தி.மு.க., அரசு. மின் வாரியத்தில் மட்டுமா... ஒட்டுமொத்த அரசு துறைகளிலும் லட்சக்கணக்கில் காலியிடங்கள் இருக்கே! தி.மு.க., மாணவர் அணி மாநில செயலர் ராஜிவ்காந்தி பேச்சு: தமிழக மக்களுக்கு, தங்கள் பிள்ளையை நன்றாக படிக்க வைத்து, அமெரிக்கா, பிரிட்டன், கனடா போன்ற நாடுகளுக்கு அனுப்ப வேண்டும் என்ற கனவு தான் உள்ளது. ஒரு போதும் எங்களுக்கு பீஹார், உ.பி., -- ம.பி., மாநில கனவு இல்லை. காரணம், அந்த ஊர்களில், அவர்களின் மொழிகளை மறந்து, ஹிந்தியை படித்தனர். இதனால், வேலை இல்லாமல் என் ஊருக்கு பானிபூரி விற்க வருகின்றனர். தமிழகத்தில் எலக்ட்ரிக்கல், ஆட்டோ மொபைல் கடைகள் நடத்துற வட மாநிலத்தினர் எல்லாம் இவர் கண்ணுக்கு தெரியலையோ? ம.தி.மு.க.,வில் இருந்து நீக்கப்பட்டுள்ள மல்லை சத்யா பேட்டி: வைகோவை நம்பி லட்சக்கணக்கானவர்கள், அவரை பின்தொடர்ந்தனர். அரசியலில் தவறான முடிவுகள் எடுத்து, தன்னை நம்பி வந்தவர்களை நட்டாற்றில் விட்டார். எஞ்சி இருந்தவர்களையும் தன் மகன் துரைக்காக இழந்து, சில ஆயிரம் பேராக குறைந்தவர்களிடம், 'தேனாறும், பாலாறும் ஓடும் சொர்க்க பூமிக்கு அழைத்து செல்வே ன்' என, பொய்யான வாக்குறுதிகளை கொடுத்து நம்ப வைத்து பேசுவது தான், வேதனையாக இருக்கிறது. ம.தி.மு. க.,வில் இருந்து வெளியேற்றப்பட்டதற்கு சந் தோஷப்படுறாரா, வேதனைப் படுறாரான்னு தெரியலையே!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !