மனிதநேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி பேட்டி: அ.தி.மு.க.,வின்
பலவீனத்தை பயன்படுத்தி, பா.ஜ., தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வந்துள்ளது.
அ.தி.மு.க.,வை பா.ஜ., கபளீகரம் செய்து விடும். மஹாராஷ்டிராவில், சிவசேனா
கட்சியை பலவீனப்படுத்தினர். ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக் என
பா.ஜ.,வுடன் நெருக்கம் காட்டியோர், அரசியலில் அதல பாதாளத்துக்கு
தள்ளப்பட்டுள்ளனர். இதை அ.தி.மு.க., புரிந்து கொள்ள வேண்டும். பா.ஜ.,வுடன்
கூட்டணி அமைத்த நிதிஷ்குமார், குமாரசாமி, சந்திரபாபு நாயுடு என, பலரும்
அரசியலில் உச்சத்தில் இருப்பது இவர் கண்ணுக்கு படலையா? வி.சி., கட்சி பொதுச்செயலர் ரவிகுமார் எம்.பி., பேச்சு: பட்டியலினத்தை சேர்ந்த, திண்டிவனம் நகராட்சி ஊழியர் முனியப்பனை காலில் விழ வைத்து மன்னிப்பு கேட்க செய்தவர்களை கைது செய்ய வேண்டும். முதல்வர் வெளிநாடு சென்றிருந்த நேரத்தில் திண்டிவனம் நகராட்சியில் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது. இந்த அரசு மீது சேறு வாரி இறைப்பதற்கு வாய்ப்பளிக்காதீர்கள். வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலந்தது, நெல்லையில் பட்டியலின மாணவர் கவின் ஆணவ கொலை எல்லாம், முதல்வர் ஊரில் இருக்கும் போதுதானே நடந்துச்சு! தமிழக சட்டசபை சபாநாயகர் அப்பாவு பேட்டி: மத்திய அரசு கடந்த எட்டு ஆண்டுகளா க, ஜி.எஸ்.டி., வரியை தொடர்ந்து அதிகரித்து மக்களை கசக்கி பிழிந்தது. தற்போது வரியை குறைத்தது போல் விளம்பரப்படுத்துகிறது. ஆனால், இந்த வரி குறைப்பு நடவடிக்கையால் மக்களுக்கோ, மாநில அரசுகளுக்கோ எந்தவித நன்மையும் இருப்பதாக தெரியவில்லை. மத்திய அரசு என்ன செய்தாலும், அதன் முழு பயனும் அவர்களுக்குத் தான் கிடைக்குமே தவிர, மக்களுக்கும், மாநில அரசுக்கும் எந்த நன்மையும் இல்லை. ஜி.எஸ்.டி., வரியில் விலக்கு அளிக்கப்பட்ட பால், பனீர், ரொட்டியை எல்லாம் தமிழர்கள் யாருமே சாப்பிடுறது இல்லையா? குன்னம் தொகுதி அ.தி.மு.க., முன்னாள் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் பேட்டி: கவர்ச்சியான ஆளுமை மிகுந்த தலைவர்களான, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவருமே, கட்சியின் தேர்தல் வெற்றியை மட்டும் கருத்தில் கொண்டு, பிரிந்தவர்களை நேரில் சென்று அழைத்து பேசி, கட்சியை வலுப்படுத்தினர். அதுபோன்ற ஆளுமை இல்லாத பழனிசாமி, பிரிந்தவர்கள் சேர்ந்தால் தன் தலைமை பறிபோகும் என்ற பயத்தில், யாரையும் சேர்க்க மறுக்கிறார். வெளியில் இருந்து உள்ளே வர்றவங்க, 'பழனிசாமி தலை மைக்கு பங்கம் ஏற்படுத்த மாட்டோம்'னு எழுதி தருவாங்களா?