உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் பேட்டி: தனியார் பள்ளிகளை விட, அரசு பள்ளிகளில் கட்டட வசதி சிறப்பாக உள்ளது. விடுதி சமையலறையில் கழிவுநீர் எளிதாக செல்லும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளதால், எந்தவித துர்நாற்றமும் வீசாது. ஒவ்வொரு அறையிலும் ஆறு மாணவர்கள் தங்குவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. பால்கனி, நுாலகம், உடற்பயிற்சி கூடம், உள் விளையாட்டரங்கம், இன்டர்நெட் உட்பட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. * விடுதிகளில் எல்லா வசதிகளையும் செய்துட்டா மட்டும் போதாது... பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களையும் நியமிக்கணும்... அப்பதான் மாணவர்கள் எதிர்காலம் சிறக்கும்! *** தமிழக மாணவர் காங்., தலைவர் சின்னதம்பி பேச்சு: சமீபகாலமாக அரசியல், வணிகம் மற்றும் தனிப்பட்ட நிகழ்வுகளை முன்னிட்டு சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொது இடங்களில் சட்டத்திற்கு புறம்பாக, பேனர்கள் மற்றும் விளம்பர பலகைகள் கட்டப்படுகின்றன. இதனால், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது. இவற்றால், மாநிலத்தின் பல பகுதிகளில் விபத்து நிகழ்ந்து, உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. பேனர் விதிகளை மீறும் அரசியல் கட்சி, தனிநபர் அல்லது நிறுவனங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். * சென்னை, பள்ளிக்கரணையில் பேனர் விழுந்து இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்தப்ப, எல்லா அரசியல் கட்சிகளும் பேனர்கள் வைக்க மாட்டோம்னு அறிவிச்சாங்களே... அதெல்லாம் காத்தோட போயிடுச்சோ? ------ தமிழக கனிமவள துறை அமைச்சர் ரகுபதி பேச்சு: கல்வி தான், மனிதர்களிடம் இருந்து திருட முடியாத சொத்து. கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்தால், வாழ்க்கையில் முன்னேற முடியும். அதனால் தான், கல்விக்கு முதல்வர் அதிக நிதி ஒதுக்கி, முதன்மையாக கல்வியை எடுத்துச் செல்கிறார். இந்தியாவிலேயே அதிகமாக உயர்கல்வி படிக்க கூடியவர்கள் உள்ள மாநிலமாக தமிழகம் இருப்பது தான், நம் அரசின் ஐந்தாண்டு கால சாதனை. * உயர்கல்வி படித்த எத்தனை பேருக்கு வேலை வாய்ப்பு கிடைச்சிருக்கு என்ற புள்ளி விபரங்களை தர முடியுமா? ------- அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேச்சு: நம் கட்சியின் பூத் கமிட்டி செயலர்கள், வார்டு செயலருடன் இணைந்து, 'வாட்ஸாப்' குழு ஏற்படுத்தி, தேர்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். நவீன காலத்தில் இந்த குழுக்கள் அத்தியாவசியமாகி விட்டன. அதற்கு ஏற்றாற்போல், 'அப்டேட்' ஆகுங்கள். முதல் தலைமுறை வாக்காளர்கள் துவங்கி அனைவருமே சமூக வலைதளங்களில் உள்ளனர். தொழில்நுட்பங்களை சரியாக பயன்படுத்தி மக்களை சந்திக்க வேண்டும். * சமூக வலைதளங்களின் பயன்பாட்டை இவரும் உணர்ந்துக்கிட்டாரே... இனி, அ.தி.மு.க., வெற்றியை யாராலும் தடுக்க முடியாது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி