உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

தி.மு.க., செய்தி தொடர்பு குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை: தொண்டர்களை, தலைவன் பாதுகாப்பான்; தலைவனை தொண்டர்கள் பாதுகாப்பர். ஆனால், தன்னை மட்டும் பாதுகாத்து, தொண்டர்களை தெருவில் விட்டுவிட்டு, பயந்தோடி பங்களாவுக்குள் பதுங்குகிறார் என்றால், அவர் பொது வாழ்வுக்கு பொருந்தாத சுயநலவாதி என்பதே உண்மை. தன் தவறை உணர்ந்து திருத்தி கொள்வதற்கு மாறாக, அதை பிறரது தவறு போல் சித்தரிப்பது கொடிய காரியமாகும். இதைத்தான் விஜயும், அவரது கட்சியினரும் தொடர்ந்து செய்து வருகின்றனர். மொத்தத்தில், தவறுக்கு பொறுப்பேற்கும் பக்குவம் ஆளும் தரப்புக்கும், விஜய் தரப்புக்கும் அறவே இல்லை என்பது தான் கசப்பான உண்மை! மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈசுவரன் அறிக்கை: கட்டாய கல்வி உரிமை சட்ட மாணவர் சேர்க்கையை துவக்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். தமிழகத்திற்கான கல்வி நிதியை நிறுத்தி வைக்காமல், மத்திய அரசு விடுவிக்க வேண்டும். தமிழக அரசு உடனே மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்ற, எங்களின் தளராத பல்வேறு போராட்டங்கள் காரணமாக, தமிழக அரசு, கட்டாய கல்வி உரிமை சட்டத்திற்கான சேர்க்கையை துவக்க உள்ளது. இந்த வெற்றியை கோடிக்கணக்கான ஏழை குழந்தைகளுக்கு சமர்ப் பிக்கிறோம். அதுலயும், 'ஏற்கனவே சேர்ந்த குழந்தைகளுக்கு தான் இந்த சேர்க்கை பொருந்தும்'னு, அரசு தரப்புல, 'இக்கன்னா' வச்சுட்டாங்களே! தமிழக பா.ஜ., மாநில செயலர் கராத்தே தியாகராஜன் பேச்சு: தமிழக பா.ஜ., தலைவராக அண்ணாமலை இருந்தபோது, இளைஞர்கள் மத்தியில் பெரும் எழுச்சி ஏற்பட்டது. அவர், பிரதமர் மோடியின் தீவிர பக்தர். மறைந்த காங்., தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தியை போல அண்ணாமலை பரபரப்பாக இயங்கினார். மறைந்த காங்., மூத்த தலைவர் மூப்பனாரை போல, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அமைதியாக பல்வேறு காரியங்களை சாதிக்க கூடியவர். தான் முன்னாள் காங்கிரஸ்காரன் என்பதை இன்னும் மறக்காம இருக்காரே! நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேட்டி: விஜய் மீது எனக்கு பாசம் உண்டு; ஆனால், அவரது அரசியல் செயல்பாடு பிடிக்கவில்லை. 'திராவிடமும், தமிழ் தேசியமும் ஒன்று' என, விஜய் சொல்வதை ஏற்க முடியாது. தி.மு.க.,வை அரசியல் எதிரி என அறிவிக்கிறார். அப்படி என்றால், அக்கட்சியை எப்படி வீழ்த்த வேண்டும் என, பேச வேண்டும். பா.ஜ.,வை கொள்கை எதிரி என்கிறார். அப்படி என்றால், காங்கிரஸ் மட்டும் கொள்கை நண்பனா? இவரும் கூடத்தான், தி.மு.க.,வை ஒருபக்கம் கடுமையா திட்டுறாரு... திடீர்னு முதல்வரை தேடி போய் பார்த்துட்டு, 'இது தமிழ் உறவு'ன்னு குழப்பலையா?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை