பேச்சு, பேட்டி, அறிக்கை
ஹிந்து தமிழர் கட்சி தலைவர் ராம ரவிகுமார் அறிக்கை: திண்டுக்கல்லில் இருக்கும் கிராமம், செட்டிநாயக்கன்பட்டி. தமிழக அரசு ஜாதி பெயரை மாற்றுவோம் என சொல்லும் உத்தரவின்படி, இந்த ஊர் பெயரை, 'செட்டிபட்டி' என்று அழைப்பரா அல்லது நாயக்கன்பட்டி என்று அழைப்பரா? இரண்டிலுமே ஜாதி பெயர் வருகிறது என்பதால், 'பட்டி' என்று அழைப்பரா... பதில் சொல்லுங்கள். இந்த கிராமத்தில் தான், திண்டுக்கல் கலெக்டர் அலுவலகமே அமைந்துள்ளது. இந்த மாதிரி நிறைய ஊர்களின் பெயர்கள் உள்ளன... எல்லாவற்றையும் மாத்தினா, 'சுக்குமி, ளகுதி, ப்பிலி' காமெடியா மாறிடும்! பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் அறிக்கை: தமிழகத்தில் தயாரிக்கப்பட்ட, 'கோல்ட்ரிப்' இருமல் மருந்தை குடித்த மத்திய பிரதேசம், ராஜஸ்தானைச் சேர்ந்த, 20க்கும் அதிகமான குழந்தைகள் உயிரிழந்துள்ளன. இதற்கு, தமிழக மருந்து கட்டுப்பாட்டு துறையின் அலட்சியப் போக்கே காரணம். இதில், தவறு செய்த நிறுவனத்தினர், அவற்றை கண்காணிக்க தவறிய அனைத்து நிலை அதிகாரிகள் மீதும், கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.துறையின் அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு இதில் பொறுப்பில்லையா...? அவரை சுட்டிக்காட்டாம ராமதாஸ் நாசுக்கா நழுவுவது, பல கேள்விகளை எழுப்புதே! அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாநில துணை செயலர் கற்பகம் பேச்சு: பெண்களை மரியாதை குறைவாக பேசக்கூடிய பல அரசியல் கட்சிகள் உள்ளன. அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சண்முகம், சமீபத்தில் பெண்களை இலவச பொருட்களுடன் ஒப்பிட்டு பேசியுள்ளார். இதை, பெண்கள் மீதான வன்முறையாக கருத வேண்டும். அவர் மீது தனிமனித உரிமை மீறல், வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க.,வின் முன்னாள் அமைச்சர் பொன்முடி, அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பெண்கள் குறித்து இழிவா பேசியப்ப, அவங்க மீது நடவடிக்கை எடுங்கன்னு இவங்க கேட்காதது ஏன்? அ.தி.மு.க., மருத்துவ அணி மாநில இணை செயலர் டாக்டர் சரவணன் அறிக்கை: எதற்கெடுத்தாலும், 'இந்தியாவிலேயே முதன்மையான மாநிலம் தமிழகம்' என, முதல்வர் ஸ்டாலின் பெருமை பேசி வருகிறார். ஆனால் உண்மையில், கடன் வாங்குவது, லாக்கப் மரணங்கள், போதை பொருள் நடமாட்டம், சட்டம் - ஒழுங்கு சீர்கேடு, பாலியல் பலாத்காரம் ஆகியவற்றில் தான் தமிழகம் முதலிடம் வகிக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, நீதிமன்றங்களிடம் கண்டனங்களும், குட்டும் வாங்கி முதலிடத்தில் உள்ள ஒரே அரசு ஸ்டாலின் அரசு தான். வரும் சட்டசபை தேர்தலில் ஸ்டாலின் அரசுக்கு மக்கள் குட்டு வைத்து, அ.தி.மு.க., ஆட்சியை கொண்டு வருவர். 'டாஸ்மாக்' மது விற்பனையிலும் தமிழகம் தான் 'நம்பர் ஒன்' தெரியுமா?