உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய குடியரசு கட்சி மாநில தலைவர் செ.கு.தமிழரசன் பேச்சு: ஜாதி ஆணவ படுகொலைகளை தடுக்க, ஓய்வுபெற்ற நீதிபதி பாஷா தலைமையில் ஆணையம் அமைத்துள் ளீர்கள். உங்களுக்கு சட்டம் போட அதிகாரம் உள்ளது. அப்புறம் எதற்கு ஆணையம் போடுகிறீர்கள்; இது வெறும் கண்துடைப்பு. 'தி.மு.க., ஆட்சிக்கு வந்தால், அரசு பணி நியமனங்களில் தாழ்த்தப்பட்ட மக்களுக் குரிய வெற்றிடங்கள் எவ்வளவு என்பதை கண்டறிந்து நிரப்புவோம்' என, தேர்தல் அறிக்கையில் கூறினீர் கள். ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் ஆகியுள்ளன. எவ்வளவு இடங்களை நிரப்பியுள்ளீர்கள். இல்லை, நிரப்புவதற்கு என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்? 'ஆட்சிக்கு வந்தால், 3.50 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்புவோம்'னு சொன்னதை முதலில் நிறைவேற்றினால் தானே, இவரது கோரிக்கையை கண்டுக்க முடியும்! தமிழக பா.ஜ., இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா பேட்டி: டெல்டா பகுதிகளில் நெல் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பைசன் திரைப்படத்தை பார்க்க, முதல்வர் ஸ்டாலின் நேரம் செலவிடுகிறார். முதல்வர் திரைப்படம் பார்க்கக்கூடாது என யாரும் கூறவில்லை. மக்கள் சிரமப்படும் போது, நடிகர்கள், இயக்குநருடன் நேரத்தை செலவிட வேண்டுமா என்று தான் கேட்கிறோம். மக்கள் சிரமப்படுவதை பார்க்க பொறுக்காமல் கூட, முதல்வர் சினிமா பார்க்க போயிருக்கலாம் அல்லவா? துாத்துக்குடி தி.மு.க., - எம்.பி., கனிமொழி பேட்டி: டெல்டா மாவட்டங்களில், மழையால் பாதிக்கப்பட்ட நெல் வயல்களில் மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகின்றனர். இம்முறை அவர்கள் பரிந்துரையின்படி, விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை மத்திய அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் முதல்வர் கேட்கும் தொகையை விட, மிகக் குறைவாகவே மத்திய அரசு கிள்ளிக் கொடுக்கிறது. மத்திய அரசு கிள்ளிக் கொடுத்தாலும், மாநில அரசு தன் சொந்த நிதியிலிருந்து அள்ளிக் கொடுத்தால் தான், தேர்தலில் விவசாயிகள் ஆதரவு தி.மு.க.,வுக்கு கிடைக்கும்! தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேட்டி: பருவ மழையில் இருந்து மக்களை காப்பாற்ற, ஒரு மாத காலமாக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. 'முதல்வர் சினிமா விமர்சகராக மாறி விட்டார்; விவசாயிகளை பற்றி கவலையில்லை' என்றெல்லாம் அ.தி.மு.க., பொதுச் செயலர் பழனிசாமி விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சி என்றால் அப்படி தான் சொல்வர்; எங்களை வாழ்த்தவா செய்வர்? சட்டசபை தேர்தலுக்கு பின், நாமும் எதிர்க்கட்சியாகிட்டா விமர்சிக்க வேண்டி வரும் என்பதால், இப்பவே உஷாரா இருக்காரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
அக் 28, 2025 10:06

முதலில் கனிமொழி, மத்திய அரசு நெல் கொள்முதலுக்கு எவ்வளவு கொடுக்கிறது என்பதனைத் தெரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும் முறையான படிப்பறிவுள்ளவர்களை நாம் தேர்ந்தெடுத்தால் இந்த மாதிரி பொய்ச்செய்திகளைப் பரப்புவோரைப் புறந்தள்ளலாம்