உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை / பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் வீரமணி பேச்சு: உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, தமிழகம் உட்பட, 12 மாநிலங்களில் சிறப்பு வாக்காளர் திருத்தத்தை தேர்தல் கமிஷன் நடத்துகிறது; இதற்கு, முதல்வர் ஸ்டாலின் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். தமிழகம் முழுதும் நகரப் பகுதிகளில் கள்ள ஓட்டுகள் அதிகம் உள்ளதால் தான், கடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க., ஆட்சியை பிடித்தது. குறிப்பாக, சென்னை கொளத்துார் சட்டசபை தொகுதியில், 30,000 கள்ள ஓட்டுகள் உள்ளன; அதனால் தான் ஸ்டாலின் வெற்றி பெற்றார். அப்படி என்றால், 2021ல் ஸ்டாலின் வெற்றி பெற்றதுமே, இது சம்பந்தமா இவங்க வழக்கு போடாம இருந்தது ஏன்? புதிய தமிழகம் கட்சி நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி பேட்டி: சென்னை அண்ணா பல்கலையில் ஒரு மாணவி, அவரது தோழர் முன்னிலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது, நாடு முழுதும் எதிரொலித்தது. தற்போது, கோவை விமான நிலையம் அருகே, 19 வயது பெண் மூன்று பேர் கும்பலால் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது. இது போன்ற குற்றம் செய்பவர்களுக்கு, காவல் துறை மீது அச்சம் ஏற்படாமல் இருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. இது போன்ற பாலியல் குற்றவாளிகள் சிலரை சுட்டு தள்ளினால் மட்டுமே, குற்றங்களை குறைக்க முடியும்! தமிழக கைத்தறி மற்றும் துணி நுால் துறை அமைச்சர் காந்தி பேச்சு: வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பான எஸ்.ஐ.ஆர்., குறித்து, மக்கள் பயப்பட தேவையில்லை; அதை, நம் முதல்வர் ஸ்டாலின் பார்த்துக் கொள்வார். இந்த விவகாரத்தில், இந்தியாவுக்கே முன் மாதிரியாக தமிழக முதல்வர் விளங்குகிறார். எஸ்.ஐ.ஆர்., மட்டுமல்ல, பிரதமர் மோடியே தமிழகம் வந்தாலும், இங்கு ஒன்றும் நடக்காது. எஸ்.ஐ.ஆர்., குறித்து, எந்த மக்களும் பயப்படுற மாதிரி தெரியலை... தி.மு.க.,வினர் தான், தாமும் பயந்து, மற்ற கட்சியினரையும் பயமுறுத்திட்டு இருக்காங்க! அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி: 'அ.தி.மு.க., வேண்டாம்' என, அ.ம.மு.க.,வை துவங்கிய தினகரன் இன்று, 'தாய் வீட்டுக்கு வர வேண்டும்' என பேசுகிறார். தமிழகத்தில் மன்னராட்சிக்கு முடிவு கட்டி, மக்களாட்சியை கொண்டு வர அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி பாடுபட்டு கொண்டிருக்கிறார். பழனிசாமி உதவி செய்யும்போது, அவரது மகன் உதவி செய்வதில் ஆச்சரியம் இல்லை; இதை சிலர் வாரிசு அரசியல் என்ற பார்வையில் பார்த்தால், அதற்கு நாம் பொறுப்பாக முடியாது. செங்கோட்டையன் கூறிய வாரிசு அரசியல், இவங்க கட்சியிலும் இலைமறை, காய் மறையா மெல்ல துளிர்விடுவது நல்லாவே தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை