பேச்சு, பேட்டி, அறிக்கை
விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலர் ரவிகுமார் எம்.பி., பேட்டி: பீஹார், குஜராத் மாநிலங்களில், அம்மாநில அரசுகள் மதுவிலக்கை அமல்படுத்தி, ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி வருகின்றன. அந்த மாநில அரசுகள், மது வருவாயை இழந்து, நிதி ஆதாரத்தை சீரமைத்து நிர்வாகம் செய்யும்போது, தமிழக அரசால் முடியாதா? அதிகம் மது அருந்துவோர் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகத்திலும், பூரண மதுவிலக்கை அமல்படுத்த வி.சி., கட்சி கோரி வருகிறது. அனைத்து கட்சிகளும் அதை வலியுறுத்த வேண்டும். மறுபடியும் தி.மு.க., ஆட்சிக்கு வரட்டும்... மது அருந்தும் பட்டியலில், தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வந்துடுவாங்க! ஹிந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் அறிக்கை: பீஹார் சட்டசபை தேர்தலில் ராகுலும், தேஜஸ்வி யாதவும் இணைந்து, 'குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை, மாதந்தோறும் 10,000 ரூபாய் உதவித்தொகை' என்று இலவசங்களையும், கவர்ச்சி திட்டங்களையும், தேர்தல் வாக்குறுதிகளாக கொடுத்த போதும் மக்கள் ஏமாறவில்லை. வரும் தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க., மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் படுதோல்வியை சந்திக்கும் என்பதையே, பீஹார் தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. '10,000 ரூபாய் வாக்குறுதிக்கே மயங்காதவங்க, தி.மு.க., தரும் 1,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகைக்கு எல்லாம் மயங்க மாட்டாங்க'ன்னு சொல்றாரோ? அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் அறிக்கை: துணை முதல்வர் உதயநிதி, 'அ.தி.மு.க.,வினருக்கு ஈ.வெ.ரா., அண்ணாதுரையின் கொள்கை பற்றி தெரியாது; எதற்காக அ.தி.மு.க., துவங்கப்பட்டது என்பது கூட தெரியாது' என, விமர்சனம் செய்துள்ளார். வாரிசு என்பதால் அதிகாரத்தை அடைந்துள்ள உதயநிதிக்கு, சாதாரண தொண்டர்களையும் தலைவராக்கும் அ.தி.மு.க.,விற்கு கொள்கை பாடம் எடுக்க, எந்த தகுதியும் இல்லை. அரசியல்ல அஞ்சு வருஷ ஜூனியரான உதயநிதி எல்லாம் பாடம் எடுக்க வேண்டிய அளவுக்கு தான், 50 ஆண்டுகளை கடந்த அ.தி.மு.க.,வின் நிலை இருக்கு! தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை: தமிழகத்தில், இரும்பு கோட்டை போல இருக்கிற, 'இண்டியா' கூட்டணிக்கு எதிரான ஓட்டுகளை, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணியும், தமிழக வெற்றிக் கழகம் மற்றும் நாம் தமிழர் கட்சியும் பங்கு போட்டுக் கொள்ள போகின்றன. இந்த சூழல் தான், 2026 சட்டசபை தேர்தலில் இருக்கப் போகிறது. அதனால், இண்டியா கூட்டணி தமிழகத்தில் மீண்டும் வெற்றி பெறுவதை, எந்த சக்தியாலும் தடுக்க முடியாது. தி.மு.க., அரசுக்கு எதிராகவே மக்கள் இருக்காங்க; ஆனாலும், எதிர்ப்பு ஓட்டுகள் சிதறி நாங்க ஜெயிச்சிடுவோம்னு சொல்லாம சொல்றாரோ?