உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

தமிழக பா.ஜ., தலைமை செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி அறிக்கை:

'தமிழக துணை முதல்வர் உதயநிதியின் சனாதன தர்மம் குறித்த கருத்துகள், வெறும் அரசியல் விமர்சனம் என்பதை ஏற்க முடியாது. ஹிந்து மதத்தை எதிர்ப்பது, தி.மு.க.,வின் நீண்ட கால வரலாறு' என்றும், ஹிந்து மதத்தின் மீது வெறுப்பை விதைப்பவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படாமல் இருப்பதாகவும், உயர் நீதிமன்றம் கவலை தெரிவித்துள்ளது. மேலும், 'தமிழகத்தில் உதயநிதிக்கு எதிராக எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. மற்ற மாநிலங்களில் வழக்குகள் உள்ளன' என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. இனியாவது, உதயநிதி மீது வழக்கு தொடுக்கப்படுமா? அதெல்லாம், தமிழகத்தில், தே.ஜ., கூட்டணி ஆட்சிக்கு வந்தால் தான் சாத்தியம்!

முன்னாள் எம்.எல்.ஏ.,வும், அ.தி.மு.க., மருத்துவ அணி இணை செயலருமான டாக்டர் சரவணன் பேட்டி:

தமிழகம் முழுதும் சிக்குன் குனியா காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, நோய் முற்றியபின், 'நடவடிக்கை எடுக்கிறோம்' என கூறக் கூடாது. சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், எப்போதும் போல முதல்வர், துணை முதல்வருக்கு புகழ்பாடுவதை கொஞ்சம் தள்ளிவைத்து விட்டு, தமிழகம் முழுதும் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். ' காய்ச்சல் அடுத்த வருஷம் கூட வரும்... ஆனா, இந்த வருஷம் தானே தேர்தல் வருது... இப்ப போய் முதல்வர், துணை முதல்வர் புகழ் பாடுவதை தி.மு.க.,வினர் நிறுத்துவாங்களா?

தமிழக பா.ஜ., பொதுச்செயலர் ஏ.பி.முருகானந்தம் பேச்சு:

தமிழகத்தின் இருளாட்சியை நீக்கி, நல்லாட்சியை உருவாக்க, தே.ஜ., கூட்டணியில், மக்கள் விரும்பும் கட்சிகள் எல்லாம் இணைகின்றன. தி.மு.க., அரசுக்கு எதிரான ஓட்டுகளை ஒருங்கிணைக்கும் முயற்சியாக, பா.ம.க., - அ.ம.மு.க., கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. தி.மு.க.,வுக்கு எதிர்க்கட்சி வரிசை கூட கிடைக்காத வகையில், வலுவான வெற்றிக் கூட்டணியாக, தே.ஜ., கூட்டணி மாறும். பா.ம.க., - அ.ம.மு.க., ஓட்டு வங்கியே, தே.ஜ., கூட்டணியை கரை சேர்த்துடும்னு அபாரமா நம்புறாரோ?

தி.மு.க., செய்தி தொடர்புக்குழு துணை தலைவர் மருது அழகுராஜ் அறிக்கை:

அ.தி.மு.க.,வை, பா.ஜ., ஒருபோதும் முன்னுக்கு கொண்டு வராது; மூன்றாம் இடத்துக்குத்தான் கொண்டு போகும். ஏனென்றால், இரண்டாம் இடம் என்பது, பா.ஜ.,வின் இலக்கு. அப்பத்தை பங்கு பிரிக்கும் சூழ்ச்சியில், பா.ஜ.,வுடன் சேர்ந்த அ.தி.மு.க., குல நாசமாகும். இதுவே, வருங்காலம் சொல்லப்போகும் வரலாறு. 'தி.மு.க.,வுக்கு எதிராக யார் கிளம்பினாலும், அவங்க அழிஞ்சி போயிடுவாங்க'ன்னு சாபம் குடுக்கிறாரோ?


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை