வாசகர்கள் கருத்துகள் ( 1 )
உங்கள் பத்திரிகையில் அவரது பெயர் வருவதே கமல் செய்த அரசியல் வெற்றி
ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை: சட்டசபை தேர்தல் முடிவு, மக்கள் சக்தியை உணர்த்துவதாக இருக்கிறது. பணத்தாசை காட்டி, ஓட்டுகளை வாங்கி விடலாம் என்ற எண்ணம் துாள் துாளாக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில், தி.மு.க.,வுக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. கோர்ட் உத்தரவுகளை மதிக்காத போக்கு, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற கோர்ட் உத்தரவிட்டும், சர்வாதிகாரமாக அதை ஏற்க மறுத்தது என, பல விதங்களில் மக்களிடம் வெறுப்பு ஏற்படுத்தியது. இவையே, தி.மு.க.,வின் தோல்விக்கு முக்கிய காரணம். அப்படி என்றால், அ.தி.மு.க., தோல்விக்கு என்ன காரணமாம்...? 'திராவிட கட்சிகளே வேண்டாம்' என்ற முடிவுக்கு தமிழக வாக்காளர்கள் வந்துட்டாங்க என்பதுதான் நிஜமான காரணமோ!பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை: த.வெ.க., தலைவர் விஜய், தேர்தல் வாக்குறுதியில் தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வதாக அறிவிப்பு வெளியிட்டபோதே, அதை வரவேற்றோம். முதல்வராக பதவியேற்க உள்ள விஜய், இதை நிறைவேற்றும் வகையில் முதல் கையெழுத்து போட்டு, தற்காலிக ஆசிரியர்களின் தலையெழுத்தை மாற்றுவார் என்ற நம்பிக்கையோடு இருக்கிறோம். இந்த மாதிரி ஏகப்பட்ட வாக்குறுதிகளை விஜய் வாரி வழங்கியிருக்காரு... ஆட்சியில் உட்கார்ந்து, கஜானா நிலவரங்களை எல்லாம் ஆய்வு செய்த பிறகுதான், எதை எதை செய்ய முடியும்னு அவருக்கு தெரியவரும்! த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி: தே.ஜ., கூட்டணிக்கு ஓட்டு போட்ட மக்களுக்கு நன்றி. 'மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு' என கூறுவோம். அந்த வகையில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மக்கள் அளித்த தீர்ப்பை வரவேற்கிறேன். வலிமையான பாரதத்திற்கு துணை நிற்கும் வகையில், வளமான தமிழகத்தை அமைக்க இருக்கும் விஜய்க்கு வாழ்த்துகள். பா.ஜ.,வின் தாமரை சின்னத்தில், உங்க கட்சி வேட்பாளர்கள் ஐந்து தொகுதிகளில் போட்டியிட்டும், ஒரு தொகுதியில் கூட ஜெயிக்காம போன வருத்தம் உங்களுக்கு துளி கூட இல்லையா? மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் அறிக்கை: முதல் தேர்தலிலேயே மக்களுடைய நம்பிக்கையை பெறும் பேறு பெற்றிருக்கும் விஜய்க்கும், அவரது கட்சியினருக்கும் பாராட்டுகள். அவர்களது மக்கள் பணி சிறக்க வாழ்த்துகள். நீங்களும் தான், 50 வருஷங்களுக்கும் மேலா நடிகரா இருக்கீங்க... உள்ளூர் முதல் உலக அரசியல் வரை கரைச்சி குடிச்சிருக்கீங்க... ஆனா, கவுன்சிலர் தேர்தலில் கூட உங்களால ஜெயிக்க முடியாம போனது ஏன்னு சுயபரிசோதனை பண்ணி பார்த்தீங்களா?
உங்கள் பத்திரிகையில் அவரது பெயர் வருவதே கமல் செய்த அரசியல் வெற்றி