உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / பேச்சு, பேட்டி, அறிக்கை /  பேச்சு, பேட்டி, அறிக்கை

 பேச்சு, பேட்டி, அறிக்கை

இந்திய கம்யூ., கட்சியின், மத்திய கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் முத்தரசன் பேச்சு:

'தமிழக முதல்வர் விஜய், காவிரி விவகாரம் தொடர்பாக பேச வர வேண்டாம்' என்று, கர்நாடக முதல்வர் சிவகுமார் கூறிவிட்டார். தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள், விவசாயிகள் பேச்சைக் கேட்டு, 'கர்நாடகாவுக்கு போக மாட்டேன்' என்று விஜய் கூறி இருந்தால், அது கவுரவமாக இருந்திருக்கும். தற்போது, அழையா விருந்தாளி என்ற நிலையாகி விட்டது. அதே சிவகுமார், 'தமிழக முதல்வர் விஜய், காவிரி விவகாரத்தில் பக்குவமாக நடந்து கொள்கிறார்' எனச் சொன்னது, இவரது காதுக்கு எட்டலையோ?

தி.மு.க., முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏ.,வுமான அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு:

தமிழக முதல்வர் விஜயால், மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. யாருக்கும் அவர் உதவி செய்ததும் இல்லை. 'காவிரி பிரச்னையில், அங்குள்ள முதல்வரை நேரில் பார்ப்பேன்' என கூறினார். முதல்வர் விஜய், கர்நாடகாவிற்கு சென்றால், அவரை அங்கு பிடித்துக் கட்டி வைத்து விடுவர். ஒரு மாநில முதல்வரை, அடுத்த மாநிலத்தில் பிடித்துக் கட்டி வைக்க முடியுமா... அரசியலில் நீண்ட அனுபவம் உள்ள நீங்க, பால்வாடி குழந்தை மாதிரி பேசலாமா?

பா.ஜ., விவசாய அணியின் தமிழக தலைவர் ஜி.கே.நாகராஜ் பேட்டி:

டில்லியில் மாணவர்களின் போராட்டத்திற்கு மரியாதை கொடுத்து, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானை ராஜினாமா செய்ய வைத்து, ஆயிரக்கணக்கான பெற்றோரின் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறார் பிரதமர் மோடி. அவர் நினைத்திருந்தால் போராட்டக் களத்தை அங்குலம், அங்குலமாய் ஆய்வு செய்து, தேசவிரோத, அந்நிய சக்திகளை அடையாளம் காட்டியிருக்க முடியும். ஆனால், மாணவர்களின் எதிர்காலம் கருதி, கரப்பான் பூச்சிகள் இழுத்த இழுப்புக்கெல்லாம் அசைந்து கொடுத்திருக்கிறார் பிரதமர் மோடி. அவரது வியூகம், வன்முறையைத் துாண்ட நினைத்த எதிர்க்கட்சிகளுக்கு பலத்த அடியை கொடுத்திருக்கிறது. வாஸ்தவம் தான்... இதில், பிரதமர் மோடியின் ராஜதந்திரமே வெற்றி பெற்றிருக்கு!

காங்., தமிழக மூத்த தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை:

வடலுாரில் நடந்து வந்த வள்ளலார் பன்னாட்டு மையத் திட்டத்தை கைவிடுவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது, வள்ளலார் பக்தர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது. வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடிய வள்ளலார் பார்வை படும் இடத்தில் தான், முதியோர் இல்லமும், உணவு அருந்தும் இடமும் அமைய வேண்டும். வேறு இடத்தில் அமைவது, வள்ளலாரின் தனிப்பெரும் கருணைக்கு வலு சேர்க்காது. நீங்க, கடலுார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதால், இந்தப் பிரச்னையில் தனி அக்கறை காட்டுவது நல்லாவே தெரியுது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கண்ணன்
ஆக 04, 2026 08:49

சென்ற ஆட்சியில் இவர்கள் கூட்டணிக் கட்சிகள் தான் கேரளாவிலும் தமிழகத்திலும் ஆட்சியில் இருந்தன அப்போது முல்லைப் பெரியாறு அணை பற்ற இவர்கள் வாய் திறக்கவில்லையே! அப்போது வாயில் என்ன பிரியாணி இருந்ததா?


சமீபத்திய செய்தி