'வீ த லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை பேச்சு: 'மாணவர்கள் அனைவரும் ஆர்ப்பாட்டம், போராட்டம் செய்கின்றனர். யார்பேச்சையும் கேட்பதில்லை. கேட்டால், 'ஜென் ஸீ' என்கின்றனர்' என, பலரும் புலம்புகின்றனர். மாணவர்கள் செய்வது சரி தான். அவர்கள் பொறுமையாக இருந்ததால் தான், இந்தியா இந்த நிலைமையில் இருக்கிறது. பொறுமையாக இல்லாமல், வேகமாக இருந்ததால் தான், அமெரிக்கா, பிரிட்டன் எல்லாம் விரைவாக முன்னேறியிருக்கின்றன. அதனால், மாணவர்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதில் தவறு இல்லை. பிரதமர் மோடியின் 12 ஆண்டு கால ஆட்சியில், உலகின் ஆறாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா முன்னேறியிருப்பதாக, நீங்களே பலமுறை பெருமையா பேசியதை மறந்துட்டீங்களோ?அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் அறிக்கை: திருவாரூர், திருப்பத்துார், சிவகங்கை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், சட்டவிரோதமாக மணல் கொள்ளை நடப்பதாக புகார்கள் குவிந்து வருகின்றன. அதிலும், உளுந்துார்பேட்டையில் நடந்த மணல் கொள்ளை தொடர்பாக, காவல் துறையிடம் புகார் அளித்த கல்லுாரி மாணவி உள்ளிட்ட இரு பெண்கள் மீது, அடையாளம் தெரியாத கும்பல் நடத்தியுள்ள கண்மூடித்தனமான தாக்குதல், பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற் படுத்தியுள்ளது. திராவிட கட்சிகள் ஆட்சியில் நடந்த இதுபோன்ற அவலங்கள், தற்போதும் நீடிப்பது நல்லதல்ல என்பதை உணர்ந்து, ஆளுங்கட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து அறிக்கை: 'மேட்டூர் அணையில் இருந்து செப்., 1ம் தேதி முதல் தண்ணீர் திறக்கப்படும்' என தமிழக அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. அதேவேளையில், சம்பா சாகுபடிக்கு தொடர்ந்து தண்ணீர் கிடைப்பதற்கு, கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை, காவிரி மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்ற உத்தரவுகளின்படி பெற, தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகாவிடம் போராடி தண்ணீரை வாங்குறதுக்குள்ள, அக்டோபரில் வடகிழக்கு பருவமழையே வந்துடும் போலிருக்கு! த.வெ.க., பரப்புரை செயலர் நாஞ்சில் சம்பத் பேச்சு: தி.மு.க.,வில் பல முறை வெற்றி பெற்ற பெரியசாமி, நேரு, சக்கரபாணி போன்றவர்கள் சட்டசபை அனுபவம் பெற்றவர்கள். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அனுபவம் வாய்ந்தவர். இவர்கள் சட்டசபையில் எந்த கேள்வி கேட்டாலும், சுடச்சுட பதிலளிக்கக் கூடியவர்கள். ஆனால், பேச பயிற்சி பெறாத உதயநிதிக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கப்பட்டுள்ளது; அவருக்கு சட்டசபையில் பேச தெரியவில்லை. பொதுக்கூட்டங்கள்ல மட்டும் உதயநிதி நல்லா பேசுறாரா என்ன...? தஞ்சையில் ஏடாகூடமா பேசி கைதாகி, களேபரம் பண்ணியதை மறந்துட்டீங்களோ?