பா.ஜ., தேசிய செயலர் எச்.ராஜா பேட்டி: தமிழக சட்டசபை, கிறிஸ்துவ திருச்சபை போல் நடப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. அப்படி நடத்துவது தவறு என்பதை சபாநாயகர் புரிந்து கொள்ள வேண்டும். முதல்வர் விஜய் தலைமையிலான த.வெ.க., அரசு, மதச்சார்பற்றது என சபாநாயகர் பிரபாகர் நினைத்தால், சட்டசபையில் முதலில் திருக்குறள் சொல்ல வேண்டும். தமிழகத்தில், ஹிந்துக்கள் தான் பெரும்பான்மையாக உள்ளனர். திருக்குறள், தேவாரம், நாலாயிர திவ்ய பிரபந்தம், குர்ஆன் இவை அனைத்தையும் சொல்ல வேண்டும். இவை எல்லாத்தையும் படிச்சிட்டு, அப்புறம் தான் மக்கள் பிரச்னைகள் மீது விவாதம் நடத்தணும்னா, வருஷம் முழுக்க சட்டசபை கூட்டத்தை நடத்தணுமே! தி.மு.க.,வின் தொழிற்சங்க அமைப்பான, தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் பொதுச்செயலர் சண்முகம் பேட்டி:தமிழக அரசில், அனைத்து துறைகளிலும் தனியார்மயத்தை புகுத்துகின்றனர். தனியார்மயம் வந்தால், இட ஒதுக்கீடு இருக்காது. ஆகையால், தனியாரை புகுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். ஒப்பந்த அடிப்படையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவதை நாங்கள் எப்போதும் எதிர்ப்போம். கடந்த 1996ல், உங்க தலைவர் ஸ்டாலின் சென்னை மேயராக இருந்தப்ப, சென்னையில் குப்பை அள்ளும் பணிகளை தனியாருக்கு ஒப்படைத்து பிள்ளையார் சுழி போட்டதை மறந்துட்டீங்களோ? அ.ம.மு.க., பொதுச்செயலர் தினகரன் பேச்சு:தமிழகத்தில், த.வெ.க., ஆட்சிக்கு வந்தது முதல் அரிசி, சர்க்கரை, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை, 'கிடுகிடு'வென உயர்ந்து கொண்டே செல்கிறது. மக்களின் அன்றாட வாழ்வுடன் நேரடி தொடர்புடைய, அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த இயலாதது, த.வெ.க., அரசின் நிர்வாக திறமையின்மையை வெளிப்படுத்துகிறது. எனவே, அத்தியாவசிய பொருட்களின் விலை குறையும் வரை, ரேஷன் கடைகளில் வழங்கும் அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணெய் ஆகியவற்றின் அளவை உயர்த்தி வழங்க வேண்டும். நம்ம நாட்டுல ஏறிய விலைவாசி என்னைக்கு இறங்கியிருக்கு...? அதனால, ரேஷன் கடைகள்ல அரிசி, பருப்பு, எண்ணெயை தரமா வழங்கினாலே பல குடும்பங்களுக்கு அது பயனுள்ளதா இருக்கும்! புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி பேட்டி: தமிழகத்தில் த.வெ.க., அரசு வந்த பின், ஆதிதிராவிடர் நலத்துறை என்ற பெயர், சமூக நீதித்துறை என மாற்றப்பட்டுள்ளது. இந்த பெயரை சூட்ட வேண்டும் என, பல ஆண்டுகளாக நாங்கள் குரல் கொடுத்து வந்துள்ளோம். ஆனால், அதன் அமைச்சராக பொறுப்பேற்றுள்ள வன்னியரசு, சமூக நீதித்துறை மானிய கோரிக்கையின் போது, ஆதிதிராவிடர் என்று சொல்லி, அதன் அடை யாளத்தை அழிக்க முற்படு கிறார்; இதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? 'சமூக நீதித்துறை பெயர் மாற்றத்தில் உடன்பாடு இல்ல'ன்னு ஆரம்பத்துல சொல்லிட்டு, 'பல்டி' அடிச்சவர் தானே வன்னியரசு!