உள்ளூர் செய்திகள்

சொல்கிறார்கள்

சொல்கிறார்கள் / 25/07/26 சனிக்கிழமை இதழ் -----–––––––––––– அவள் விகடன், ஜூன் 16, 2026, பக்: 76 ‘பயத்தை விட்டு ஆங்கிலத்தில் பேசுவதே நல்ல மாற்றம் தான்!’ –––––––––– சமூக வலைதளம் மூலமாக, ஆங்கில மொழியை எளிமையாகவும், நகைச்சுவையாகவும் கற்றுத் தரும், விழுப்புரத்தைச் சேர்ந்த பெண், டானியா: நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே, விழுப்புரம் தான். பி.ஏ., – பி.எட்., முடித்துள்ளேன். பெற்றோர் அரசு ஊழியர்கள். சிறு வயது முதலே, பள்ளியில் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்ததால், ஆரம்பத்தில் தடுமாறினேன். அதன்பின், தொடர் பயிற்சிகள் வாயிலாக ஆங்கிலம் கற்றுக் கொண்டேன். என் நண்பர் ரொனால் ஹெல்ட், வெளிநாட்டில் வலைதள வடிவமைப்பு தொழில் செய்து வந்தார். அவரது நிறுவனத்திற்கு, ‘டிஜிட்டல் மார்க்கெட்டிங்’ செய்யும் தொழிலில் இணைந்தேன். அதன்பின், நாங்கள் திருமணம் செய்து கொண்டோம். திருமணத்திற்கு பின், வெளிநாட்டில் வசிக்கும் வாய்ப்பு கிடைத்தது. வெளிநாட்டில் உள்ள மக்களை பார்த்த போது தான், மொழி என்பது இலக்கணம் மட்டும் இல்லை... எப்படி பேசுகிறோம், எப்படி நடந்து கொள்கிறோம், பொது இடத்தில் நம்மை எப்படி வெளிப்படுத்துகிறோம் என்பதும் முக்கியம் என்று புரிந்தது. ஆரம்பத்தில், உணவை எப்படி, ‘ஆர்டர்’ செய்வது, சாப்பிடும் கரண்டியை எப்படி பிடிப்பது என்று ஏகப்பட்ட சந்தேகங்கள் வந்தன. கணவர் தான் பொறுமையுடன் கற்றுக் கொடுத்தார். நான் கற்றதை, நம் ஊரில் இருக்கும் மக்களுக்கு சொல்லிக் கொடுப்பதற்காக, ஆங்கில பயிற்சி வகுப்புகள் எடுக்க ஆரம்பித்தேன். நம் கல்வி முறை, ஆங்கிலத்தை ஒரு பாடமாக சொல்லிக் கொடுக்கிறதே தவிர, வாழ்க்கையில் பயன்படுத்தும் மொழியாக சொல்லித் தரவில்லை. இலக்கணங்களை படிப்பதிலும், பேசும்போதும் இலக்கணப்படி சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதிலுமே பலரும் சோர்ந்து விடுகின்றனர். ஏட்டுக் கல்விக்கும், நடைமுறை வாழ்க்கைக்கும் இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப நினைத்து, அதையே என் காணொளிகளாக மாற்ற நினைத்தேன். தினசரி நாம் பயன்படுத்தும் வார்த்தைகளை தேர்வு செய்து, எப்படி உச்சரிக்க வேண்டும் என்று விளக்கியும், அதன்பின் பழக்க வழக்கங்கள், நடத்தைகள் சார்ந்த காணொளிகளையும் சமூக வலைதளங்களில் பதிவிட ஆரம்பித்தேன். ‘முட்டை பப்ஸ் எப்படி சாப்பிடணும்; பிரியாணியை எப்படி சாப்பிட வேண்டும்’ என்று நான் பதிவிட்ட காணொளிகளை, பலரும் மறுபதிவு செய்ததை பார்க்கும்போது சிரிப்பு வந்தது. ஆங்கிலத்தை, 100 சதவீதம் சரியாக பேச வேண்டும் என்று அவசியம் இல்லை. பயத்தை துாக்கிப் போட்டு, முதலில் பேச ஆரம்பியுங்கள்... அதுவே நல்ல மாற்றம் தான்! ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி