மேலும் செய்திகள்
சொந்தமாக தொழில் செய்து சம்பாதிப்பதில் சந்தோஷம்!
22-Mar-2025
ரூ.10,000 முதலீட்டில்ரூ.3,000 லாபம் கிடைக்கும்!வீட்டிலேயே பிஸ்கட் தயாரித்து விற்பனை செய்யும், வேலுார் மாவட்டம், வேப்பங்குப்பம் பகுதியைச் சேர்ந்த நுார் - சமீனா தம்பதி:சமீனா: நாங்கள் 17 ஆண்டுகளாக பிஸ்கட் தொழில் செய்து வருகிறோம். கணவரின் பெற்றோர் ஈடுபட்டு வந்த தொழில் இது. அதன்பின் எங்கள் கைகளுக்கு வந்தது. திருமணம் ஆன புதிதில், கணவரிடம் இருந்து தான் பிஸ்கட் தயாரிப்பு வேலைகளை கற்றுக் கொண்டேன்.அதன்பின் அவருக்கு உதவிகள் செய்ய ஆரம்பித்து, ஒரு கட்டத்தில் நானும் முழுதாக களத்தில் இறங்கி விட்டேன். ஆரம்பத்தில் சிறிது சிரமமாக தெரிந்தாலும், அதன்பின் அத்துப்படி ஆகிவிட்டது. இப்போது, வீட்டில் பிஸ்கட் தயாரிக்கிற வேலைகளை நான் பார்த்துக் கொள்கிறேன்; கடைகளுக்கு எடுத்துச் சென்று கொடுக்கும் வேலைகளை கணவர் பார்த்துக் கொள்கிறார்.ஆம்பூர், வாணியம்பாடி, திருப்பத்துார் என, வேலுார் சுற்றுவட்டாரக் கடைகளுக்கு கொடுக்கிறோம். நாங்கள் இருவர் மட்டும் தான் உழைக்கிறோம்; பணியாளர்கள் யாரும் இல்லை. எல்லா செலவும் போக மாதம், 25,000 ரூபாய் லாபம் கிடைக்கிறது. இந்த தொழில் தான் எங்களை உயர்த்தியது. இதில் சம்பாதித்து தான், தற்போது சொந்த வீடு கட்டி வருகிறோம். நுார்: இன்று விதவிதமான பிஸ்கட்டுகள் மார்க்கெட்டில் கிடைக்கலாம். ஆனால், டீக்கடைகளில் இப்போதும் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருப்பது, சால்ட் பிஸ்கட் தான். அதைத்தான் நாங்கள் பிரதானமாக செய்கிறோம். குருவராஜபாளையம் என்ற இடத்தில், திங்கட்கிழமை சந்தையில் நாங்கள் கடை போடுவோம்.எங்கள் கடையை எதிர்பார்த்து, சந்தைக்கு வரும் பலர் எங்களிடம் சால்ட் பிஸ்கட்டும், வெண்ணெய் பிஸ்கட்டும் வாங்கிச் செல்வர். ஒரு முறை பிஸ்கட் தயாரிக்க, 10,000 ரூபாய் முதலீடு செய்தால், 3,000 ரூபாய் லாபம் கிடைக்கும்.நாங்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறை பிஸ்கட் தயாரிப்பதால் பிரெஷ்ஷாக இருக்கும். அதனாலேயே எங்கள் வாடிக்கையாளர்கள் நம்பி வாங்குவர். நாங்கள், சால்ட் பிஸ்கட், வெண்ணெய் பிஸ்கட், கேழ்வரகு பிஸ்கட், பாதாம் பிஸ்கட், முந்திரி பிஸ்கட், கிரீம் பிஸ்கட், சாக்லேட் பிளேவர் பிஸ்கட் என, ஏழு வகை பிஸ்கட்டுகள் தயாரிக்கிறோம். எல்லா வெரைட்டிகளுமே மிகப்பெரிய 'ஹிட்!' எங்கள் பிஸ்கட் ருசிக்கு காரணம், ஒரே பதத்தில் முழுமையாக வேக வைப்போம்; அந்தப் பதம், மண்ணால் ஆன அடுமனையில் தான் கிடைக்கும். பிஸ்கட்டை அளவுக்கு ஏற்ற மாதிரி கையால் தான் உருவாக்குறோம்; மிஷின் எதுவும் வாங்கவில்லை.தொடர்புக்கு: 90806 02470அவர்களுக்கு உதவகடவுள் எனக்குஉத்தரவிட்டுள்ளார்!
திருநங்கையருக்கு கல்வியுடன், வேலையும் தரும், தமிழக தனியார் கல்லுாரிகள் நிர்வாகத்தின் அசோசியேஷன் தலைவர் மற்றும் கோவை கொங்குநாடு கலை, அறிவியல் கல்லுாரியின் செயலர் வாசுகி:உணவு, உடை, இருப்பிடம் தான் ஒவ்வொரு மனிதனுக்கும் அடிப்படை தேவை. ஆனால், என்னை பொறுத்தவரை, கல்வியையும் இதில் இணைத்தே ஆக வேண்டும். அதை கொடுத்து விட்டாலே அடுத்தவங்களையோ, அரசையோ எவரும் எதிர்பார்க்க வேண்டியதில்லை.கடந்த 2019ல் பத்மினி என்பவர் எங்கள் கல்லுாரிக்கு வந்து, 'பிஎச்.டி., பண்ண விரும்புகிறேன். ஆனால், திருநங்கை என்ற ஒரே காரணத்தைக் கூறி, கல்லுாரிகளில் 'சீட்' தர மறுக்கின்றனர். உங்கள் கல்லுாரியிலாவது சேர்த்துக் கொள்வீர்களா?' என்று கேட்டபோது, உருகி விட்டேன்.பத்மினியை கட்டணம் வாங்காமல் படிக்க வைத்தோம். மிகவும் அருமையாக படித்து சாதித்த பத்மினி, இன்று எங்கள் கல்லுாரி தமிழ்த்துறையின் உதவி விரிவுரையாளர்.அத்துடன், 'படிக்கவும், நேர்மையாக உழைக்கவும் ஆசைப்படும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு, எங்கள் கல்லுாரி வாசல் எப்போதும் திறந்தே இருக்கும்; தாராளமாக வரச்சொல்லு பத்மினி' என்றும் ஊக்கப்படுத்தினோம். அதன் விளைவு, சில மூன்றாம் பாலினத்தவர்கள் படிக்கவும், பணிபுரியவும் எங்களுடன் கைகோர்த்திருக்கின்றனர்.இந்த கல்வியாண்டில் மட்டும் இரு உதவிப் பேராசிரியர்கள், ஓர் ஆராய்ச்சி மாணவி, ஓர் ஆய்வக உதவியாளர், நான்கு முதுகலை மற்றும் இளங்கலை மாணவியர் என 10 பேர் எங்களுடன் இருக்கின்றனர். இவர்களுக்கு கட்டணமின்றி கல்வி வழங்குகிறோம்.இவர்களுக்கு அட்மிஷன் கொடுத்தபோது, எதிர்ப்புகள் வந்தன. ஆனால், அதிருப்தியாளர்களை அழைத்து, இவர்களது பிரச்னைகளை விளக்கினேன். விளைவு, இன்று சுமுகமான சூழல் உருவாகி உள்ளது. மாணவ - மாணவியரும் இவர்களை முழுமையாக ஏற்று, அன்பு காட்டி மரியாதை கொடுக்கின்றனர்.மத்திய அரசு இவர்களுக்கு நிறைய திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அவையெல்லாம் நடைமுறைக்கு வர வேண்டும். மத்திய - மாநில அரசுகள் நடத்தும் கூட்டங்களில், இவர்களுக்கான பாதுகாப்பு மற்றும் வாய்ப்புகள் குறித்து தொடர்ந்து நான் பேசி வருகிறேன். அதற்காக ஆரம்பத்தில் என்னையும் விமர்சிக்கத்தான் செய்தனர். ஆனால், அதுகுறித்து நான் கவலைப்படவில்லை; ஒதுங்கி விடவும் இல்லை. அவர்களுக்காக நிற்பதற்கு கடவுள் எனக்கு கொடுத்திருக்கிற உத்தரவாக இதை நினைத்து செயல்படுகிறேன்.
22-Mar-2025