உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / ஆன்மிகமும் கல்வியுமாக வண்ணமயமான வாழ்க்கை!

ஆன்மிகமும் கல்வியுமாக வண்ணமயமான வாழ்க்கை!

சென்னை கே.கே.நகர் இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில், உதவி பேராசிரியையாக பணிபுரிந்து வரும், திருநங்கை சிவஉமையாள்: சிறு வயது முதலே படிப்பில் சுட்டி. பாட்டு, பேச்சு, கவியரங்கம் என எல்லா வற்றிலும் முதல் ரேங்க் வாங்குவேன். அதனால், பள்ளி நிர்வாகம் என்னிடம் கல்வி கட்டணம் வாங்கவில்லை. படிப்பு மட்டுமே நம்மை நல்ல நிலைக்கு கொண்டு செல்லும் என்று நம்பினேன். எனக்கு நினைவு தெரிந்த நாள் முதல், என்னை ஆணாக உணர்ந்ததே இல்லை. என் நடவடிக்கைகளை கவனித்த அம்மா, ஒருகட்டத்தில் தினமும் அடித்தார். இதுபோன்ற சூழல்களில் என்னை போன்ற திருநங்கையர் வீட்டை விட்டு வெளியேறி விடுவர். ஆனால், நான் மட்டும், 'எந்த சூழ்நிலையிலும் வீட்டை விட்டு வெளியேறவே கூடாது ' என்ற முடிவில் இருந்தேன். காரணம், படித்து வேலைக்கு சென்று என் குடும்பத்தை நன்கு கவனித்து கொள்ள வேண்டும் என்று நினைத்து இருந்தேன். குடும்பத்தின் வறுமை சூழல் காரண மாக, கல்லுாரியை தேர்ந்தெடுக்கும்போது கூட, 'கல்வி உதவித் தொகை தரக்கூடிய கல்லுாரியா?' என்பதை ஊர்ஜிதம் செய்தே சேர்ந்தேன். குடும்பத்தின் முதல் பட்டதாரியான நான், முதுகலை முடித்ததும், குடும்ப சூழல் காரண மாக வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் இருந்தாலும், ஆராய்ச்சி கனவு என்னுள் தீயாய் எரிந்து கொண்டு இருந்தது. முதுகலையில் முதல் ரேங்க் வாங்கியதால் , ஊக்கத்தொகை கிடைத் தது; அதனால், என் ஆராய்ச்சி கனவும் நனவானது. சென்னை பல்கலை யில், மனித உடற்கூறாய்வு குறித்த ஆராய்ச்சி படிப்பு படித்தேன். 100க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி கட்டுரைகளுடன், முதல் வகுப்பில் முனைவர் பட்டம் பெற்றேன். இ.எஸ்.ஐ.சி., மருத்துவ கல்லுாரியில் உதவி பேராசிரியையாக பணிபுரியும் வாய்ப்பு கிடைத்தது, என் வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கீகாரம். முழுக்க முழுக்க திறமையின் அடிப்படையில், அகில இந்திய அளவில் மூன்று நாட்கள் நடத்தப்பட்ட பல கட்ட நேர்காணலில் உதவி பேராசிரியை பணிக்கு தேர்ந் தெடுக்கப்பட்டேன். மூன்றாம் பாலினத்தவருக்கான ஒதுக்கீட்டில் இந்த வேலை கிடைத்ததாக பலர் கூறுகின்றனர். ஆனால், இந்த தேர்வில் அப்படி ஒரு இட ஒதுக்கீடே இல்லை என்பது தான் உண்மை. தற்போது அம்மா, அண்ணன், அண்ணி, தம்பி என கூட்டுக் குடும்பத்தில் சந்தோஷமாக வாழ்கிறேன். ஒரு கட்டத்தில் என் நாட்டம், ஆன்மிக சொற்பொழிவு பக்கம் திரும்பியது. இதுவரை, 100க்கும் மேற்பட்ட சொற்பொழிவுகளை நிகழ்த்தி உள்ளேன். ஆன்மிகமும், கல்வியுமாக என் வாழ்க்கை இப்போது வண்ண மயமாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி