மேலும் செய்திகள்
‘எந்த தொழிலும் பாலின பாகுபாடு இருக்க கூடாது!’
30-Oct-2026
தகவல் தொழில்நுட்ப நிறுவன பணியுடன், விவசாயத்திலும் ஈடுபட்டுள்ள திருப்பூர் மாவட்டம், காங்கேயத்தை பூர்வீகமாக கொண்ட சகோதரிகள் நிவேதிதா, சவிதா: * நிவேதிதா: என் பெற்றோர், 20 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த தோட்டம் தான் அவர்களது உலகம். தோட்டம் அவர்களுக்கு கொடுக்கும் நிம்மதி, சிறு வயதில் எங்களுக்கு புரியவில்லை; இப்போது தான் புரிகிறது. நாங்கள் இருவரும் இன்ஜினியரிங் முடித்து விட்டு, சென்னையில் வேலைக்கு சென்றோம். ஆரம்பத்தில் ஆச்சரியமாக இருந்த சென்னை வாழ்க்கை, நாளடைவில் ஒரு வெறுமையை கொடுக்க ஆரம்பித்தது. ஊருக்கு எப்போது செல்வோம் என்று ஏங்க ஆரம்பித்தோம். அந்தநேரம் கொரோனா ஊரடங்கால், வீட்டில் இருந்தபடியே வேலை செய்யும் வாய்ப்பு வந்ததால், சொந்த ஊருக்கே வந்து விட்டோம். வீட்டிலேயே இருந்ததால், கிடைக்கும் நேரத்தில் பெற்றோருடன் சேர்ந்து, சின்ன சின்ன விவசாய வேலைகள் பார்க்க ஆரம்பித்தோம். நாங்கள் இருவருமே பெண்கள். அதனால், எங்கள் அப்பாவிற்கு பின் இந்த நிலம் என்ன ஆகும் என்பது தான் பலரின் கேள்வியாக இருந்தது. நாங்கள் களத்தில் இறங்கி விவசாய வேலை பார்ப்பதை சிலரால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. இப்போது எல்லா வேலைகளையும் சர்வ சாதாரணமாக செய்கிறோம். * சவிதா: எங்களிடம் மூன்று நாட்டு மாடுகளும், ஒரு ஜெர்சி பசுவும் இருக்கின்றன. அதிகாலை 4:00 மணிக்கு எழுந்து பால் கறப்பது, தோட்டத்திற்கு தண்ணீர் பாய்ச்சுவது, காய்கறி பறிப்பது என, காலை 9:00 மணி வரை விவசாய வேலைகள் செய்வோம். அதன்பின், 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை தகவல் தொழில்நுட்ப வேலைகள் பார்ப்போம். தொடர்ந்து வேலை பார்த்தாலும், மன அழுத்தம் இல்லாமல் இருக்கிறோம். சிறு வயதில் பார்த்து வளர்ந்த விஷயங்களை, இப்போது நினைவுபடுத்துற மாதிரியான காணொளிகள் எடுத்து, சமூக வலைதளங்களில், ‘வில்லேஜ் விவசாயம்’ என்ற, ‘சேனல்’ பெயரில் பதிவிட ஆரம்பித்தேன். எங்களின் வெங்காய விதைப்பு காணொளியை பார்த்து விட்டு பலரும், ‘வெங்காய விதை வேண்டும்’ என்று கேட்டிருந்தனர். அதனால் எங்கள், ‘சேனல்’ பெயரிலேயே ஒரு நிறுவனம் ஆரம்பித்து, ‘ஆன்லைன்’ வாயிலாக வெங்காய விதைகள் விற்பனை செய்தோம். எதிர்காலத்தில் விவசாயத்தில் முழுதாக இறங்கும் திட்டமும் இருக்கிறது. அப்போது, எங்களின் உற்பத்தி பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்துவோம். இங்குள்ள ஒவ்வொரு செடிக்கும் உயிர் இருக்கிறது. அதை வளர்த்து காப்பாற்றும் கடமை எங்களுக்கு இருக்கிறது. விவசாயம் வியாபாரம் இல்லை; அது நம் வாழ்வாதாரம்!
30-Oct-2026