உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / செடி வளர்க்க மனம் இருந்தால் மட்டும் போதும்!

செடி வளர்க்க மனம் இருந்தால் மட்டும் போதும்!

சென்னை, பட்டினப்பாக்கம் ஏரியாவில் நடைபாதையில் கருவாட்டுக் கடை நடத்தி வரும், 67 வயது மூதாட்டி ரமணி:எங்களுடையது மீனவ குடும்பம். கடல் எனக்கு இன்னொரு அம்மா; ஆனால், அவளுடைய கோபத்தை சுனாமி வந்தபோது பார்த்தேன். கண் முன்னாடியே வீடு, பொருட்களெல்லாம் இழந்து, தெருவில் நின்றோம்.நானும், கணவரும் கலப்பு திருமணம் செய்தவங்க. எங்களுக்கு நான்கு பிள்ளைகள். கணவர், துறைமுகத்தில் கூலி வேலை பார்த்து வந்தார்; நான் சாப்பாட்டு கடை நடத்தி வந்தேன். பிள்ளைகளை வளர்த்து திருமணம் செய்து வைத்தோம். வாழ்க்கை நன்றாக சென்று கொண்டிருந்தது. யாரு கண்ணு பட்டதோ தெரியவில்லை. திடீர் என அவர் இறந்து விட்டார். அவருக்குப் பின் மூத்த மகன், குடும்பப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். சில ஆண்டுகளில், அவனுக்கும் உடல்நிலை சரியில்லாமல், அவனையும் பறிகொடுத்தேன்.அதில் இருந்து மீண்டு வருவதற்குள், என் மகளுக்கும் நோய் வந்து தவறி விட்டாள். அடுத்தடுத்து இழப்புகள் ஒருபக்கம், பேரனை ஆளாக்குற பொறுப்பு இன்னொரு பக்கம் என, 48 வயதில் வாழ்க்கை மீண்டும் முதலில் இருந்து ஆரம்பித்தது.தினமும், 18 மணி நேரம் வேலை செய்து, பேரனை வளர்த்து ஆளாக்கி திருமணம் செய்து வைத்தேன். 50 வயதிற்குப் பின், 5,000 ரூபாய் முதலீட்டில் மீன் கடை ஆரம்பித்தேன். கொரோனா ஊரடங்கில் மீன் வாங்குவதும், விற்பதும் மிகவும் சிரமமாக இருந்தது. 'நீ உழைத்தது போதும்; நான் குடும்பத்தை பார்த்துக் கொள்கிறேன்' என்று பேரன் கூறினான்.ஆனால், உழைக்காமல் சாப்பிட முடியாதுன்னு கருவாட்டுக் கடை ஆரம்பித்தேன். என்னிடம், 10 வகையான கருவாடுகள் கிடைக்கும். வாடிக்கையாளர்கள் கேட்கும் ரகங்களிலும், கருவாடுகளை வாங்கிக் கொடுப்பேன். ஒருநாள், 5,000 ரூபாய்க்கும் விற்கும்; ஒருநாள், 500 ரூபாய்க்கும் விற்கும்.எவ்வளவு கிடைத்தாலும், மனதுக்கு பிடித்ததை சமைத்து சாப்பிட்டு சந்தோஷமாக இருப்பேன். 12 வயதில் உழைக்க ஆரம்பித்தேன். இப்போது, 67 வயது ஆகிறது. சாகும் வரைக்கும் உழைத்தே வாழ்வேன்.கடந்த ஏழு ஆண்டு களாக நிறைய செடிகள் வளர்க்கிறேன். அவை வளர்ந்து துளிர்க்கும்போது, வாழ்க்கையில் இருந்த வெறுமை தொலைந்தது மாதிரி இருந்தது. அதனால், கிடைக்கிற லாபத்தில் செடிகள் வாங்கி வளர்க்க ஆரம்பித்தேன்.நான் வளர்க்கும் செடிகள் பூப்பூத்து, காய் காய்த்தால் உலகமே என் கைக்குள் வந்தது போன்று இருக்கும். கணவரை, பிள்ளைகளை பறிகொடுத்த எனக்கு, இந்த செடிகள் தான் வாழ்வதற்கான நம்பிக்கையை கொடுக்கிறது.செடி வளர்க்க பெரிய வீடோ, இடமோ வேண்டும் என இல்லை; மனம் இருந்தால் போதும். ஒரு செடியாவது வளர்த்து பாருங்கள்... அது ஆயுளுக்கும் சந்தோஷம் தரும்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை