உள்ளூர் செய்திகள்

/ தினம் தினம் / சொல்கிறார்கள் / வாழை இலை பரோட்டா தான் எங்கள் கடையில் பிரபலம்!

வாழை இலை பரோட்டா தான் எங்கள் கடையில் பிரபலம்!

தேனி மாவட்டம், பெரியகுளம் அம்பேத்கர் நகரில் இயங்கும், 'தாஜ் ஹோட்டல்' என்ற பரோட்டா கடையின் உரிமையாளர் முஸ்தபா: எங்கள் தாத்தா காலத்தில் இருந்து, சாப்பாடு கடை தான் குடும்ப தொழில். தாத்தா ஒரு குடிசையில் கடையை ஆரம்பித்த போது, 'தாஜ் ஹோட்டல்' என்று பிரமாதமாக பெயர் வைத்தார். இடம் சிறிதாக இருந்தாலும், உணவு சுவையாக இருந்ததால் நல்ல வரவேற்பு கிடைத்தது. அவரை தொடர்ந்து, அப்பா கடையை கொஞ்சம் பெரிதாக அமைத்து, உணவு வகைகளையும் அதிகரித்தார். எனக்கு திருமணம் ஆனதும், இரவு நேரம் மட்டும் கடை போடலாம் என்ற முடிவை எடுத்தேன். ஏனெனில், பகலில் ஹோட்டல் நடத்த பலர் இருக்கின்றனர். அதனால், இரவு வேலைக்கு செல்வோர், பஸ் மற்றும் லாரி டிரைவர்களுக்கு எல்லாம், இரவு முழுக்க உணவு கிடைக்கும் விதமாக கடையை நடத்தலாம் என்று தோன்றியது. பகலில் தேவையான ஓய்வும், குடும்பத்துடன் இருக்க நேரமும் கிடைக்கும். எனக்கு தொழிலில் உறுதுணையாக இருப்பது மனைவி. ஆரம்பத்தில் பெரிதாக லாபம் கிடைக்கவில்லை. ஹோட்டலை மூடி விட்டு, வேறு வேலை பார்க்கலாம் என்று யோசித்தேன். ஆனால், ஒரு நாள் கடைக்கு விடுமுறை விட்டாலும் மறு நாள் வந்து, 'நேற்று கடைக்கு வந்தோம்... இல்லை என்றதும் திரும்பி சென்று விட்டோம்...' என்று வாடிக்கையாளர்கள் கூறினர். அதற்கு காரணம், எங் கள் ஹோட்டல் சுவையும், தரமும் தான். நமக்கு லாபம் இல்லை என்றாலும் பரவாயில்லை... வாடிக்கையாளரை பசியில் விடக்கூடாது. என்றாவது ஒருநாள் நிச்சயமாக நாம் முன்னேறுவோம் என காத்திருந்தோம். எங்கள் நம்பிக்கை வீண் போகவில்லை. தொழிலில் சிறிது சிறிதாக முன்னேற்றம் ஏற்பட்டது. எங்கள் கடையில் பன் பரோட்டா, பொரிச்ச பரோட்டா, சிக்கன் பரோட்டா, வீச்சு பரோட்டா, ஊத்தப்பம், வடகறி, இட்லி, சிக்கன் கிரேவி, மட்டன் கிரேவி என, பலவித உணவு வகைகள் இருந்தாலும், வாழை இலை பரோட்டா தான் மிகவும் பிரபலம். கடையில் அதிகமாக வியாபாரம் ஆவதும் அதுதான். வாழை இலையில் பரோட்டாக்களை அடுக்கி, ஒவ்வொரு பரோட்டாவுக்கு நடுவிலும் சிக்கன் கிரேவியை ஊற்றி, இலையை கட்டி, 10 நிமிடம் சூடான தோசைக்கல்லில் வைத்து எடுத்தால், இலை வாசனையுடன் வாழை இலை பரோட்டா தயார். என்ன தான் வேலைக்கு ஆட்கள் இருந்தாலும், பரோட்டா போடுவது, பார்சல் மடிப்பது, நானும், என் மனைவியும் தான். விற்பனை ஆகாத உணவை, நடைபாதையில் வசிக்கிற குடும்பங்கள், ஆதரவற்றவர்களிடம் கொடுத்து விடுவோம். வியாபாரம் மட்டுமில்லாமல், வாழ்க்கையும் நன்றாக போகிறது!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

KOVAIKARAN
அக் 15, 2025 07:44

தேனி மாவட்டம், பெரியகுளம் அம்பேத்கர் நகரில் இயங்கும், தாஜ் ஹோட்டல் என்ற பரோட்டா கடையின் உரிமையாளர் முஸ்தபா அவர்களுக்கு வாழ்த்துக்கள். உங்கள் தொழிலில் நேர்மையையும், கண்ணியத்தையும் கடைப்பிடியுங்கள். அசைவ உணவுகளில், கலப்படம் செய்யாமல் நல்ல தரத்துடனும், சுவையுடனும் உணவு தயார் செய்து உங்களது வாடிக்கையாளர்களின் நல்ல சுகாதாரத்தையும் உறுதிசெய்ய பணி புரியுங்கள். உங்களது வியாபாரம் மேலும் வளர, மீண்டும் வாழ்த்துக்கள். இன்ஷா அல்லா.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை