மேலும் செய்திகள்
சமுதாயத்தையே தலை நிமிர செய்த பிஎச்.டி., பெண்
06-Jan-2025
திருச்சியில் மகளிர் மட்டுமே நடத்தும், 'ஒன்லி பிரியாணி' கடையின் நிறுவனர் வித்யா பாலாஜி: திருச்சியில் எங்களோட, 'ஒன்லி பிரியாணி' கடையை ஆரம்பித்து, 11 ஆண்டுகள் ஆகின்றன.வீட்டுப் பக்குவத்தில் பிரியாணி மணக்குற எங்கள் கடையின் இன்னொரு ஸ்பெஷல், இங்கு பெண்கள் மட்டுமே வேலை பார்க்கின்றனர் என்பது தான்!நான் பிறந்து, வளர்ந்தது எல்லாம் கோவை தான்; 18 வயதிலேயே திருமணம் ஆகி, திருச்சிக்கு வந்தேன். கணவர் சொந்தமாக தொழில் செய்து வருகிறார். நான் எம்.ஏ., சோஷியாலஜி முடிச்சிட்டு, வீட்டிலேயே டியூஷன், புடவை பிசினஸ் எல்லாம் பண்ணிப் பார்த்தேன்; அதன் பின்தான், பிரியாணி தயாரித்து விற்பனை செய்யலாம் என்று முடிவு எடுத்தேன்.பிரியாணி கடையை ஆரம்பித்தபோது, பெண்களை மட்டுமே வேலைக்கு எடுக்க வேண்டும் என்று முடிவு செய்து, ஐந்து பேரை அமர்த்தினேன். தற்போது, 10 பெண்களுக்கு மேல் வேலை செய்கின்றனர். ஏன் பெண்களை மட்டும் வேலைக்கு எடுத்தேன் எனில், ஆண்கள் எங்கு வேண்டுமானாலும் சென்று, வேலை தேடிக் கொள்வர். பெண்களுக்கு அது கஷ்டம். சமையல் சம்பந்தப்பட்ட வேலை என்பதால், அவர்களுக்கு புதிதாகவும் இருக்காது. தொழில் துவங்கிய புதிதில் நிறைய சவால்கள் இருந்தன. குடும்பத்தினர் ஆதரவால் அனைத்தையும் சமாளித்தேன். மதியம் 12:00 முதல் மாலை 4:00 மணி வரைக்கும் தான் கடை இருக்கும். காலை 9:00 மணிக்கு அனைவரும் வேலைக்கு வந்துட்டு, 5:00 மணிக்கு கிளம்பி விடுவர். இப்படி 9:00 -- 5:00 வேலைன்னு இருந்தால் தான், என் ஊழியர்களால் வீட்டையும் சமாளிக்க முடியும். இப்போது அவர்கள், தங்களுக்குத் தன்னம்பிக்கையையும், குடும்பத்துக்கு வருமானத்தையும் சம்பாதித்து தருகின்றனர். எங்கள் கடை மெனுவை சொன்னாலே உங்களுக்கு மூக்கை துளைச்சிடும்... மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, கொத்துக்கறி முட்டை பிரை, முட்டை பணியாரம், ஈரல் முட்டை பிரை, மூளை முட்டை பிரை... இதெல்லாம் எங்கள் கடை ஸ்பெஷல் அயிட்டங்கள். வீட்டு சாப்பாடு மாதிரி, திகட்டாமல் இருக்கும். பெரிய பெரிய ஆர்டர்களும் எடுத்து செய்கிறோம். திருச்சிக்கு வந்தால் கடைக்கு வாங்க!
06-Jan-2025